October 16, 2021, 2:59 pm
More

  ARTICLE - SECTIONS

  சிறுகதை: மாம்பழத்து வண்டு !

  எத்தனைபேர் நட்ட குழி எத்தனை பேர் தொட்ட முலை எத்தனை பேர் பற்றி யிழுத்த யிதழ் – நித்ததித்தம் பொய்யடா

  lady

  “மாம்பழத்து வண்டு”
  – மீ.விசுவநாதன் –

  நான்தான் மாம்பழத்து வண்டு. நான் ஒரு நல்ல கதைசொல்லி. இன்று உங்களுக்கு ஒரு கதை சொல்லப் போறேன். அது நான் பார்த்து, கேட்டுத் தெரிந்து கொண்ட சம்பவங்களில் ஒன்று. இதைப் படிக்கும் உங்களுக்குள்ளும் இது போன்ற குணம் இருக்கத்தான் செய்யும். வெளியில் சொல்ல வெட்கப் படலாம். நான் மட்டும் என்ன வாழறதாம்? ஒட்டு மாம்பழ வண்டுதானே. ஒட்டு மாமர மாம்பூத்தேன் நல்ல சுவையாக இருக்கும் என்று நினைத்து அதைக் குடிக்கப் போனேன். அதிலேயே மயங்கிக் கிடந்தேன். பூ மூடி கொண்டது. பிஞ்சு, காய், பழம் என்று இப்ப மாம்பழத்துள் உள்ள வண்டானேன். இந்தக் கதையின் நாயகன் என்னை மாம்பழத்தில் இருந்து வெளியில் தூக்கி வீசினார். அப்படியே பறந்து திரிகின்றேன்.

  கதைக்குப் போவோம் வாருங்கள்.

  அழகிய ஊர். சிறியதும் பெரியதுமாக அருகருகே அமைந்த வீடுகளைக் கொண்ட தெருக்கள். ஊருக்கு வடக்கே ஜிலு ஜிலு என்று எப்பொழுதும் ஓடிக் கொண்டிருக்கும் தாமிரபரணி ஆறு. அதன் கரையில்தான் என்னைப் பெற்ற தாய் மாமரங்களும், உயரமான, தடிமனான மருத மரங்களும், வண்ண வண்ணப் பூச்செடிகளும் நிறைந்து இருக்கும். அந்த ஆற்றின் தெளிந்த நீரும், நீருக்குள் ஆழத்தில் நீந்திக் கொண்டிருக்கும் மீன்களும், அதை ஒரு மின் கம்பியில் அமர்ந்து கவனம் சிதறாமல் பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு பொம்மை மீன்கொத்திப் பறவை சடாரென நீருள் பாய்ந்து ஒரு பெரிய மீனைக் கொத்திக் கொண்டு செல்லும் லாகவமும் ஒவ்வொரு நாளும் பார்த்துப் பார்த்து ரசித்துக் கொண்டிருப்பதே எனக்கு மிகவும் பிடிக்கும். அக்கரையில் உள்ள சிவன்கோவில் மணிஓசை காற்றில் வந்து என்மீது மோதும் சுகமே சுகம். கிராமத்துச் சிறுசுகளும், பெருசுகளும் இந்த ஆற்றில் நீந்திக் குளித்து மகிழ்வதை இப்பொழுதும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்.

  இதோ இதோ பாருங்கள் காலை மணி ஏழு. குளித்துவிட்டு திருநீறு இட்டுக் கொண்டு, சூரியனைப் பார்த்து இரண்டு கைகளாலும் தொழுது விட்டு, படித்துறை ஏறி வருகிறாரே இவர்தான் நளபாக சுப்பா என்ற சுப்பிரமணியன். பிரமாதமான சமையல்காரர். ஒரு நாற்பது வயது இருக்கலாம். கல்யாணம் செய்து கொள்ளவில்லை. அவரது அப்பா, அம்மாவைத் தாமிரபரணி நீரில் சாம்பலாய்க் கரைத்து ஒரு பத்து வருடங்கள்தான் ஓடி இருக்கும். நல்ல திடகாத்திரமான உடம்பு. பெருமாள் கோவில் வடக்கு மாடத்தெருவில் ஒரு வீட்டில் தனியாக இருக்கிறார். எங்கே இருக்கிறார், அனேகமாக ஊர் சுற்றிதான். திருநெல்வேலி ஜில்லா முழுக்க அவரது சமையல் சுவைக்கு அடிமைதான் என்றால் பாருங்களேன். சிறிய பெரிய வீட்டுக் கல்யாணங்களுக்கு அவரின் சமையல்தான் இருக்கும். பணத்தில் பேராசை கிடையாது. வேலையில் மன்னன். இரண்டு கைகளாலும் ஜாங்கிரி சுற்றும் வேகமும், அழகும் அவரைத்தவிர யாருக்குமே வராது. சபை மணக்க சமையல் செய்து வரும் பணத்தில் வாய்மணக்க வெற்றிலையும், புகையிலையும் போடுவார். கொஞ்சம் “நீராகாரமும்” போடுவது அவருக்குப் பழக்கம். சமையலுக்குப் போகும் போது அவரது சகாக்களுடன் நடந்துதான் “பஸ்” ஏறிப் போவார். வேலை முடிந்து இரவில் வரும் போது அவர் மாத்திரம் தெருவில் தள்ளாடிக் கொண்டே வீடு வந்து சேருவார். அவருக்கு வீடுவரை உறவாக வருவது சக தொழிலாளி சாட்டுப்பத்து சங்கரன்.

  நளபாகச் சுப்பாவின் வீட்டிற்கு நாலு வீடு தள்ளித்தான் இருக்கிறது சாட்டுப்பத்து சங்கரன் வீடு. கொஞ்சம் நிலபுலன் உண்டு. “ஒக்காந்து சாப்பிடலாம்” என்ற வசதி உண்டு. சங்கரனுக்கு படிப்பு வரவில்லை. நளபாகச் சுப்பாவுடன் எடுபிடி வேலைக்குப் போகிறார். சங்கரனை விட “சுப்பா” ஆறுவயது பெரியவர்.

  சங்கரனுக்கு அவருடைய உறவில் கல்யாணம் செய்து வைத்தாள் அவரது அம்மா. அந்தப் பெண்ணின் பெயர் ராஜாத்தி என்ற ராஜம். பார்க்க மிக அழகாக இருப்பாள். கொஞ்சம் சொத்து இருக்கிறதே என்று அவளது பெற்றோர்கள் சங்கரனுக்குக் கல்யாணம் பண்ணி வைத்தார்கள். சங்கரனுடன் எப்பொழுதும் அன்போடுதான் இருந்தாள் ராஜாத்தி. காலையில் ஆத்தங்கரைக்கு இருவரும் சேர்ந்தேதான் குளிக்கப் போவார்கள். மண்டபப் படித்துறையில்தான் குளிப்பார்கள். சங்கரனுக்கு வெட்கமாக இருக்கும். ராஜம்தான் “இப்படி வாங்கோ என்று தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டு குளிப்பாள்”. அவன் நெளிவான். பாறையில் நின்று கொண்டு தண்ணீரில் பாயத் தயாராக இருக்கும் வாண்டுகள் “டேய்…அங்க பாருடா…” என்று கூச்சல் போட்டபடி நீரில் பாய்ந்து சாகசம் செய்வார்கள். “சின்னதெல்லாம் பாக்கறது” என்று சங்கரன் சொல்லிக் கொண்டே படியேறி தலையைத் துடைத்துக் கொள்வான். ராஜம் நன்றாக முங்கிக் குளிப்பாள். நீந்திக் கொண்டே பக்கத்தில் வரும் சின்னதுகளை “இங்க வாடா…என்று மார்போடு அணைத்துக் கொள்வாள்.” வாண்டுகள் வெட்கப்பட்டு அவளிடம் இருந்து திமிறிக்கொண்டு நீரில் தாவி ஓடுவதைப் பார்த்து ரசித்துக் கொண்டிருப்பான் சங்கரன்.

  கோவில் திருவிழாக்களில் சாமி ஊர்வலம் வரும். வீட்டு வாசலில் கையில் பழத்தட்டுடன் சங்கரனும், ராஜமும் சாமிதரிசனம் செய்வார்கள். பிரசாதத்தைப் பெற்றுக் கொண்ட இருவரும் சங்கரனின் தாயாரிடம் கொடுப்பார்கள். கண்களின் ஒற்றிக் கொண்டு அம்மாவுடன் சாமியைப் பிரதட்சிணம் செய்து வரும் பொழுது,” மாமா…சௌக்கியமா” என்று தன் வீட்டு வாசலில் தரிசனத்திற்கு நின்று கொண்டிருக்கும் “நளபாகச் சுப்பா” விடம் ராஜம் விசாரிப்பாள். “சௌக்கியம்” கண்ணு என்று தனது இடது கண்ணைச் சிமிட்டியபடி நளபாகம் சொன்னதை ராஜம் கேட்பாளோ இல்லையோ அந்தப் பெருமாளுக்கு அது கேட்டு விடும். “எச்சரிக்கே” என்று குரல் கொடுக்க, பெருமாள் அடுத்த வீட்டு வாசலுக்குச் சென்று விடுவார்.

  சங்கரன் வீட்டுத் திண்ணையில் வேலை இல்லாத நாட்களில், மூன்று நான்கு பேர்கள் அமர்ந்து ஊர்வம்பு பேசிக் கொண்டிருப்பார்கள். அநேகமாக சமையல் வேலை செய்பவர்கள்தான் இருப்பார்கள். சில நேரங்களில் பக்கத்து வீட்டு குசும்பு கோபாலும் இருப்பதுண்டு. நடுநாயகமாக நளபாக சுப்பாதான் இருப்பார். அவருக்கு சங்கரனே வெற்றிலையில் சுண்ணாம்பு தடவி புகையிலையைப் புதைத்துத் தருவார். வாயில் எச்சில் ஒழுக அதையும் வாங்கி கடைவாயில் அடைத்துக் கொண்டு,” ராஜம்..வாய் கொப்பளிக்கக் கொஞ்சம் தண்ணி கொண்டுவா” என்பார் நளபாகம். தண்ணீரை வாயில் விட்டுக் கொண்டு வாசல் திண்ணை ஓரம் கொப்பளித்து, தண்ணீர்ச் சொம்பை ராஜத்திடம் கொடுக்கும் பொழுது, அவரது கடைவாய் எச்சில் ஒழுகலைத் தனது புடவைத் தலைப்பால் மென்மையாகத் துடைத்து விடுவாள் ராஜம். குசும்பு கோபால் மேல்துண்டால் வாயைப் பொத்திக் கொண்டு நக்கலாக சங்கரனைப் பார்த்துக் கண்ணடிப்பான். ” மாமா…நீங்க வேணா…உள்ள போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்குங்கோ…நான் இவாகூடப் பேசிண்டிருக்கேன்” என்று சங்கரன் சொல்லுவான்.

  இப்பொழுதெல்லாம் நளபாக சுப்பா பக்கத்து ஊர்ச் சமையலுக்குச் செல்லும் போதெல்லாம் ராஜமும் கூடமாட வேலை செய்யச் செல்கிறாள். அதுவும் வண்டியில்தான் போய் வருவார்கள். அந்த வண்டியைப் பிடித்தபடி சங்கரன் நடந்துதான் செல்கிறான்.

  நளபாக சுப்பாவுக்கு நாளுக்கு நாள் நல்ல வருமானம் கூடிற்று. வந்த பணத்தை அவர் ராஜத்திடமே கொடுத்து விடுகிறார். அவருக்குப் பணத்தேவை அவ்வளவாக இல்லை. அவரது தேவைகளைத்தான் ராஜமே பார்த்துக் கொள்கிறாள்.

  சங்கரனும் அம்மாவும் நடுக்கூடத்தில் படுத்துக் கொண்டிருந்தார்கள். முன்னறையில் நளபாகமும், ராஜமும் இருந்தார்கள். “சங்கரா…நாம வேற ஊருக்குப் போகலாமா?” என்று கேட்டாள் அம்மா. “போலாம்…கொஞ்சம் பொறு” என்றான் சங்கரன்.

  தென்காசியில் ஒரு பண்ணையார் வீட்டுக் கல்யாணம். நளபாகச் சுப்பாதான் சமையல். கல்யாணம் முடிந்து ஒரு பெரிய தாம்பாளத்தில் வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காயுடன் பட்டு வேஷ்டி, பட்டுப் புடவையுடன் ஐம்பதாயிரம் ரூபாயையும் சேர்த்து சன்மானமாக,” இந்தாம்மா…ராஜம்” என்று இடது கண்ணைச் சிமிட்டியபடி தாம்பாளத்தை ராஜத்திடம் நீட்டினார் பண்ணையார். ஒரு கள்ளச் சிரிப்புடன் ராஜமும் அதை வாங்கிக் கொண்டாள். நளபாகம் சுப்பாவுக்கு அதன் சூட்சமம் புரிந்திருந்தது. ஒரு பேச்சுக்காக,” சந்தோஷம்” அண்ணா என்றார். “அடுத்த கல்யாணத்துக்கும் உங்க ராஜம்தான்” சமையல் என்றார் பண்ணையார். பக்கத்தில் நின்று கொண்டிருந்த ராஜத்தின் கணவன் சாட்டுப்பத்து சங்கரன் மனத்துள் சிரித்துக் கொண்டான். அவன் விட்ட வெப்பக் காற்று நளபாகச் சுப்பாமீது பட்டு, பக்கத்தில் இருந்த ராஜத்தையும் தொட்டுச் சென்றது.

  ஒரு பத்து நாட்களுக்குப் பிறகு திருநெல்வேலியில் ஒரு சிவன் கோவிலில் அன்னதானம். ஒரு பெரிய அடுப்பின் மீது வைக்கப்பட்ட மிகப் பெரிய வார்ப்பில் பாயசம் கிளறிக் கொண்டிருந்தார் நளபாகம் சுப்பா. கோவில் முழுக்க நெய்வாசமும், பாயச மணமும் பரவிக் கிடந்தது. நளபாகத்தின் பக்கத்தில் ஏதோ சந்தர்ப்பத்தை எதிர்பார்த்தபடி நின்றிருந்த “ராஜம்” திடீரென நளபாகச் சுப்பாவை அந்தப் பாயச அடுப்பில் தள்ளிவிட்டாள். சுப்பாவின் தலைப்பாகம் விறகு போல அடுப்பில் நுழைந்து கருகத் துவங்கியது. ராஜத்தின் பின்னால் நின்று கொண்டிருந்த சங்கரன் ஒரு ஆவேசம் வந்தவனாக ராஜத்தைப் பிடித்து பாயச வார்ப்பிலே தள்ளிவிட்டான். அந்த இடமெல்லாம் பிணவாடை. இதை கவனித்த மற்ற சமையல் தொழிலாளர்கள் உதவிக்கு ஓடி வந்து சுப்பாவை அடுப்பில் இருந்து இழுத்தனர். விறகு போல கருக்கி கிடந்தார் நளபாகம் சுப்பா. பாயசத்தில் விஷம் கலந்தது போலக் கிடந்தாள் ராஜாத்தி என்கிற ராஜம்.

  சங்கரனை போலீஸ் ஜீப்பில் ஏற்றிச் சென்ற பொழுது, அவன் அங்கே கூடி நின்றவர்களைப் பார்த்துக் கைகளை நீட்டி பட்டினத்தாரின் ஒரு பாடலைப் பெருங்குரலில் பாடிச் சிரித்தான்.

  “எத்தனைபேர் நட்டகுழி எத்தனைபேர் தொட்டமுலை
  எத்தனைபேர் பற்றி யிழுத்தயிதழ் – நித்ததித்தம்
  பொய்யடா பேசும் புவியின்மட மாதரைவிட்
  டுய்யடா வுய்யடா வுய்.”

  சங்கரனின் அம்மாவுக்கு விவரம் சொல்லப்பட்டது. “எம்புள்ள மானஸ்தன்” என்று வீட்டு வாசலில் இருந்து பெருமாள் கோவில் கோபுரத்தைப் பார்த்துத் தன் கன்னத்தில் போட்டுக் கொண்டாள்.

  கதை முடிந்தது. மீண்டும் கதை சொல்ல வருகிறேன் என்று பறந்து வெகுதூரம் போனது மாம்பழத்து வண்டு.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,141FansLike
  366FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,559FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-