எழுதியவர்: ஜெயஸ்ரீ எம். சாரி
சாரு திருமணம் முடிந்து நவம்பர் மாதம் மத்திய இந்தியாவின் மையப் பகுதியில் ஒரு நகரத்தில் தன் கணவன் சேகருடன் வந்தடைந்தாள். சில நாட்களுக்கு பின் ராணுவத்தில் பணியிலிருக்கும் சேகர் தன் பணியிடம் சென்றான். சாரு தன் மாமனார், மாமியாருடன் வசித்து வந்தாள்.
குளிர் காலத்தின் சூரிய உதயமானது அவளுக்கு ரம்மியமாய் இருந்தது. வானமானது மூடுபனியால் சூழ்ந்திருந்தாலும் அதனை கிழித்துக் கொண்டு வரும் செந்நிற சூரியக்கதிர்களை கண்டு மகிழ்ந்தாள்.
பூத்துக் குலுங்கும் வண்ண வண்ண அழகான பூக்களும், பூந்தோட்டங்களை அணிவகுக்கும் வண்ணத்துப்பூச்சிகளும், தேனீக்களும், ரீங்காரமிடும் வண்டுகளும் அவளின் மதிய நேரத்தை மணிமணியாக்கின.
டிசம்பரில் ஆறு டிகிரி வரை சென்ற குளிரையும் அணு அணுவாக ரசிக்கும் படியாக அமைந்தது.
தைப்பொங்கலை உள்ளூர் மக்களுடன் கொண்டாடினாள்.
சங்கராந்தியையும் அவ்வூர் வழக்கப்படி தன் புதுத் தோழிகளுடன் கொண்டாடி மகிழ்ந்தாள் சாரு. திருவிழாக்களில் சமுதாய கண்ணோட்டத்தில் கொண்டாடும் மக்களை நினைத்து பெருமிதம் கொண்டாள்.
கொஞ்சம் கொஞ்சமாக குளிரும் குறையத் தொடங்கியது.
காலை 5.30 மணிக்கே நல்ல வெளிச்சம் வந்து அவள் கண்களில் அடித்தது. கோடைக் காலத்தில் பூத்துக் குலுங்கும் ‘குல்மோஹர்’ போன்ற மரங்கள் வெயிலுக்கு இதம் அளித்தது, சாருவுக்கு. வேப்பம்பூவின் வாசமும், வண்ணமும் அவளின் கண்களுக்கு விருந்தாயின. கரும்புச் சாறும், மாங்காயின் ஜூஸும், மாம்பழ ரசமும், தர்பூசணியும், கிர்ணிப்பழமும் நல்ல மருத்துவமானது.
அவள் வெளியில் செல்ல முற்படும் போதெல்லாம், ” சாரு, நம்ம ஊரு வெயில் மாதிரி இல்லை, இங்கே. காட்டன் துப்பட்டாவினால் முகத்தை மூடிக் கொள். தண்ணீர் பாட்டில் வைத்துக் கொள், ஒரு வெங்காயம் எடுத்துக் கொண்டு போ,” போன்ற வாக்கியங்களை அவள் மாமியார் கூறுவார்.
இப்படியே சில நாட்களில் வெயிலின் தாக்கம் 48 டிகிரியானது. ஆறு மாதங்களில் தட்பவெப்பத்தில் ஏற்பட்ட மாற்றத்தை எண்ணினாள்.
தன் கணவரைப் போன்ற படைவீரர்களின் மன தைரியத்தை நினைத்து சிலாகித்துப் போனாள். தங்களின் ஒரே மகனை ராணுவத்திற்கு அனுப்பிய தன் மாமனார்- மாமியாருக்கு நன்றி தெரிவித்தாள் சாரு.
அந்தக் கிராமத்தில் இளைஞர்கள் அதிகம் இருந்தனர். சரியான வழிகாட்டல் இருந்தால் இவர்களுக்கும் நல்ல எதிர்காலம் அமைய முடியுமே என்று சாருவுக்கு யோசனை வந்தது. கடும் குளிரையும், சுட்டெரிக்கும் வெயிலையும் தாங்கும் இந்தக் கிராமத்து இளைஞர்களால் நம் நாட்டின் பல இடங்களில் இருக்கும் தட்பவெப்ப நிலையை தாங்கும் உடல் பலம் இருக்கும். சிறிது மனோபலத்திற்கு வழிகாட்டினால் இவர்கள் நாளைய ராணுவ வீரர்களாக முடியும் என்று சாரு நம்பினாள்.
தன் எண்ணத்தை தோழிகளுக்கும், முன்னாள் ராணுவ வீரர்ககளும் தெரிவித்து அவர்களின் உதவியை நாடினாள்.
தேசிய கொடி நாளாம் டிசம்பர் ஏழாம் தேதியன்றே தன்னுடைய எண்ணத்தை செயலாற்ற முயன்றாள்.
முப்படை வீரர்களின் சேவையையும், முன்னாள் ராணுவ வீரர்களுக்கும், அவர்தம் குடும்பங்களுக்கும், தியாகியான முப்படை வீரர்களின் குடும்பங்களுக்கும் நம் தேச மக்களின் உதவியின் இன்றியமையாததையும் விளக்கி, மகாகவி பாரதியாரின் வாக்கான “நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர் நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்’ என்பதின் பொருளை உள்ளுர் மொழியில் அங்குள்ளோர்களுக்கு விளக்கினாள்.
முன்னாள் ராணுவ வீரர்களின் ஒத்துழைப்புடனும், உதவியுடனும் இளைஞர்களுக்கு ராணுவத்தில் சேர விழிப்புணர்வை ஏற்படுத்தினாள். இளைஞர்களும் ஆர்வத்துடன் பங்கேற்றதை அறிந்த சாருவின் நம்பிக்கை இரட்டிப்பானது. ஆறு ஆண்டுகள் சென்றதே தெரியவில்லை. சாருவின் கணவனும் ராணுவத்தில் நல்ல போஸ்ட்டில் அமர்த்தப்பட்டு சாருவை தன்னுடன் அழைத்துச் சென்றான்.
ஒருநாள் தன் பணியிலிருந்து திரும்பிய சேகர், ” சாரு, இங்க வந்து பாரு, யாரு வந்திருக்காங்கன்னு,” என்றான்.
தன் ஈரக் கையை புடவையில் துடைத்தப் படியே வந்த சாரு ஆச்சரியம் அடைந்தாள்.
“நமஸ்தே! எங்களை தெரிகிறதா?” என்று கேட்ட இரு இளைஞர்களும் ராணுவ உடையில் மிளிர்ந்தனர். சாருவும் உணர்ச்சிப் பெருக்கோடும் ஒரு சலாம் வைக்க நால்வரும் சிரித்து மகிழ்ந்தனர்.
இன்று அவர்களால் விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்ட இரண்டு கிராமத்து இளைஞர்கள் ராணுவத்தில் பணியாற்றும் சமயத்தில் தன் குவாட்டர்ஸ்க்கு வந்த போது சாரு தன் கிராம மக்களின் ஒத்துழைப்பை ஆத்மார்த்தமாக நினைவுக் கூர்ந்தாள்.
சேகரும் சாருவின் முயற்சியையும், அவளுக்கு உதவியவர்களையும், இளைஞர்களின் உத்வேகத்தையும் பாராட்டினான்.
சாருவிற்கோ மனதில் ஆத்மார்த்தமான உணர்வு ஏற்பட்டது.