Home இலக்கியம் கதைகள் சிறுகதை: அவளுக்குப் புரிந்து விட்டது!

சிறுகதை: அவளுக்குப் புரிந்து விட்டது!

lady
lady

படித்துக் கொண்டிருந்த வாரப் பத்திரிக்கையைச் சோர்வோடு மூடினாள் ராதிகா. சே! வெறும் அபத்தம். இப்படியெல்லாம் கூட நடக்குமா என்ன? கற்பனைக்கும் ஓர் அளவு வேண்டாம்?

“என்ன? உனக்குள் நீயே முணுமுணுக்கற?” லேசாகப் புரண்டு அருகில் படுத்திருந்த மனைவியைக் கேட்டான் சதீஷ்.

அது ஒரு ஞாயிறு மதியம்.

“ஒன்றுமில்லை…. இந்தக் கதையில்….” சொல்ல வந்ததைப் பாதியில் நிறுத்தி விட்டாள் ராதிகா. சொன்னாலும் பலனிருக்காது. சதீஷ் தமிழ்ப் பத்திரிகைகள் படிக்க மாட்டன். அவன் படிக்கும் இங்கிலீஷ் புத்தகங்களை அவள் மரியாதையோடு எடுத்து அடுக்கி வைப்பாள். அதோடு சரி. அதைப் பற்றி அவளுக்கு வேறு ஒன்றும் அபிப்பிராயம் கிடையாது.

அதுவுமில்லாமல் தான் படித்த அந்தக் கதையை அவனிடம் சொல்ல வேண்டிய அவசியம்தான் என்ன? எல்லாம் வெறும் பேத்தல்.

யாரோ டாக்டராம். அதுவும் கண் மருத்துவராம். தன்னிடம் வரும் பேஷண்டிற்குப் பார்வை தருவதற்காக அந்தப் பேஷண்டின் மனைவியின் கற்பையே விலையாகக் கேட்கிறானாம். இப்படிக் கூட இருப்பார்களா என்ன மனிதர்கள்?

அவள் சிந்தித்துப் பழக்கமிலாதவள். அதோடு நிறுத்திக் கொண்டாள்.

ராதிகாவைப் பொருத்தவரை அவள் கணவன் சதீஷ் மிகவும் உயர்ந்தவன். தங்கம், வைரம். அதற்கு மேல் எதாவது இருக்குமானால் அந்தப் பொருளுக்கும் தகுதியானவன்.

ராதிகாவைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால்-

மென்மையானவள். ஆனால் அதிகம் படித்தவளோ வசதியானவளோ அல்ல. திருமணமாகி இரண்டு வருட காலத்தில் சதீஷ்தான் தனக்கு எல்லாம் என்று ஆனவள்.

மதியம் ஒரு குட்டித் தூக்கத்தின் பின், காப்பி சாப்பிடும் சமயம்தான் சதீஷ் அந்த விஷயத்தை அவளிடம் சொன்னான்.

“ராதீ! நேற்று ஆபீசுக்குப் போன் வந்தது. உன் தம்பிதான் பேசினான். கல்யாணத்துக்கு எப்ப வரோம்னு கேட்டான். செவ்வாய்க் கிழமைக்கு டிக்கெட் வங்கியிருப்பதைச் சொன்னேன். உன்னை ரொம்பக் கேட்டதாகச் சொன்னான்.”

ராதிகாவுக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. “குமார் பேசினானா? எப்படிப் பேசினான்? ரொம்பச் சந்தோஷமாகப் பேசினானா? இல்லை வெட்கப்பட்டுக் கொண்டே பேசினானா?”

“எல்லாம் சாதாரணமாகத்தான் பேசினான். அதுதான் ஊருக்குப் போகிறோமே! பார்த்துக் கொண்டால் போகிறது. அதுவரை தாங்குமில்லையா?”

கிண்டலாகப் பேசி மனைவியை இறுக்கமாக அணைத்து விடுவித்தான். இப்படித்தான் வீட்டில் இருக்கும்போதெல்லாம் நிமிஷத்திற்கு ஒரு இறுக்குப் பிடி பிடிப்பான். ராதிகாவுக்கு ஒரு நிமிடம் மூச்சு முட்டினாலும் மறுப்பு சொல்ல மாட்டாள். ஆனால் இப்போது மறுக்க வேண்டும் போல் இருந்தது. ஆனாலும் பேசாமல் இருந்து விட்டாள்.

அவள் மனத்தளவில் தன பிறந்த வீட்டிற்குச் சென்று விட்டவள் போல் காணப் பட்டாள். அம்மா, அப்பா, அண்ணா, முக்கியமாகத் தம்பி குமார்.

குமாருக்குக் கல்யாணம்! ஆகா! எவ்வளவு மகிழ்ச்சியான செய்தி. தம்பியும் அவளும் அடிக்காத லூட்டியா? போடாத சண்டையா? ஆனாலும் திருமணமாகி வந்த பின்புதான் அவளுக்குத் தன் மேலேயே ரொம்பவும் கோபம் வந்தது. சீ! ஏன்தான் தம்பியுடன் அப்படிச் சண்டை போட்டோமோ என்று வருத்தப்படுவாள். தான் ஏதோ பெரிய மனுஷி போலவும், இருபத்திநாலு வயசு குமார் ரொம்பவும் பச்சைக்குழந்தை போலவும் எண்ணிக் கொள்வாள்.

இரவு உணவைச் சமைத்தாள். எல்லாம் அனிச்சையாக ரெடியாகி, சாப்பாட்டு மேஜைக்கு வந்தது அவளுக்கே ஆச்சர்யமாக இருந்தது – எப்படி அவ்வளவு சீக்கிரம் செய்ய முடிந்தது என்று.

இரவு படுத்துக் கொண்ட பின்னும் அவள் அதே மன ஓடத்திலேயே பயணம் செய்து கொண்டிருந்தாள். ஊருக்குப் போய் ஒரு வருடம் ஆகிவிட்டது ஒரு காரணம். திருமணப் பத்திரிக்கை வந்த போது இருந்ததை விட, நாளன்றைகுக் கிளம்பப் போகிறோம் என்ற எண்ணம் அவளை அதிகமாகப் பாதித்து விட்டது. அந்த மகிழ்ச்சியான பாதிப்பில் அவள் சதீஷை முதல் முறையாகப் புறக்கணித்தாள். அந்த டபுள் காட் மெத்தையில் அவன் அணைப்பை மறுத்து ஓர் ஓரத்துக்கு ஒதுங்கினாள்.

“ஏன்? என்னாச்சு?”

“ஒன்றுமில்லை”.

“அதுதான் ஏன் என்று கேட்கிறேன்?”

“என்னவோ ஊரைப் பற்றியே நினைவாக இருக்கிறது. வேறொன்றுமில்லை.”

“அந்தக் கதையெல்லாம் வேண்டாம். ஏன் வேண்டாமென்று கேட்கிறேன்?”

“அதுதான் சொன்னேனே, வேண்டும் போல் இல்லை என்று.”

“அது தான் ஏனென்று கேட்கிறேன்?”

“இதற்கெல்லாம் காரணம் இருக்குமா என்ன?”

“அது எனக்கு அனாவசியம். செவ்வாய்க் கிழமை கிளம்ப வேண்டும். அதைப் புரிந்து கொள்!”

ராதிகாவுக்கு நிஜமாகவே புரியவில்லை. இருவரும் கட்டிலின் இரண்டு கோடிகளில் இருந்தார்கள்.

“இதில் புரிந்து கொள்ள என்ன இருக்கிறது? நாம் தான் போகிறோமே!”

“நீ இப்படி என் கையைத் தள்ளி விட்டால் நான் வருவது நிச்சயமில்லை”.

என்ன சொல்கிறான்? ராதிகாவுக்கு இப்போது லேசாகப் புரிந்தது. லஞ்சம் கேட்கிறான். இல்லை. இல்லை. பிளாக் மெயில் செய்கிறான். ஏதோ ஒன்று. ஆனால் சதீஷ் இப்படியெல்லாம் பேசி அவள் பார்த்ததில்லை. இந்த வாக்குவாதத்திற்கு முன் வரை அவன் பெரிய உத்தமனாக, மனைவியைத் தாங்கும் கணவனாகக் காட்சியளித்தான். ஆனால் இப்போது ஏன் இப்படி?

ராதிகாவுக்குள் முதன் முறையாக லேசாக ஒரு வெறுப்பு எழுந்தது. தன்மானம் முழிப்பு கொடுத்தது.

தலையணையை எடுத்துக் கீழே போட்டுக் கொண்டு தரையில் படுத்தாள்.

திரும்பிப் பார்த்த சதீஷ் ‘உம்’ என்ற சத்தத்தோடு கட்டிலின் நடுவில் நன்றாகக் காலை நீட்டிப் படுத்துக் கொண்டான். மீண்டும் நகர்ந்து வந்து கட்டிலின் விளிம்பிலிருந்து தலையை நீட்டிச் சொன்னான்.

“கணவனுக்கு மனைவி எந்த நேரமும் உடன்பட வேண்டும் என்று தெரிந்து கொள்.”

மறுநாள்.

மாலையில் வீடு திரும்பிய கணவனைப் பார்த்து அதிர்ந்தாள் ராதிகா.

சதீஷ் கையில் சிகரெட்.

இது என்ன புதுப் பழக்கம்?

“என்ன நீங்க? சிகரெட்டெல்லாம் பிடிச்சுகிட்டு?”

அருகில் போய்ப் பிடுங்கப் போனவளைப் பிடித்துத் தள்ளினான்.

“உன் வேலையைப் பார்த்துக்கிட்டுப் போ!”

ராதிகாவுக்கு அழுகை வந்தது.

அவள் அடுக்கி வைத்திருந்த சூட்கேசிலிருந்து அலட்சியமாகத் தன் துணிமணிகளை எடுத்து திரும்ப பீரோவில் வைத்தான் சதீஷ்.

பார்த்துக் கொண்டே இருந்த ராதிகாவுக்கு ஏதோ ஒரு விஷயம் புரிகிறார் போலிருந்தது. திடீரென்று தான் முதல் நாள் படித்த கதை ஞாபகம் வந்தது. கதைகள் எல்லாம் அபத்தம் இல்லை. அனுபவங்கள் தான் போலும் என்று நினைத்துக் கொண்டாள்.

நாளை அம்மாவிடம் போய், தான் செய்ததையும் சதீஷ் செய்ததையும் சொன்னால் அம்மா யார் பக்கம் நியாயம் பேசுவாள்? நிச்சயம் தன் சார்பில் பேச மாட்டாள். ‘தங்கமான மாப்பிள்ளையை உன் துக்கிரித்தனத்தால் சிகரெட் குடிக்கும்படி செய்து விட்டாயே!’ என்பாள்.

எதிரில் சோபாவில் கையில் ஆங்கில நாவலும் வாயில் புகையுமாக அலட்சியமாக நிமிர்ந்தவனைப் பார்த்து மென்மையாகச் சிரித்தாள். சடக்கென்று கீழே குனிந்து அவனுக்கு நமஸ்காரம் செய்தாள். அவன் சற்று அசைந்து கொடுத்தாலும் வெளியில் எதையும் காட்டி கொள்ளாமல் உட்கார்ந்திருந்தான். எழுந்தாள். அசட்டுச் சிரிப்போடு அவனருகில் அமர்ந்தாள்.

“சாரிங்க! என்னவோ தப்பாப் போச்சு! இனிமே உங்க இஷ்டப்படியே நடந்துப்பேன்! சரிதானே?”

கணவனை அணைத்துக் கொண்டு கன்னத்தில் முத்தமிட்டாள். உரிமையோடு சிகரெட்டைப் பிடுங்கித் தூர எறிந்தாள்.

அவளை வெற்றி கண்ட மகிழ்ச்சியில் அவன் தன்னுடைய வழக்கமான இறுக்குப் பிடியைப் பிடித்தான்.

ஆனால் அவளுக்குத் தெரியும், யார் வெற்றி பெற்றார்கள் என்று.

அவன் மனத்தை அவள் முற்றும் படித்து விட்டாள். ஆனால் பாவம், அவளைப் பற்றிக் கையலாகாதவள், அடிமை என்று மட்டும் தான் அவன் நினைத்துக் கொண்டிருப்பான்.

அவள் மனதில் அவனைப் பற்றிய கோபுரம் இடிந்து, குப்பைத் தொட்டி இடம் பெற்றது அவனுக்கு நிச்சயம் தெரிந்திராது.

  • சிறுகதை by ராஜி ரகுநாதன்
    (கல்கி, 24-7-1988 இதழில் பிரசுரமானது).

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version