― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇலக்கியம்கதைகள்சிறுகதை: விடுதலை…! விடுதலை…!

சிறுகதை: விடுதலை…! விடுதலை…!

- Advertisement -
courtallam monkeys 4

தினமும் நான் அலுவலகத்திலிருந்து வந்ததும் எங்கள் வீட்டுத் தோட்டத்தை ஒரு தடவை சுற்றிப் பார்த்து விடுவது வழக்கம்.

அன்றும் அப்படித்தான்… கொல்லையின் மத்தியில் இருந்த மாமரத்தில் நிறைய பிஞ்சுகள், கொத்துக் கொத்தாய். இந்த ஆண்டு மாம்பழமே வாங்க வேண்டாம் போலிருக்கிறதே! என் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள என் மனைவியையும் உரத்துக் கூப்பிட்டேன்.

“வித்யா! மாமரத்தைப் பார்த்தாயா?”

அடுக்களையிலிருந்து கைகளைப் புடவைத் தலைப்பில் துடைத்த வண்ணம் வந்தாள் வித்யா.

“ஆகா! பார்த்தேனே, நூறு, இருநூறு காயாவது இருக்கும். இதுவாவது போன வருஷம் மாதிரி உதிர்ந்து விடாமல் இருக்க வேண்டும்” என்றாள்.

அப்போதுதான் மரத்தின் கீழே கிடந்த காய்ந்த குச்சிகளைப் பார்த்தேன்.

“அட! இது எங்கேயிருந்து வந்தது? நேற்றுத் தானே வேலைக்காரியை விட்டுப் பெருக்கச் சொன்னேன்.?

அண்ணாந்து பார்த்த போது புரிந்து போயிற்று.

மரத்தில் பறவைக் கூடு ஒன்று பெரிதாய்க் கிளம்பிக் கொண்டிருந்தது.

“இப்பத்தான் ஞாபகம் வருது. ரெண்டு காக்கா இங்க கத்திட்டே இருந்தது. அதுதான் கட்டுது போலிருக்கு” என்றாள் வித்யா.

போன வருடம் காக்கை கூடு ஒன்று மாமரத்தில் கட்டப்பட்டதும், அதிலிருந்த இரண்டு காக்கைகளும் மூன்று குஞ்சுகளைப் போட்டு, ஒன்று கொல்லைப் பக்கமிருந்த பிரேம்குமார் வீட்டு மாடியில் இறந்து கிடந்ததும், பின் அந்த காக்கை குடும்பம் பறந்து போனதும் நினைவுக்கு வந்தன.

ஆனால் கூடு மட்டும் அப்படியே இருந்தது.

அந்த கூட்டைத்தான் இப்போது இந்த இரண்டு காக்கைகளும் புனருத்தாரணம் செய்து கொண்டிருந்தன.

“காய்ந்த இந்த சிறு குச்சிகளை அப்புறப்படுத்தி விட வேண்டும். கிஷோர் வந்தால் காலில் குத்திக் கொள்வான்” என்று ஒரு நிமிஷம் நினைத்தேன். ஆனால் பின் அங்கேயே சுவரோரம் எடுத்துப் போட்டுவிட்டு வந்தேன்.

பாவம். காக்கைகள். எங்கேயிருந்து பொறுக்கி வந்தனவோ? இருக்கட்டும். தேவையானால் எடுத்துக் கொள்ளும். வித்யாவிடமும் சொல்லிவைத்தேன். அவற்றை வேலைக்காரி தூக்கி எறியாமல் பார்த்துக் கொள்ளும்படி.

விளையாட்டு மைதானத்திலிருந்து கையில் பேட்டும் பந்துமாக வந்தான் கிஷோர். நாலாவது படிக்கிறான். அவனைக் கொல்லைப் புறம் அழைத்துச் சென்று காக்கைக் கூட்டைக் காண்பித்தேன்.

“அப்பா! இது போன வருஷம் வந்த அதே காக்கா தானாப்பா?” என்று கேட்டான் குழந்தை.

“எனக்கு என்னடா தெரியும்? அதுவாகவும் இருக்கலாம். வேறாகவும் இருக்கலாம்”.

“அப்ப, வேறே காக்காயா இருந்தா, பழைய காக்காய்க்கு ரெண்ட் கொடுக்குமாப்பா?” என்று கேட்டான் கிஷோர்.

எனக்கு சிரிப்பு வந்தது.

நினைத்துப் பார்த்தேன். என்ன கொடுக்கும்? இரண்டு தவளைகளோ எலியோ கொடுக்குமா?

இதைச் சொன்ன போது கிஷோரும் சிரித்தான். இந்த விஷயத்தை தன் நண்பர்களிடம் எல்லாம் சொல்லப் போவதாகச் சொன்னான்.

அடுத்தடுத்துக் காக்கை கூட்டின் வளர்ச்சியைப் பொறுத்து அவனுக்கு தினமும் நண்பர்களிடம் சொல்ல வேண்டிய விஷயங்கள் அதிகமாயின.

தினமும் மரத்தடியில் குச்சிகள் விழுந்த வண்ணம் இருந்தனவே தவிர, அவற்றைக் காக்கைகள் எடுத்துக் கொள்வதாகத் தெரியவில்லை.

கீழே உதிரும் மாம்பிஞ்சுக்ளைப பொறுக்கும் போது, சில முள் உள்ள குச்சிகள் காலில் குத்துவதாகவும், அவற்றை எல்லாம் அள்ளி எறித்தால் என்னவென்றும் வித்யா என்னிடம் முறையிட்டாள்.

“அதுவும் சரிதான்,” என்றேன்.

அதன்படி தினமும் மரத்தடியைச் சுத்தம் செய்யும் வேலை என் தலையில் விழுந்தது.

ஒரு வழியாகக் காக்கைகள் கூடு கட்டி முடித்தன. வெயில் உக்ரமாக இருந்தது.

காக்கை இனிமேல் தான் முட்டையிடும் போலும். ஏப்ரல் தொடங்கி விட்டது.

“மாங்காய்களைப் பறித்து ஆவக்காய் போடலாமா? இன்னும் சிறிது பெருக்கட்டுமா?” என்று வித்யா அடுத்த வீட்டு சரோஜா மாமியைக் கேட்டுக் கொண்டிருந்தாள்.

கீழே விழுந்த ஒரு மாங்காயை வாங்கிச் சுவைத்துப் பார்த்த மாமி, “இன்னும் பத்து நாள் போகட்டும். கொட்டை முற்றட்டும்,” என்று அறிவுரை கொடுத்தாள்.

அவ்வப்போது கீழே விழும் மாங்காய்கள் உப்புப் பிசிறலாகவும், வெந்தய மாங்காயாகவும் எங்கள் வீட்டிலும், சரோஜா மாமி வீட்டிலும் சமையலில் இரண்டு வேளையும் இடம் பெற்றன.

ஆவக்காய் மாங்காய் பறிக்க அலக்கோடு நான் போன போது காக்கைகள் அலறத் தொடங்கின. ஷிப்டில் வேலை செய்பவை போல் இரண்டும் மாற்றி மாற்றி மரத்தைக் காவல் காத்தன.

என் கையில் அலக்கு இருந்ததால், அருகில் வர முடியாமல் மாடியில் உள்ள ஆன்டெனாவில் போய் அமர்ந்து கொண்டு கத்தித் தீர்த்தன.

ஒரு வழியாக முப்பது காய்கள் போல் பறித்து விட்டு அவற்றின் பிடுங்கல் தாங்காமல் வந்து விட்டேன். சின்னக் காய்கள்தான். தென்னங்குரும்பை அளவில் இருந்தன.

நாளாக ஆக, காக்கைகளின் தொல்லை தாங்க முடியாமல் போனது.

“போன வருஷம் கூட இவ்வளவு இல்லை” என்று வித்யா சொன்ன போது, சரோஜா மாமி முகத்தைச் சுளித்தாளாம்.

“ரொம்ப அழகுதான் போ. நீங்க லீவுக்கு ஊருக்குப் போயிட்டேள். அதனால் உங்களுக்குத் தெரியலை. இதுக்கும் மேலதான் போன வருஷமும் அவஸ்தைப் பட்டோம்,” என்றளாம்.

லட்சக்கணக்காக பணத்தை போட்டு வீடு கட்டிவிட்டு, காக்கையின் அனுமதியோடு தான் கொல்லைப் பக்கம் போக முடிந்தது. மாடியில் போய்த் துணி உலர்த்த முடியவில்லை. தண்ணீர்த் தொட்டியில் நீர் மட்டத்தைப் போய்ப் பார்க்க முடியவில்லை. ‘அக்காடா!’ என்று மாடியில் மோடாவைப் போட்டுக்கொண்டு உட்கார்ந்து புத்தகம் படிக்க முடியவில்லை.

“சர்…சர்…”என்று காதைக் கிழிப்பது போல் இப்படியும் அப்படியுமாகப் பறந்தன காக்கைகள். நாங்கள் அவற்றின் முட்டைகளை எடுத்துப் போய் விடுவோமாம்.

மாடியிலிருந்து எங்களைக் கீழே விரட்டும் வரை அவை ஓய்வதில்லை. நாளடைவில் அவற்றின் தொல்லை தாங்காமல் நாங்கள் மாடிக்குப் போவதையே நிறுத்தி விட்டோம்.

வித்யா மட்டுமல்லாமல், சரோஜா மாமியும் கூட வெயிலில் கருவடாம் போடும் ஆசையைக் கை விடும்படி ஆயிற்று.

கொல்லைப் பக்கம் கிணற்றடியில் பாத்திரங்களைப் போட்டுத் தேய்க்க முடியாமல், கிணற்றின் மேலிருந்து தோய்க்கும் கல்லுக்கும் மீண்டும் கல்லிலிருந்து கிணற்றுச் சுவருக்குமாகப் பறந்து பறந்து வேலைக்காரியை இரண்டில்ஒன்று பார்த்து வந்தன காக்கைகள்.

பின், அவள் முட்டையை எடுத்துச் சென்று விட்டால்? அவள் தலை மேல் இரண்டு தடவை இறக்கையால் அடித்து விட்டதாம். அவளுக்கு ஒரே கோபம். ஒரு வாரம் லீவு போட்டு விட்டாள்.

எங்கள் வீட்டுக் கொல்லை மட்டுமல்லாமல். பின் புறம் உள்ள பிரேம் குமார் வீட்டிலும், சரோஜா மாமி வீட்டிலும் கூட யாரையும் வர விடாமல் துரத்துகிறதாம் காக்கைகள்.

அவர்கள் வேறு அடிக்கடி புகார் செய்த வண்ணம் இருந்தார்கள்.

மாங்காய்கள் பறிக்கப் படாமல் அவ்வப்போது கனிந்து விழத்தொடங்கின. தரையில் விழுந்த வேகத்தில் ‘ச்சத்’தென்று நசுங்கி உபயோகமில்லாமல் போயின.

இவைகூடப் பரவாயில்லை என்பது போல் மரத்தின் கீழும், சுவரின் மேலும் மாடியிலும், தோய்க்கும் கல்லிலும் இன்னும் பார்க்குமிடமெங்கிலும் எலும்புகளும், இறக்கைகளும் கிடக்கத் தொடங்கின. ஓணான், தவளை, எலி, முட்டை ஓடு இன்ன பிற மாமிச அயிட்டங்கள் எங்கள் வீட்டிலும் அண்டை வீடுகளிலும் அடிக்கடி தரிசனம் அளித்ததன.

அவற்றை எடுத்து எறிவதற்கு ‘நான் மாட்டேன், நீ மாட்டேன்’, என்று எனக்கும் வித்யாவுக்கும் சண்டை வந்தது.

சரோஜா மாமிக்கோ கடுங்கோபம். “முதலில் இந்தக் கூட்டைக் கலைத்து விட்டு மறுவேலை பாருங்கள்,” என்று உத்தரவு போட்டுவிட்டாள்.

அவள் கணவனுக்குக் கூட எங்கள் வீட்டுக் காக்கைகள் இப்படித் தொந்தரவு கொடுப்பது பொறுக்க முடியவில்லையாம்.

“பாவம். பிள்ளை பெற்றவள். பத்தியம் சாப்பிடுகிறாள் போலிருக்கு. கணவன் ஆசையாய்க் கொண்டு வந்து கொடுக்கிறான். ஏன் இப்படிக் கரித்துக் கொட்டுகிறீர்கள்?” என்று நான் ஜோக் அடித்த போது, வித்யா என்னை அடிக்க வராத குறையாக முறைத்தாள்.

நாங்கள் உருட்டி வைக்கும் சாதத்தையோ, இட்லியையோ அவைத் திரும்பிக் கூட பார்ப்பதில்லை.

குஞ்சுகள் பொரிந்துவிட்டன போலும். “ஷ்ஷா…ஷா” என்று பிசிர் அடிக்கும் குரல்கள், சிறு சிறு அசைவுகள் கூட கூட்டில் தெரிய ஆரம்பித்தன.

தினமும் எங்களுக்கு அலாரம் வைக்காமலே விழிப்பு ஏற்படுத்தின அவற்றின் சப்தங்கள்.

“பார்த்தாயா? பிள்ளை பெற்றதாயிருந்தாலும் எவ்வளவு அதிகாலையில் எழுந்து வேலையை ஆரம்பித்து விடுகிறது!” என்று நான் வித்யாவைச் சீண்டியதில் அவள் என் தொடையில் கிள்ளும்படி ஆயிற்று.

“ச்….சே! இந்த பிடுங்கலோடு நம்மால் இருக்க முடியவில்லை. முதலில் அந்தக் கூட்டைக் கலைத்து எறியுங்கள்,” என்று வித்யாவும் அரிக்க ஆரம்பித்தாள்.

தோட்டத்தைப் பெருக்குவதென்பதோ, நிம்மதியாகச் செடிகளுக்கு நீர் ஊற்றுவதோ, கரண்ட் இல்லாத இரவுகளில் மாடியில் போய்ப் படுப்பதென்பதோ இல்லாமல் போய்விட்டது.

ஒரு ஞாயிறன்று வாசல் பக்கமிருந்த காய்ந்த இலைக் குப்பைகளை வேலைக்காரியை விட்டு பெருக்கச் செய்து, நெருப்பு வைத்துக் கொளுத்தியபோது அந்த காக்கைகள் படுத்திய பாட்டால் எனக்கும் கோபம் வந்து விட்டது.

என்னை அங்கே நிற்க விடாமல் தலையைச் சுற்றிச் சுற்றி வந்தன. மேலே மின் கம்பிகளின் மேல்உட்கார்ந்து கொண்டு அலறின.

“இங்கே எங்கோ வாசலில் நெருப்பு வைத்தால், அவற்றுக்கென்ன வந்தது? என்னவோ அதோட மாமரத்தையே பற்ற வச்சுட்டாப்ல கத்தறதே?” என்று வித்யாவும் வியந்தாள்.

வீட்டுப் பக்கம் ஒரு பூனை வரக் கூடாது. நாய் வரக் கூடாது. ஒரே சப்தம். எந்த ஓணானைக் கண்டாலும் விடாது துரத்தித் துரத்திப் பிடித்து குதறித் தின்று விடும் காக்கைகள்.

கிஷோர் தோட்டத்திற்கு வருவதற்கே பயந்தான்.

இன்னும் எத்தனை நாள் இந்தத் தொல்லை! இந்தக் குஞ்சுகள் லேசில் பறக்க ஆரம்பிக்கிறதா என்ன?

ஒரு குஞ்சு கருப்பாக, காக்காய் உருவத்தில் இருப்பது தெரிந்தது. இன்னொன்றின் இறக்கைகளில் வெள்ளைப் புள்ளிகள் தெரிந்தன.

“ஐயோ பாவமே! இது காக்கைக் குஞ்சு இல்லையா? இத்தனைப் பாடுபட்டு இவ்வளவு பேரிடம் திட்டு வாங்கி யார் குஞ்சை வளர்க்கிறதோ?” என்று எனக்குப் பரிதாபம் ஏற்பட்டது.

ஆனாலும் ஒரு விஷயத்தை மெச்சிக் கொள்ளத்தான் வேண்டும்.

மற்ற விலங்குகளைப் போல் இல்லாமல் காக்கையில் ஆணும், பெண்ணும் சேர்ந்தே கூடு கட்டிப் பிள்ளைகளை வளர்க்கின்றன.

அலுவலகச் சாப்பாட்டு நேரத்தில் அடிக்கடி எங்கள் வீட்டுக் காக்காய் கதை என்னால் பிரஸ்தாபிக்கப்பட்டது.

“பறவைக் கூடுகளை வீட்டுத் தோட்டத்தில் அனுமதிக்கக் கூடாது. ஆரம்பத்திலேயே பிய்த்துப் போட்டுவிட வேண்டும். இல்லாவிட்டால் முட்டைகளைத் தின்ன பாம்புகள் வர ஆரம்பிக்கும்,” என்று பலரும் அபிப்பிராயப்பட்டார்கள்.

ஆரம்பத்தில் எனக்கு இந்த விமரிசனத்தால் கோபம் தான் வந்தது.

“பாவம். கூட்டைப் பிரிப்பதாவது!”

ஆனால் இப்போது பாம்புக்காக இல்லாவிட்டாலும், நன்றி கெட்ட இந்தக் காக்கைகளுக்காகவே இந்தக் கூட்டைக் கலைக்கத்தான் வேண்டும் என்று தீர்மானித்தேன்.

கல்மஷம் பிடித்த காக்கைகள். வீட்டு எஜமானன் யார், விரோதி யார் என்ற அறிவு கிடையாது. வெறும் அஞ்ஞானம். இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடுங்கின கதையாய்… கொஞ்சமும் விசுவாசமில்லாமல்… என்ன ஜென்மங்கள்…!

இந்த குஞ்சுகள் பறந்து விடட்டும். உடனே கூட்டைக் கலைத்து விட வேண்டியது தான். இல்லாவிட்டால் மீண்டும் எந்தக் காகமாவது வந்து உயிரை எடுக்கும்.

“காக்கை ஜென்மம், மனிதனுக்கு அடுத்த ஜென்மமாம். அதனால்தான் அத்தனை கள்ளமும், அல்பமுமாக இருக்கிறதாம்,” என்று சரோஜா மாமி சொன்னதாக வித்யா சொல்லிக் கொண்டிருந்தாள்.

“சரிதான். குரங்கிலிருந்து மனிதன், மனிதனிலிருந்து காக்காயா? பேஷ்!” என்றேன்.

நாலைந்து மாத முற்றுகைக்குப் பின் ஒரு வழியாக எங்கள் மாமரம் விடுதலையடைந்தது. காக்கைக் குடும்பம் பறந்து போயிற்று.

நான் வீட்டில் இருந்து உயரமான ஒட்டடைக் கம்புடன் கூட்டைக் கலைக்கத் தயாரானேன். கூட்டை அண்ணாந்து பார்த்தேன்.

கூடு இன்னும் திடமாக இருந்தது. நாம் சிமென்ட்டையும் மணலையும் வைத்துக் கட்டும் வீடே மழைக்கும் வெயிலுக்கும் பாதிக்கப்படும்போது இந்தச் சின்னக் கூடு இரண்டு வருஷமாகியும் இன்னும் விழாமல் அப்படியே இருப்பது ஆச்சர்யமாக இருந்தது.

எவ்வளவு நேர்த்தி! என்ன கச்சிதம்! கீழே இருந்து பார்க்கும் போதே இரண்டு கிளைகளின் இடையில் இவ்வளவு அழகாகக் கூடை போல் இருக்கிறதே, இன்னும் உள்ளே பார்த்தால் எப்படி இருக்குமோ! பஞ்சு போட்டு மெத்தென்று இருக்குமோ?

என் சிந்தனையை உதறிவிட்டுக் கம்பை உயர்த்தினேன்.

“ஊசி மூஞ்சி மூடா!” என்று ஒரு குரல் கேட்டது. சுற்றும் முற்றும் பார்த்தேன். வித்யாவும், கிஷோரும் பக்கத்தில் நின்றபடி அண்ணாந்து பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

பின் யார்தான் சொன்னது?

ஆம். என் மனம் தான் சொல்லிக் கொண்டிருந்தது. கிட்டத்தட்ட இருபத்தைந்து வருடங்களுக்கு முன் இரண்டாம் வகுப்பில் படித்த பாடத்தின் வரிகள் இவை. குருவிக்கூட்டை கலைத்த குரங்கிடம் குருவி, “ஏன் கலைத்தாய்?” என்று கேட்டதற்குக் குரங்கு சொல்லும் பதில் இது.

“ஊசி மூஞ்சி மூடா! நீயா எனக்கு புத்தி சொல்கிறாய்? எனக்குக் கூடு கட்டத் தெரியாது. கூட்டைக் கலைக்கத் தான் தெரியும்,” என்று சொல்லிக் குருவி கதறக் கதற, குரங்கு கூட்டைக் கலைத்து விட்டது என்று முடியும் அந்தக் கதை அந்த நாட்களில் என்னை எவ்வளவு பாதித்தது என்று இப்போது நினைவுக்கு வந்தது.

அப்படியானால் எனக்கும் குரங்குக்கும் என்ன வித்தியாசம்?

சிறுகதை – ராஜி ரகுநாதன்
(கலைமகள், செப்டம்பர் 1988ல் வெளிவந்தது)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version