― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇலக்கியம்கதைகள்சிறுகதை:- "தாய் மண்ணே! வணக்கம்!"

சிறுகதை:- “தாய் மண்ணே! வணக்கம்!”

- Advertisement -
bharatamata

எழுதியவர்: ராஜி ரகுநாதன், ஹைதராபாத்

அவர்களே இப்படிப் பேசுவார்கள் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. மனம் வலித்தது.

மனிதர்கள் தூரத்தில் இருந்தால் மனதுகள் அருகில் இருக்கும் என்று கூறுவார்களே! இங்கு ஏன் இப்படி?

மகிழ்ச்சியாகத் துவங்கப்பட்ட இந்த என் பயணம் இப்படிப்பட்ட துன்பச் சுமையைச் சுமக்கத்தான் ஏற்பட்டதா? எனக்கு ஆறவில்லை.

எல்லாம் இப்படித்தான் ஆரம்பித்தது… …..

ஜன்னல் சீட் கேட்டுப் பெற்றது நல்லதாகி விட்டது.  பஞ்சுப் பொதிகளாக மேகக் கூட்டங்கள் நான் கற்பனை செய்ததை விட ஆச்சர்யத்தை அளித்தன. மேகத்திற்கும் மேலே பறக்கிறோம்.  என்ன விந்தை!  விமானம் ஆகாயத்தைத்  தொட்டுப் பறக்கிறாற்போல் ஒரு பிரமை!

விமானம் மேலெழத் தொடங்கியபோது காதில் ஜிவ்வென்று ஏறிய வலி இப்போது இல்லை.  முதன் முதலில் செல்லும் விமானப் பயணத்தை ரசிக்க ஆரம்பித்தேன். சீட் பெல்ட்டை தளர்த்திக் கொண்டேன்.

மலேஷியன் ஏர்லைன்சின்  லுங்கி அணிந்த பெண் லஞ்ச் டிராலியைத் தள்ளிக் கொண்டு வந்தாள்.  அத்தனை சிறிய இடைவெளி.  அதற்குத் தகுந்தாற்போல் தயாரித்துள்ள டிராலி என்று தோன்றியது.  ‘ஹிண்டு வெஜ். மீல்ஸ்’ என்று போட்டு என் பெயர் எழுதிய உணவை என்னிடம் நீட்டினாள். 

முன் சீட்டின் பின்னால் மடித்து இருந்த  டிரேயை நிமிர்த்தி லஞ்ச்சை வாங்கி அதில் வைத்தேன். சுடச் சுட விஜிடபுள் புலாவ்.  இது என்ன? கத்திரிக்காய் பஜ்ஜியா?  பரவாயில்லை. உப்பு உறைப்பு குறைவாக இருந்தாலும் சாப்பிடும்படியாக சாதுவாக இருந்தது.

விமானத்தில் ஏறியதுமே கொடுத்த உப்பு போட்ட வேர்க்கடலையை பத்திரமாக வைத்திருந்தேன்.  அந்த பாக்கெட்டைப் பிரித்து கொறிக்க ஆரம்பித்தேன். 

சீட்டின் கைப்பிடியில் இருந்த ரிமோட் கன்ட்ரோலை எடுத்து எதிரிலிருந்த குட்டி டிவியில் சினிமாக்களைத் திருப்ப ஆரம்பித்தேன்.  ‘கராத்தே கிட்’ டில் நிலைபெற்றேன்.

விமானப் பயணம் அலுப்பு தெரியாமலிருக்க சற்றைக்கொரு முறை ஏதோ ஒன்றைத் தள்ளிக் கொண்டு வந்து கொடுத்துக் கொண்டே இருந்தார்கள் கொண்டை  போட்ட அழகிகள்.  நான் கூட ஆப்பிள் ஜூஸ் குடித்தேன்.

பாத்ரூம்தான் ரொம்ப இத்தனூண்டு. உள்ளே போனதுமே பளிச் பளிச் என்று ‘விரைவில் வெளியே வர’ சொல்லி பயமுறுத்தும் எழுத்துக்கள். அந்த பாத்ரூமைப் பார்த்து ஒண்டுக் குடித்தன அடுக்கு மாடி வீடுகளை எப்படி உபயோகிப்பது என்று கற்றுக் கொள்ள வேண்டும்.  துளியூண்டு இடத்தில் அத்தனை வசதிகளையும் அமைத்துள்ளார்கள் விமானத்தில்.  

ஆச்சர்யமான அனுபவம்தான் இந்த விமானப் பயணம்.
அதற்குள் எல்லோருக்கும் ஒரு பேப்பரைக் கொடுத்து பூர்த்தி செய்யச் சொன்னாள்  ஒரு அழகி.  பாஸ்போர்ட்டைப் பார்த்து விவரங்களைப் பூர்த்தி செய்தேன். மாங்காய் ஊறுகாய் இருக்கிறதே!  டிக் செய்யலாமா? வேண்டாமா? திறந்து பார்ப்பானோ?

இமிகிரேஷனில் வாட்டசாட்டமான அதிகாரி பெட்டியைத் திறக்கச் சொன்னான்.  நான்தான் அழகாக சீல் செய்து கடையில் வாங்கியது போல் விவரம் எழுதி ஒட்டியிருந்தேனே! 

ஒவ்வொன்றாகத் தின்பண்டப் பாக்கெட்டுகளை எடுத்துப் பார்த்தான்.  நடுநடுவில் என்னைப் பார்த்துப் புன்னகைத்தான்.

‘ஐயோ, பாவம்! தாயன்பு!’ என்று நினைத்திருப்பானோ?  அப்பாடா!  தட்டை, ரிப்பன் தேன்குழல், சாம்பார் பொடி, ஊறுகாய் .. வகையறாக்கள் எல்லாம் தப்பித்து விட்டன.
தப்பித்தேன், பிழைத்தேன்! என்று டிராலியை அழுத்தித் தள்ளியபடி வெளியே வந்தேன்.  தடியன் நல்லவன்தான். பாவம்!  பெட்டியை மீண்டும் அழகாகப் பூட்டிக் கொடுத்தானே! அவன் நன்றாயிருக்கட்டும்!

இரவு எட்டுமணி.  லேசாகத் தூறிக் கொண்டிருந்தது.  நகரம் ஜகஜ்ஜோதியாக ஒளிர்ந்தது.  மேல் நாடென்றால் இப்படித்தான் இருக்குமா?  ஸ்கேல் வைத்துக் கோடு போட்டாற்போல் எத்தனை வரிசையான கட்டிடங்கள்! 

அண்ணாந்து பார்த்தால் கழுத்து வலிக்கிறதே! கடைகள் எல்லாம்  கண்ணாடிக் கதவுகள் மூடப்பட்டு விளக்கு எரிந்தபடி உள்ளே உள்ள சாமான்களைத் துல்லியமாகக் காட்டுகின்றனவே!  திருடன் வரமாட்டானோ?

“அம்மா!  எல்லாம் இன்சுயூர் செய்யப்பட்டிருக்கும்.  குறிப்பிட்ட நேரத்திக்கு முன் கதவைத் திறந்தால்  போலிஸ் ஸ்டேஷனில் அலாரம் அடிக்கும்படி செக்யூரிட்டி  டைமர் பொருத்தி இருப்பார்கள்.  இங்கெல்லாம் திருட்டு பயம் கிடையாது”  காரை ஒட்டிக் கொண்டே என் மகன் விளக்கினான்.

நான் ஆச்சர்யப்படுவதைப் பார்த்து அவன் ரசிக்கிறான் என்று தோன்றியது.  அவனும் வந்த புதிதில்  இப்படித்தானே வியந்திருபான்!

அட…! வீட்டில் நுழைத்தும் விளக்கு தானாகவே எரிகிறதே!  காலின் கீழ் இதென்ன மெத்துமெத்தென்று?  கார்பெட்! அடாடா…! பெருக்கித் துடைக்கும் வேலை மிச்சம்.

பாத்ரூம் ஒரு அற்புதம். பளிச்சென்று சுவர்கள்.  கண்ணாடிக் கூண்டிற்குள் ஷவரும், கர்ட்டனும்!  தொட்டி வேறு! ஐயையோ!  வெறும் டிஷ்யூ பேப்பர்னா வெச்சிருக்கான்! பகவானே!

“அம்மா! பார்த்து!  ஜாக்கிரதை! இடது பக்கக் குழாயில் வெந்நீர்.  கை கொப்பளிச்சுடும். வலது பக்கம் தண்ணீர் சிலீர்னு இருக்கும்.  சமமா திறக்கனும்”.

மறுநாள்  முழுவதும் பையன் வீட்டிலிருந்தே அலுவலக வேலை செய்தான்.  அம்மாவுக்கு சொல்லிதர வேண்டாமா, பின்னே!
சமயலறையில் மேடையோடு மேடையாக மொழுக்கென்று ஸ்டவ்கள்.  எந்தக் குமிழைத் அழுத்தினால் எந்த ஸ்டவ் சிவப்பாகும்?  இதைத் தெரிந்து கொள்வதற்கே நாளாகிவிடும் போலிருக்கே!

“ஸ்டவ்வை அணைத்த பிறகு கூட சூடு ஆறாது. காந்திப் போயிடும். பார்த்து  இறக்கு!”

பீன்ஸ், முட்டைகோஸ், காரெட் எல்லாம் வெறுமே வதக்கியதுமே குழைந்து போயின. ருசி?

சூப்பர் மார்கேட்டே ஒரு பெரிய நகரம் போலிருந்தது.  பெயர் புரியாத கீரைகள். வகை வகையான மாமிச மலைகள். இத்தனை மீன் இனங்களா? ஒவ்வொன்றும் கண் மூடாமல் விழிக்கின்றன.  மூக்கை அடைக்கிறது. எச்சிலை எங்கு துப்புவது? ஊகும். வழியில்லை. இனிமேல் புட்கோர்ட் வழியாகப் போகக் கூடாது. 
மதியம்.  வெயிலடித்தது. சிலுசிலுவென்று காற்று வேறு.  காலாற நடந்தோம்.  ஒரே மாதிரி நெருப்புப் பெட்டி போல் வீடுகள்.

“ஏண்டா! வீட்டுக்கெல்லாம் காம்பவுண்டு சுவரே இல்லையே. ஏதோ பேருக்கு ஒரே ஒரு செங்கல் வரிசைதான் வேலி.  தோட்டத்தில் எத்தனை பெரிய ரோஜாக்கள்! அப்பப்பா! கொள்ளை அழகு.  யாரும் பறிச்சுட  மாட்டாளா?”

“போம்மா! அதெல்லாம் நம்ம ஊர்லதான் நடக்கும்.  இங்கே அடுத்தவர் பொருளைத்  தொட்டால் தொலைந்தான். தண்டனைதான்!”

ரோடை கிராஸ் செய்ய ஜீப்ரா கிராசில் நின்றோம்.  அங்கு தூணில் இருந்த பெரிய பட்டனை அழுத்தினால் டிக் டிக்கென்று சப்தம் வருகிறது.

“இந்த சிக்னல் பட்டன் பார்வையற்றவர்களுக்குப் பயன்படும்” விளக்கினான் மகன். 

எதிரிலிருந்த சிக்னலில் சிவப்பு மனிதன் ‘நின்றிருந்தான்!’ விர்விர்ரென்று கார்கள் பறந்தன.

“டிராபிக் ரூல்சைக் கடைபிடிக்காமல் வண்டி ஓட்டினால் நெகடிவ் பாய்ண்ட்ஸ் ஏறிவிடும். அப்புறம் லைசென்சே ரத்தாகிவிடும்.  எல்லா இடத்திலும் காமெரா உள்ளது.  ஆகவே எல்லோரும் கவனமாக இருப்பார்கள்”

மகனின் விளக்கத்தைக் கேட்டபடி சிக்னலைப் பார்த்தேன்.  பச்சை மனிதன் ‘நடந்தான்’.  நாங்களும் விரைவாக சாலையைக் கடந்தோம். 

தெருவெல்லாம் சுத்தமாக இருந்தன.  இரண்டு பக்கங்களிலும் மரங்களும் பூச்செடிகளும்… குட்டை உடைகளில் பொம்மைகளைப் போல் பெண்கள் நடந்து செல்வதும்… கண்ணைக் கவர்ந்தன.

சில வீடுகளின் முன் டிவி, சோபாசெட், ரூம் ஹீட்டர், மெத்தை…. ஒன்றென்ன?  பல பொருட்கள் வைக்கப் பட்டிருந்தன.

“ஏண்டா இப்படி வீணாக வாசலில் போட்டு வெச்சிருக்கா?”
“வீட்டிற்குத் தேவை இல்லை என்றால் இப்படித்தான்.  தேவைப்படறவங்க யாரவது எடுத்துட்டு போகலாம். இல்லாட்டா நாலு நாள் கழிச்சு குப்பை வண்டி அள்ளிட்டு போய்டும்”.

இங்கு குப்பை வண்டியைப் பற்றி சொல்லியே ஆகணும்.  ஒவ்வொரு வீட்டிலும் பச்சை, மஞ்சள், சிவப்பு என்று பல வண்ணங்களில் பெரிய பெரிய பிரம்மாண்ட குப்பைத் தொட்டிகள். ஒன்று காய்கறிக் குப்பை, ஒன்று பிளாஸ்டிக், ஒன்று கண்ணாடி…. இப்படி.  ஒரு நாள் விட்டு ஒருநாள் ஒரு ஆள் வந்து எல்லாவற்றையும் தெருவில் நகர்த்தி வைக்கிறான்.

விடியற்காலையில் ஒரு ராட்சச லாரி வந்து, யானை தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக் கொள்வது போல், ஒவ்வொரு நாள் ஒவ்வொரு கலர் குப்பைத் தொட்டியை தூக்கி கொட்டிக் கொண்டு போகிறது.  

“நம் ஊரில் இந்த குப்பைத் தொட்டிகளையே தூக்கி விற்று விடுவார்களே! இங்கு யாரும் ஏழைகளே இல்லையா?  வேடிக்கையாக இருக்கிறதே!”

“அப்படியில்லை, அம்மா! இங்கும் ஏழைகள் உள்ளார்கள். நான் உன்னை அழைத்துப் போய் காண்பிக்கிறேன்.  ஒவ்வொரு நாள் ஒவ்வொரு சேவை அமைப்பு உணவு சமைத்து ஏழைகளுக்கு உணவளிக்கும் ஏற்பாடு உள்ளது. ரயில்வே ஸ்டேஷனில் எதாவது வாத்தியம் வாசித்தபடி துண்டை விரித்து பிச்சை கேட்பவர்களும்  உள்ளார்கள்.  ஆனால் நம் ஊர் போல் அருகில் வந்து தொந்தரவு செய்ய மாட்டார்கள்.  எதையும் திருடி விற்கும் பழைய இரும்பு கடை இங்கு கிடையாது.  வாங்கிய பில் காட்டினால்தான் செகண்ட்ஹாண்ட் கடையில் போட முடியும்”.

இங்கு எல்லாம் ஒழுங்கு முறையாக நடப்பதைப் பார்க்க ஆசையாக இருந்தது.  நம் இந்தியாவும் இப்படி ஆகுமா?  என் ஆயுளில் காண்பேனா?  சந்தேகம் தான். 

சில தினங்ககளில் அங்கிருந்த தென்னிந்திய அசோஷியேஷனுடன்  பரிச்சயம் ஏற்பட்டு அவர்களோடு சேர்ந்து சுற்றுலாப் பயணம் சென்று வந்தேன்.

கோவில்களுக்கும் அழைத்துச் சென்றார்கள்.
அப்போதுதான் ஆரம்பித்தது என் மன வருத்தம்.

20, 30 வருடங்களாக மேல்நாட்டிலேயே இருந்துவரும் சிலரிடம் இந்தியாவுக்குத் திரும்பி வருவது பற்றிக் கேட்டவுடன் அவர்கள் முகம் சுருங்கியதைப் பார்த்து நான் வருந்தினேன்.

“இங்கிருக்கும் டிசிப்ளின் அங்கு வராது… க்லீன்லினெஸ்,  பங்க்சுவாலிட்டி இதெல்லாம் அங்கு சரிப்படாது”  என்றாள்  பேண்ட்டும், டி ஷர்ட்டும் அணிந்த 70 வயது இந்திய மாது கல்யாணி.

‘கரெண்ட் கட், கேஸ் சிலிண்டருக்கு அலைவது, நெரிசல், சண்டை, கூச்சல்… போதும் போதும்” என்று அலுத்துக் கொண்டார் ‘இங்கிருந்து அங்கு சென்று வேலைபார்த்து ஓய்விலிருக்கும்’ தென்னிந்தியர் மூர்த்தி.

“இங்கே எங்களுக்கு சீனியர் பென்ஷன் வருகிறது.  ஹெல்த் செக் அப் கிடைக்கிறது. பஸ், ரயிலில் சலுகை தருகிறார்கள்.  எல்லாவற்றையும் விட்டுவிட்டு அங்கே வந்து அவஸ்தைப்பட நாங்கள்  தயாராக இல்லை” – இது ஒரு புடவை கட்டிய தமிழ் பேசும் மாமியின் அங்கலாய்ப்பு.

பொறுத்தது போதுமென்று நான் மெதுவாக ஒரு கேள்வி கேட்டேன். 

“எதனால் இந்தியாவில் இதெல்லாம் சாத்தியமில்லை? உங்களுக்கு என்ன தோன்றுகிறது?”

“இங்கு சட்டம், ஒழுங்குகளை குடிமக்கள் மட்டுமின்றி கீழ்மட்ட அரசாங்க, பொது நல ஊழியர்கள் முதற்கொண்டு உயர்மட்ட அதிகாரிகள் வரை அனைவரும் கடைப்பிடிக்கிறார்கள்” என்று முந்திக் கொண்டு ஒருவர் பதில் சொன்னார்.

“மக்களாகட்டும், தெரு சுத்தம் செய்யும் நபர், மெகானிக், தோட்டக்காரன் போன்ற தொழிலாளியாகட்டும் அனைவரும் எது செய்தாலும் ‘இது லீகலா? இல்லையா?’ என்று தெரிந்து கொண்டே செய்கிறார்கள்” என்றார் ஒருவர்.

“ஆமாம்.  எங்கள் சொந்த வீடுதானே என்று கழிப்பறையில் பைப்  கனெக்ஷன் குடுத்து டிஷ்யூ பேப்பர் தொல்லையிலிருந்து மீளலாம் என்று பார்த்தால் ப்ளம்மர் அது இங்கு சட்டப்படி குற்றம் என்று சொல்லி பணம் தருவதாகச் சொன்னாலும் மறுத்து விட்டான். சட்டத்தை மீறினால் கடுமையான அபராதம். 

சம்பாதித்ததெல்லாம் போய்விடும். தொலைந்தோம்!” என்றாள்  ஒரு பெண்மணி.

“ஒரு முறை நான் கார் ஓட்டிச் சென்றேன்.  நடுவில்  தலை சுற்றல் வந்து விட்டது. பிளட் பிரஷர் பிராப்ளம்.  வழியில் ஒரு கடையில் காபி குடிக்கலாம் என்று காரை நிறுத்தி உள்ளே சென்றேன்.  வந்தது வம்பு.  அது நோ பார்க்கிங் ஏரியா.  காரை “டோ” செய்து இழுத்துச் சென்று விடுவார்கள்.  டிராபிக் போலிஸ் வந்து கேள்வி கேட்டான். 

இப்போது நான் ரத்த அழுத்தம், தலை சுற்றல் என்று உண்மையைக் கூறினால், என் டாக்டரின் மேல் அபராதம் விழும்.  ‘அப்படிப்பட்ட உனக்கு  லைசென்ஸ் ரத்து செய்யச் சொல்லி ஏன் சிபாரிசு செய்யவில்லை?’ என்பான்.  ஒரே திண்டாட்டம்.  ஒரு வழியாக ஏகப்பட்ட அபராதம் கட்டி தப்பித்தேன். தலைவலி போய் திருகுவலி வந்த கதையாக ஆயிற்று” என்று அன்று நடந்ததை இன்று நடப்பது போல்  விவரித்தாள்  அந்த பாண்ட்  போட்ட மாமி.  
சலுகை காட்டாத சட்டங்கள்! என்றுணர்ந்தேன்.
வீடு திரும்பிய பின்னும் அதே ஆலோசனைகள்.

“என்னம்மா? ஏதோ போலிருக்கிறாய்?” முகம் பார்த்து கரிசனத்துடன் கேட்டான் என் மகன்.

“நம் நாட்டை அவர்கள் குறை சொல்வது எனக்குப் பிடிக்கலைடா” என்றேன்.

“இங்குள்ள சட்டங்களுக்கு பயந்தும், அவர்கள் கொடுக்கும் சலுகை, முதியோர் பென்ஷன் பணத்திற்கு மயங்கியும் அப்படிப் பேசுகிறார்கள், அம்மா!” ஆறுதல் கூறினான் பிள்ளை.

“நான்  வாடகை வீட்டை காலி செய்துவிட்டு,  சொந்த வீட்டிற்கு வந்தபோது, வாடகை வீட்டை இரண்டு நாட்கள் உழைத்து அத்தனை சுத்தம் செய்து கொடுத்தேன்.  ஆனாலும் அந்த ஏஜென்ட் சுத்தம் போதவில்லை என்று சொல்லி என்னிடம் 200 டாலர் வசூலித்துவிட்டான். இங்கெல்லாம் எல்லாவற்றிற்கும் சட்டம்தான்.  ஒன்றும் செய்ய முடியாது.  எங்கள் சம்பளத்தில் ஏகப்பட்ட டாக்ஸ் பிடித்து, சீனியர் சிடிசனுக்கும், வேலையிலாதவர்களுக்கும் படியளக்கிறது அரசாங்கம்”  என்று தொடர்ந்து விளக்கினான் மகன்.

நான் பெருமூச்சு விடுவதைத் தவிர வேறொன்றும் செய்யத் தோன்றாமல் தூங்கிப் போனேன்.

நான் கிளம்பும் நாளும் வந்தது. ஏர் போர்ட் செல்லும் வழியில் என் கண் கலங்கியதைப் பார்த்து என் மகனும் நெகிழ்ந்தான்.

“அம்மா! நம் இந்தியாவின்  ‘பி.பி.எல்’ அதாவது ‘பிலோ பாவர்ட்டி லைன்’ மிக அதிகம்.  ‘வறுமைக் கோட்டிற்கு கீழே இருப்பவர்கள்’ என்று சொன்னால் இன்னும் நன்றாகப் புரியும். 1.25 அமெரிக்கன் டாலர் வருமானம் ஒரு நாளைக்குக் கிடைக்கவில்லை என்றால் அந்த பிரஜை பி.பி.எல்லில் இருப்பதாக உலக வங்கிக் கணக்கெடுப்பு கூறுகிறது.  உலக மக்கள் தொகையான 7.18 பில்லியனில் இந்திய மக்கட் தொகை 1.21  பில்லியன்.  இந்திய மக்களில் 40% பேர் வறுமைக் கோட்டிற்கு  கீழே உள்ளனர். ஆனாலும் மற்ற நாடுகளை விட குற்றத் தொகை மிகவும் குறைவு. 

மேல் நாடுகளில் 1% வேலை இல்லாத் திண்டாட்டம் வந்தாலே கார் திருட்டு, வீடு புகுந்து கொள்ளை, கொலை போன்றவை சர்வ சகஜம்.  ஆனால் நம் இந்தியர்களிடம் திருப்தி உணர்வு அதிகம்.  தர்ம உணர்வு அதிகம்.  மதம், பாவம், புண்ணியம் போன்றவற்றால் அமைதியாகவும், திருப்தியாகவும் வாழும் குணம் உள்ளது”  என்று என் மகன் பேசப் பேச அமைதியற்றிருந்த என் மனதிற்கு ஆறுதலாகவும் பெருமையாகவும் இருந்தது. 

“ஆமாண்டா, கண்ணா!  நீ சொல்வது உண்மைதான்.  இங்கே மேல் நாட்டில் எங்கு பார்த்தாலும் சட்டத்தின் கெடுபிடிதான். சுதந்திர உணவு இருப்பதாகத் தெரியவில்லை.  நம் நாட்டில் பொதுவாக, ‘பெரிசா சட்டம் பேச வந்து விட்டான்’ என்று வசை பாடுவார்களே, தவிர ரத்தத்தில் ஊறிய தர்மம், அதர்மம், பாவம், புண்ணியம் என்ற பதங்களின் உட்பொருள் அறிந்தவர்கள் நம் மக்கள்.  சாதாரண  மனிதன் சட்டத்தின் இடத்தில் தர்மத்தை நிறுத்தியிருக்கிறான்.

‘த்ர்மோ ரக்ஷதி ரக்ஷிதஹ’ என்பதே நம் பண்பாடாக உள்ளது.  நம் நாட்டை நினைக்க  ரொம்ப பெருமையா இருக்குடா!” கண்களை துடைத்துக் கொண்டேன்.

“சுவாமி விவேகானந்தர், ‘வெளிநாட்டுக்குச் செல்லும் முன் பாரத தேசத்தை நான் நேசித்தேன். திரும்பி வந்தபின் பாரத நாட்டின் ஒவ்வொரு மண் துகளையும் வணங்குகிறேன்’ என்று கூறியதை படித்தது நினைவுக்கு வருகிறது, அம்மா!” என்று என் மகன் கூறிய போது நான் அழுதே விட்டேன்.

ஆதரவாக என்  தோளை  அணைத்து நடத்திச் சென்று  தாய் மண்ணான பாரத நாட்டிற்கு என்னை விமானம்  ஏற்றி வைத்தான் என் அன்பு மகன்.

(மங்கையர்மலர் ‘ஜெயஸ்ரீ ராஜ் நினைவுச் சிறுகதைப் போட்டி’ ரூ3000/ ஆறுதல் பரிசு – பெற்று நவம்பர் 16-30, 2015 ல் வெளிவந்தது).

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,100SubscribersSubscribe
Exit mobile version