Home இலக்கியம் பாண்டியன் கீர்த்தி! சோணாடு கொண்டருளிய சுந்தர பாண்டிய தேவர்!

பாண்டியன் கீர்த்தி! சோணாடு கொண்டருளிய சுந்தர பாண்டிய தேவர்!

திருவெள்ளறை திருத்தலம்! செந்தாமரைக் கண்ணனாய் பெருமான் புன்னகைத்து நின்றிருந்தான். பிரயோகச் சக்கரம் தாங்கி பகைவரைத் துவம்சம் செய்திடும் வீரியத்துடன் அவன் தோற்றம்.

பகைவரைப் பதம் பார்த்து, ஒரு பேரழிவை நிகழ்த்தி விட்டு, எந்நேரமும் புறப்படத் தயாராய் இருந்தது அவன் கரத்தினில் திகழ்ந்த சுதர்ஸனச் சக்கரம்! ஆனால், அவன் கண்களில் மட்டும் கருணைப் பெருக்கு! அன்றலர்ந்த தாமரை மலர் போல் அழகாய்ப் பூத்துச் சிரிக்கும் கண்கள். அதனால்தானே அவன் தாமரைக்கண்ணன்!

இதோ, இந்த மாறவர்மன் சுந்தர பாண்டியனும் அப்படி ஒரு பேரழிவை நிகழ்த்திவிட்டு அங்கே நின்று கொண்டிருந்தான். அவன் கரத்தில் மிடுக்குடன் திகழ்ந்த வாள் எந்நேரமும் சுற்றிச் சுழலத் தயாராய் இறுக்கிக் கட்டிய கச்சையில் தஞ்சமடைந்திருந்தது! அந்தப் பெருமாளின் கருணைக் கண்கள் புகுத்திய ஈரம், சுந்தர பாண்டியனின் மனத்தில் ஆழப் புகுந்திருந்தது.

வீரம் உள்ளவன்தான் தன் ஈரத்தை வெளிப்படுத்த முடியும்! கோழை தரும் மன்னிப்பு அச்சத்தில் உறைந்தவனின் இயலாமை!

நினைத்தே பார்த்திராத வகையில் ஏதேதோ நடந்துவிட்டது இந்தக் குறுகிய நாட்களில்…! வெறி கொண்ட வேங்கையாய்க் களம் புகுந்தவன், வெறி தீருமட்டும் சோழன் நிலத்தை தரைமட்டமாக்கி விட்டான்!

சிந்தையில் என்னவெல்லாமோ சண்டையிட்டுக் கொண்டிருக்க, அவன் கவனம் கலைத்தான் அந்தச் சிற்பி!

“அரசே… நும் மெய்க்கீர்த்தி எழுதப்பட்டு விட்டது. சொல்வெட்டாய் நும் கீர்த்தி இந்தக் கல்வெட்டில் பதியப்பட்டது” என்றான் சிற்பி!

“சரி… எடுத்து வாருங்கள்…” கட்டளையிட்டுக் காத்திருந்தான் சுந்தர பாண்டியன்! கல்வெட்டு கொண்டு வரப்பட்டது.
உரக்கப் படித்தார் ஒருவர்…

‘வெறியார் தளவத் தொடைச் செய மாறன்
வெகுண்ட தொன்றும்
அறியாத செம்பியன் காவிரி நாட்டி லரமியத்துப்
பறியாத தூணில்லை கண்ணன்செய் பட்டினப்
பாலைக்கன்று
நெறியால் விடுந்தூண் பதினாறு மேயங்கு
நின்றனவே’

வாசித்துக் கேட்ட சுந்தர பாண்டியன் முறுவலித் தான். முகக் குறிப்பால் அதனை ஆமோதித்தான்!

தொடர்ந்தான் சிற்பி… “சோழ சாம்ராஜ்யத்தைப் பழிதீர்த்த உங்களின் தீரம், இதோ இந்தச் சோழ மண்ணில், பெருமானின் இந்த ஆலயத்திலேயே வைக்கப்பட வேண்டும்… தீரமும் ஈரமும் கொண்ட பெருமாளின் சன்னிதியில் தங்களின் தீரமும் ஈரமும் பறைசாற்றப் பட வேண்டும்…”

யோசித்தான் சுந்தர பாண்டியன். உடனிருந்தோர் வற்புறுத்தினர். “அரசே எத்தகைய ஈர நெஞ்சம்! பகை வனைப் பழிதீர்த்த பின் அவன் கீர்த்தியையும் அழிப் பது வென்றவன் இயல்பு! ஆனால், தாங்கள்…”

“ஏன் என்ன ஆயிற்று? நானும் பழி தீர்க்கத்தான் வந்தேன்! அதில் ஒன்றும் குறை வைக்கவில்லை!”

சினத்தால் மொழிந்தாலும் சுந்தர பாண்டியனின் ஈர நெஞ்சம் அங்கிருந்தோர் கண்களை ஈரமாக்கியது!

“இல்லை அரசே! ஆலயத்துக்கு பகைவர் செய்த தொண்டினைப் பாராட்டி, அவன் பெயரில் இது தொடரட்டும் என்று அனுமதித்தது மட்டுமல்ல… மேலும் நிபந்தங்களை ஏற்படுத்தி வைத்தீர்களே! அந்தப் பெருந்தன்மை எந்த மன்னருக்கு வரும்!”

வாழ்த்தொலிகளுடன் புகழ்மாலையும் ஒருங்கே சூட்டப்பட்டபோது சுந்தர பாண்டியன் சற்றே துணுக் குற்றான். புகழ் போதை நம்மை இங்கேயே தங்க வைத்துவிடும் என்பது அவனுக்குத் தெரியாதா என்ன?

இன்னொருவர் தொடர்ந்தார்… “இறைப் பணியை மட்டுமா அனுமதித்தீர்கள்…! சோழனின் தமிழ்ப் பணிக்கும் மாபெரும் மரியாதை தந்திருக்கிறீர்கள்..!”

“அப்படி என்ன மரியாதை தரப்பட்டது?” கேள்விக் கணையுடன் நோக்கினான் சுந்தர பாண்டியன்.

“சோழ நாடே தரைமட்டமானபோதும், மண்டபங் களும் மாட, மாளிகைகளும் இடிபட்டுக் குலைந்த போதும், இந்தப் பதினாறு கால் மண்டபத்தை மட் டும் விட்டு வைத்தீர்களே! அந்தப் பெருந்தன்மை!”

“ஓ… அதுவா? இந்த மண்டபம் முன்னொருகால் கரிகாற் பெருவளத்தான் வழங்கியதாம். அதுவும் ஒரு தமிழ்ப் புலவனுக்கு! அந்தப் புலவனுக்கும் மன்னனுக்கும் மரியாதை செய்யாமல் இருந்தால் நான் தமிழ் மண்ணில் பிறந்தவனோ? கடியலூர் உருத்திரங்கண்ணனாருக்குப் பரிசிலாக வழங்கப்பட்டதாம் இந்தப் பதினாறு கால் மண்டபம்! இதை அறிந்த பின்னும் யான் இதனைப் பிடுங்கி எறிவேனோ?” சுந்தர பாண்டியனின் கண்கள் சற்றே கலங்கின.

அருகிருந்தோருக்கோ மெய் சிலிர்த்தது. ஆண்டவனின் நிபந்தங்களை அனுமதித்தான்; புலவனின் பரிசிலுக்கு மதிப்பளித்தான். இன்னும் இவன் மெய்க்கீர்த்திகள் எழுதப்படட்டும்! வாழ்த்தொலிகள் வானத்தை வசப்படுத்தின!

‘பூமருவிய திருமடந்தையும் புவி மடந்தையும் புயத்திருப்ப…’ சொற்கள் எடுத்துத் தரப்பட, அங்கே மேலும் வளர்ந்தது அவன் மெய்க்கீர்த்தி!

‘சோணாடு கொண்டருளிய சுந்தர பாண்டிய தேவர் வாழ்க! வாழ்க வாழ்க!!’

வாழ்த்தொலிகள் தொடர்ந்தாலும் சுந்தர பாண்டியன் மனமோ அந்தச் சூழலில் இருந்து விலகி வந்தது அவனின் பழி தீர்க்கும் எண்ணம் மட்டுமல்ல, சோழனுக்கு அடங்கி சிறுத்துப் போய்க் கிடந்த பாண்டிய ராஜ்ஜியத்தை ஒரு சாம்ராஜ்யமாக மாற்றிடும் பேரவா அவன் கண்ணில் தீப்பொறிகளாய்ப் பறந்தன.

கடந்த காலச் சம்பவங்கள் இந்த நிகழ்வுகளின் பின்னே அவனுள் நிழலாடின! சரித்திரச் சுவடுகளை அவனும் அறியாமலா இருந்தான்? இந்தப் பழிதீர்க்கும் உணர்ச்சிக்குக் காரணம் குலோத்துங்கன்தானே!


மாமன்னன் ராஜராஜன் வடநாட்டிலும் கால் பதித்து சோழ சாம்ராஜ்ஜியத்தை நிறுவியிருந்தான்! வட இந்திய மன்னர்கள் மிரண்டனர். உறையூரின் புகழ் கடல் கடந்தும் உறைந்திருந்தது!

தனித் தலைநகராய் தஞ்சையை அமைத்தான். அதனுள்ளும் பெருவுடையாருக்கு ஆலயம் எடுத்தான்! அது ஒரு கலைக் கோயில்தான்! உலகு வியக்கும் உன்னதக் கலைதான்!

ராஜராஜன் பின்னே அவன் மைந்தன் ராஜேந்திரனோ தந்தையின் பாணியில் கங்கை கொள்ளப் புறப்பட்டான். அங்கும் ஜெயக்கொடி நாட்டியவன், கங்கை நீரை தன் நாட்டுக்குக் கொண்டு வந்தான்.

‘கங்கையிற் புனிதமாய காவிரி’ என்று ஆழ்வார் பாடினார். காவிரி பாயும் வளமுடைய நாடுதான் என்றாலும், கங்கையின் புனித நீரால் தன் மண்ணை பதனிட எண்ணினான்! தந்தை ஒரு தஞ்சையை நிறுவியதுபோல், தாமும் ஒரு நகரை நிறுவ எண்ணம் கொண்டான் ராஜேந்திரன்.

தன் தந்தை உருவாக்கிய ஜெயங்கொண்ட சோழபுரம் அருகே ஐந்து கல் தொலைவில் இருந்த காட்டை அழித்து ஒரு நகரை உருவாக்கினான். கங்கை நீரைப் பாய்ந்தோடச் செய்து அந்த மண்ணை புனிதப்படுத்தினான். வட நாட்டுப் போர் வெற்றியின் நினைவாய், கங்கை கொண்ட சோழபுரத்தை நிறுவினான்.

இரு நூற்றாண்டுகளாய் சோழர் தலைநகராய்த் திகழ்ந்த உறையூரும் தஞ்சையும் முக்கியத்துவம் இழந்தன. கங்கை கொண்ட சோழபுரம் அந்த இடத்தைப் பிடித்தது. பழையாறையும் நந்திபுரமும் ராஜேந்திரனின் பார்வையில் பதிந்தன. தஞ்சை செழுமையை இழக்கத் தொடங்கியது.

ஆனாலும், பின் வந்த சோழர்களும் சாம்ராஜ்ஜிய வெறி கொண்டவர்களாவே இருந்தார்கள். பாண்டியர்கள் மீண்டெழாதபடி பார்த்துக்கொண்டார்கள். நூற்றாண்டுகளாய் அடங்கிக் கிடக்க வேண்டியிருந்தது.

பின்னாளில் மூன்றாம் குலோத்துங்க சோழன் பாண்டிய நாட்டுக்குக் காலனாய்த் திகழ்ந்தான்.

இரண்டு போர்கள். பாண்டியர்கள் ஓட ஓட விரட்டப்பட்டார்கள். ஆனாலும், மதுரைக்குள் அடங்கிக் கிடந்த குலசேகர பாண்டியனை துவம்சம் செய்யக் கிளம்பினான் குலோத்துங்கன். பாண்டிய நாட்டின் மட்டியூர், கழிக்கோட்டை இரு இடங்களிலும் கடும் சண்டை. குலசேகரனின் படை பேரழிவைச் சந்தித்தது. போர்க்களத்தில் இருந்து பின்வாங்கிய குலசேகரன் தன் தம்பியுடன் மதுரையை விட்டு ஓடினான்.

மதுரை கேட்பாரற்றுக் கிடந்தது. குலோத்துங்கன் மனத்தில் என்ன வெறியோ? மன்னன் ஓடிய பின்னும் மண்ணை விட்டு வைக்க அவன் மனம் எண்ணவில்லை. வெறி அடங்காத நிலையில் மதுரைக்குள் படையுடன் நுழைந்தவன், அங்கே இருந்த மாட மாளிகைகளையும் அரண்மனைகளையும் ஒரேயடியாக அழித்தொழித்தான். கட்டடங்கள் இடிந்து தரை மட்டமாயின.

ஊரின் அழகு குலைந்தது. எங்கும் அவல ஒலி! எல்லாம் கண்ட பின்னும் நாடு திரும்ப மனம் வரவில்லை! பாண்டியர்களை அவமானப்படுத்த வேண்டும், சரித்திரத்தின் பக்கங்களில் அவர்களின் அவமானத்தை பதிவு செய்ய வேண்டும்.

இந்தக் குரூர எண்ணம் அவனுள் கிளர்ந்தெழ, கழுதைகளைக் கொண்டு வந்தான். ஏர் பூட்டி உழுதான். கதிர் விளையாத வரகினை விதைத்தான். பாண்டிய மண்ணுக்கு எவ்வளவுக்குத் தன்னால் சேதத்தை ஏற்படுத்த முடியுமோ அவ்வளவுக்குச் செய்தான் குலோத்துங்கன்.


தன் மண்ணுக்கு நேர்ந்த இந்தப் பேரழிவை எல்லாம் கண் முன் கண்டு கொண்டிருந்தான் சிறுவன் மாறவர்மன் சுந்தரபாண்டியன்! அவனுள் பழியுணர்ச்சி கிளர்ந்தெழுந்தது. தஞ்சையை இதேபோல் தகர்த்தெறிவேன் என்று சூளுரைத்தான்! இள வயதுதான். காலம் வரட்டும் எனக் காத்திருந்தான். அதற்குள் தன்னை வலுப்படுத்திக் கொண்டிருந்தான்.

அந்தக் காலமும் வந்தது. கி.பி.1218.

மூன்றாம் குலோத்துங்கச் சோழன் வாழ்க்கை முடிந்திருந்தது. அவன் மகன் மூன்றாம் ராஜராஜன் அரியணை ஏறியிருந்தான். சுந்தர பாண்டியனுக்கு இதுதான் தக்க தருணம் என்று தோன்றியது.

தன் வஞ்சம் தீர்க்க, தஞ்சையைத் தரைமட்டமாக்கக் கிளம்பினான் பெரும் படையுடன்!

சோழ மண்ணின் பேரழிப்பில் வேட்கை கொண்ட வேங்கையாய்ப் பாய்ந்த மாறவர்மன் சுந்தர பாண்டியனின் விழித்திரையில் மதுரையின் பேரழிவும் அவமானங்களுமே முன் நின்றன. அது இப்போது, உறையூரும் தஞ்சையும் தீக்கிரையாவதில் துணை நின்றன!

கண்ணில்பட்ட கல் மண்டபங்கள் எல்லாம் தூள் தூளாயின. தூண்கள் பிய்த்து எறியப்பட்டன. முக்கியமாக, அவன் முன் நின்றது தஞ்சை ராஜராஜனின் அரண்மனை! அது இருந்த சுவடு தெரியாமல் மண்ணில் புழுதியைக் கிளப்பியபடி புதையுண்டது.

எப்படி மதுரை அழிக்கப்பட்டதோ… அதே பாணியில் தஞ்சை சுக்கு நூறானது. அத்தனை அரசு மாளிகைகளும் கட்டடங்களும் தரைமட்டமாயின.

அந்த ஒரே தாக்குதலில் பெருவேந்தன் ராஜராஜ சோழனின் அடையாளமாக இருந்திருக்க வேண்டிய அரண்மனை காணாமல் போனது! சோழன் மூன்றாம் ராஜராஜன், தன் சுற்றத்தாருடன் தலைதெறிக்க ஓடித் தப்பினான்.

சிறு வயதில் மனத்தில் என்ன வஞ்சத்தை வளர்த்தானோ அதைத் தீர்த்து விட்ட பூரிப்பில், பழையாறை ஆயிரத்தளி அரண்மனையில் வீராபிஷேகம் செய்து கொண்டான் மாறவர்மன் சுந்தரபாண்டியன். அவன் கண்களில் பேரழிவின் பெருவெறி அடங்கவில்லைதான்! நாடே தரைமட்டமான போதிலும், அந்தப் பதினாறு கால் மண்டபம் மட்டும்… அவன் மனத்தை மாற்றியிருந்தது.

அவன் காலத்தும் ஆயிரம் ஆண்டுக்கு முன் வழங்கப்பட்ட கௌரவம் அது! புலவர் பெருமான் கடியலூர் உருத்திரங் கண்ணனார் சோழன் கரிகாற் பெருவளத்தான் மீது பட்டினப்பாலை பாடினார். அதற்காக பதினாறு நூறாயிரம் பொன் பரிசில் வழங்கி, பாடல் இயற்றப் பட்ட பதினாறு கால் மண்டபத்தையும் புலவர்க்கு அளித்தான் கரிகாலன். அதற்கு கௌரவம் அளித்தான் சுந்தர பாண்டியன்!

அதுமட்டுமா? தஞ்சை ராஜராஜன் அரண்மனை இருந்த சுவடு தெரியாமல் மறைந்து போனது. ஆனாலும், ராஜராஜன் கட்டிய அந்தப் பெருவுடையார் கோயிலோ எவ்வித சேதமும் அடையாமல், அவனால் காக்கப்பட்டது. தெய்வீகக் கலைக்கு அவன் அளித்த கௌரவம் அது!

திருவெள்ளறை ஆலயத்துக்கு சோழனால் எழுதப் பட்ட பூசனைகள், இறையிலி நிலங்கள், நிபந்தங்களுக்கு மதிப்பளித்து, மேலும் குறைவற பூஜைகள் நடக்க தன் பெயரிலும் நிபந்தம் எழுதி வைத்தான். அங்கிருந்து தில்லையம்பதிக்கு பயணப்பட்டான், ஆடல் வல்லானாம் நடராஜப் பெருமானைத் தரிசித்து ஆலயத்துக்கு நற்காரியங்களைச் செய்ய!

ஊழிப்பெருக்காய் ஓர் அழிவைச் செய்தாலும், சுந்தர பாண்டியனுக்குள் தலையெடுத்த ஆன்மிகச் சிந்தை அவனைப் பண்படுத்தியிருந்தது. மெய்யாகவே கீர்த்தி ஓங்கக் கண்ட அவனுக்கு அமைந்த மெய்க் கீர்த்திகள் இன்றும் திருவெள்ளறைக் கோயிலில் பதிக்கப்பட்டு சரித்திரத்தைச் சொல்லிக் கொண்டிருக்கின்றன!

  • செங்கோட்டை ஸ்ரீராம்

1 COMMENT

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version