Home ஆன்மிகம் ஐயெட்டு ஆண்டுகழிந்து ஆளவந்த அத்திவரதா… இன்னுமொரு தரிசனம் எமக்கருளும்!

ஐயெட்டு ஆண்டுகழிந்து ஆளவந்த அத்திவரதா… இன்னுமொரு தரிசனம் எமக்கருளும்!

அத்தி வரதர் வைபவம்

நான்முகன் ஓமத்தீயில் நல்லதோர் நிமித்தம் கொண்டு
வான்முகம் வந்ததேவா! கவின்கச்சி அத்திவரதா!பூண்முகம் உதயகதிரின் பொன்வண்ணம் தோய்ந்திருக்க
தேன்மிகும் நீங்காகருணை நேத்திரம் வழிய வந்தாய்!! – 01

அந்நியர் படையெடுப்போ? ஆகாதார் துயர்கொடுப்போ?
முந்தையர்  நற்குலத்தோர் மூடிநீர் குளத்திலிட்டார்
பிந்தையர்  மேன்மைகாண  சொப்பனம் பேசிநீரும்
எந்தையர் எட்டுஐந்து ஆண்டுகள் கழியவந்தீர்!! – 02

மிகநெடும் காலம்நீருள் கிடந்து,நீர் தவமிருந்தீர்!அகப்படு மீனைப்போல உரியநாள் தரையெழுந்தீர் !!சகித்திடு நாற்றப்பாசி கூழ்ச்சேறு துடைத்தெடுக்க
மகிழ்த்திடு சுகந்தவீச்சு மேனியில் வீசவந்தீர்!! – 03

மெத்தையாய் ஆதிசேஷன் பாற்கடல் ஆனானுனக்கு,
அத்தி,நீர்  யெழும்பாவண்ணம் கல்நாகம் மேனியழுத்தும்
சத்தியத் தேவா!அனந்த சரஸிலே மூழ்குவரதா!
வித்தகர் தாமேயறிவர் நியாயர்நீர் நியாயர்க்கென்று! – 04

தாங்கிய அரவம்தன்னை தாங்கிய அத்திவரதா!ஏங்கிய யானைக்காக  இறங்கிய ஆதிமூலா!!வாங்கிய வரங்களாலே  நீங்கிய சாபம்கோடி
‌பாங்குடன் யாமும்வந்தோம் நின்நாமப் பெருமைபாடி!! – 05

மண்டலக் கணக்குநாளில் பூநிலம் அருளவந்தோய்!
முந்தைநாள் சயனக்கோலம் பிந்தைநாள் நின்றகோலம்!!
சொந்தம்போல் மனிதக்கூட்டம் சிந்தையுள் விந்தைபேசி‌
எந்தையே உன்னைக்காண அலைகளாய் முந்திமோதும். – 06

கண்ணியர் வேதநாவர்  கைங்கர்ய சேவைதன்னால்
மின்னிடும் அங்கஅவயம்  தூய்மைநில் தைலக்காப்பு!
மன்னுயர் வண்ணப்பட்டு  வகைமண மலர்களேற்று
மண்ணவர் ஓங்கிவாழ அருளுமுன் கமலப்பாதம்!  – 07

மிலேச்சர்கள் மருளும்வண்ணம் நாத்திகர் வியக்கும்வண்ணம்
களேபரர் கலங்கும்வண்ணம் களிம்புகள் கரையும்வண்ணம்
சிலாதாரு ரூபம்கொண்டு சிறுமதி யாளர்திருந்த
பளீரென அறைந்தணைக்கும் பரிவுடை கனிவுத்திரளே!!- 08

யுகந்தொறும் தவமியற்றி யுழல்துயர் வடியக்கண்டோம்
அகந்தொறும் வாழுமெந்தாய்! எம்மதம் ஹிந்துதர்மம்
உகந்ததாய் உயரியவொன்றாய் உலகினர் ஏற்றிருக்க
புகல்மதம் கேலிசெய்தால் புரியச் செய்! புதையச்செய்!! – 09

புரிந்திட்ட தென்றபோதும் சனாதன தர்மம்சீண்டி
எரிந்திடும் வார்த்தைபேசி  பழிப்பவர் நாளும்நூறு!உரியதோர் நாழிபார்த்து ஆத்திகத் தலைநிமிர
அரியதோர்  செயலைசெய்வீர் அவர்,விஷ வேரறுத்து!! – 10

நீருமோர் அவதாரம்தான்! கலிதனின் மாமருந்தாம்!!
தீருமோர் பிறவிபந்தம்! சிதையுமே வினையும்பகையும்
கூறும்சீர் நாமம்ஆதி அத்திவர  தாவென்றிட்டால்
சீறிப்பாய்  அம்புபோல செல்லுமே யெல்லாத்தீங்கும். – 11

நினைக்கவும் வரவும்செய்து நேர்காணல் நடத்தி விட்டாய்
பிணைக்கவும் உன்னுளென்னை நின்னருள் நினைத்திருக்கும்
தணிக்கையை முடிக்கவந்தோய்,  தரிசனம் முடியும்நேரம்!
இன்னுமோர் வாய்ப்புநல்கேன் மறுமுறை அழைத்துயெம்மை!! 12

கவிதை ஆக்கம்: கண்ணன் திருமலை ஐயங்கார்
(அஜினி, நாக்பூர்! மஹாராஷ்டிரா – 440 003)

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version