― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்காட்சி தந்தார் கணபதி!

காட்சி தந்தார் கணபதி!

- Advertisement -

திருப்பூர் கிருஷ்ணன்

*ஆஞ்சநேயரும் சுக்கிரீவனும் அங்கதனும் மற்ற வானரங்களும் ஜாம்பவானும் வியப்போடு பார்த்துக் கொண்டிருந்தார்கள். ராமபிரான் முகத்தில் அன்று ஏனோ அப்படியொரு கடும் சீற்றம்.

லட்சுமணன் ராமன் அருகே கம்பீரமாக நின்றிருந்தான். ராமன் விழிகளும் லட்சுமணன் விழிகளும் எதிரே தெரிந்த கடலையே பார்த்தவாறிருந்தன. கடல் அச்சத்தோடு அதிக ஓசையெழுப்பாமல் அமைதி காத்தது.

ராமன் விரல்களால் தனது வில்லின் நாணை மீட்டி ஒலியெழுப்பினான். அந்த ஒலி இடியோசைபோல அந்தப் பிரதேசத்தையே ஒரு கலக்குக் கலக்கியது.

பின்னர் ராமன் பேசலானான். கடலும் மலையும் காற்றும் ஸ்ரீராமனின் அந்தப் பேச்சை உற்றுக் கேட்டது.

`சமுத்திர ராஜனே! என் மனைவி இருக்கும் இலங்கைக்கும் எனக்கும் இடையே ஏன் இப்படித் தடையாய்க் குறுக்கே கிடக்கிறாய்?

நான் இலங்கை செல்ல உடனே வழிவிடு. ராவணனோடு போரிட்டு என் சீதாதேவியை நான் மீட்க வேண்டும். மூன்று நாளாக உன் தரிசனம் வேண்டித் தவமிருக்கிறேன். எனக்கு நீ வழிவிட வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன்.

ஆனால் எல்லாம் விழலுக்கிறைத்த நீராய் இருக்கின்றன. உன்னிடமிருந்து எந்த பதிலையும் காணோம். என் முன் நீ தோன்றவும் காணோம்.

நல்லது. இனி பொறுப்பதில்லை. இதோ இப்போது என் அம்புக்கு நீ பதில் சொல்ல வேண்டும். வேறு வழியில்லை எனக்கு!`

ராமன் தன் அம்பறாத் தூணியிலிருந்து அம்பை எடுப்பது கண்டு அண்ட சராசரங்களும் திகைத்தன. அடுத்து என்ன நடக்குமோ என அத்தனை உயிர்களும் அச்சத்தோடு பார்த்தவாறிருந்தன.

அப்போதுதான் அந்த அதிசயமான சம்பவம் நடந்தது.

யார் அது? கடலின் நுரைபொங்கும் அலைகளின் மேல் நீல நிறத்தில் ஒரு தேவபுருஷன் தோன்றி கைகூப்பியவாறு நிற்கிறானே?

ஸ்ரீராமன் வியப்போடு அந்த தேவபுருஷனைப் பார்த்தான். வசீகரமான தோற்றம் கொண்ட அவன் குளிர்ந்த குரலில் பேசத் தொடங்கினான்:

`பிரபோ! என்னை மன்னியுங்கள். நீங்கள் சந்திக்க விரும்பிய கடலரசன் நான்தான். இவ்வளவு நேரம் உங்கள்முன் தோன்றாமல் காலதாமதப் படுத்தியதற்காக முதலில் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.

என் காலதாமதத்திற்கு ஒரு காரணம் இருக்கிறது! எனக்கு முன்னர் ஒரு கட்டளை இட்டுவிட்டு இப்போது அதை மீறச் சொன்னால் நான் என்ன செய்வது? இந்த மனக் குழப்பமே என் கால தாமதத்திற்கான காரணம்!`

ராமன் திகைத்தவாறு கேட்டான்:

முன்னர் ஒரு கட்டளை இட்டேனா! எப்போது? என்ன கட்டளை அது?

`பிரபோ! தாங்கள் யார் என்பதைத் தாங்கள் அறிய மாட்டீர்கள். ஆனால் நான் அறிவேன். தாங்களே அல்லவா பரம்பொருள்!

பஞ்சபூதங்கள் ஒவ்வொன்றுக்கும் ஓர் இயல்பு என ஆதியில் வகுத்தவர் தாங்கள் தானே? நெருப்பு சுடும் என்றும் நீர் குளிரும் என்றும் இவ்விதம் பலவாறாக பஞ்ச பூதங்களுக்கு இலக்கணம் சமைத்தது மூலப் பரம்பொருள் தானே?

அது ஒரு கட்டளை. என்றும் மீறப்படக் கூடாத கட்டளை. கடல் என்றால் குறுக்கே கிடக்க வேண்டும், வழிவிடக் கூடாது என்பது அப்படிப்பட்ட ஆணைகளில் ஒன்று.

அவ்விதமிருக்க இப்போது எல்லோருக்கும் வேறுமாதிரி நடந்துகொள், எனக்கு மட்டும் வழிவிடு என்றால் நான் என்ன செய்யட்டும்? நீங்களே சொல்லுங்கள்!

நீங்கள் வகுத்த விதியை நீங்களே மீறினால் பின் உலகத்திற்கு நீங்கள் வழிகாட்டி என்பது எப்படி உண்மையாகும்?`

கடலரசன் பேச்சை வியப்போடு வானரர்கள் கேட்டுக்கொண்டிருந்தார்கள். கைகூப்பியவாறு கடலரசன் தொடர்ந்து பேசலானான்:

`பிரபோ! கடல் தன் இயல்பை மாற்றிக் கொள்ளாது. பஞ்ச பூதங்கள் எப்படியிருக்க வேண்டும் என்பது முன்னரே விதிக்கப்பட்ட விதி.

இலங்கையை அடைய நீங்கள் கடலின் மேல் அணைகட்டுங்கள். அந்த அணை வழியாக நடந்துசென்று இலங்கையை அடையுங்கள்.

இப்படிச் செய்யலாம் என்று சொல்லவே நான் வந்தேன். மற்றபடி என் இயல்பை நான் மாற்றிக் கொள்ள இயலாது பிரபோ. மன்னியுங்கள்!`

எல்லோரும் பார்த்துக் கொண்டிருந்தபோதே கடலரசன் கூப்பிய கையுடனேயே நீரில் கரைந்து கலந்து மறைந்தான். ராமபிரான் மூலப் பரம்பொருளின் வடிவமே என்பதைக் கடலரசன் பேச்சின் மூலம் உணர்ந்த வானரங்கள் பக்தியோடு கைகூப்பின.

இந்த உண்மையை நான் ஏற்கெனவே அறிவேன் என்பது போலான பெருமிதம் அனுமன் முகத்தில் தென்பட்டது. அனுமனும் கைகூப்பி நின்றான்.

அப்படியானால் அணை கட்ட என்ன செய்வது? அந்தப் பணியை எப்போது எவ்வாறு தொடங்குவது?

ராமன் சுக்கிரீவனிடம் கேட்டான். அவன் தானே வானரங்களின் அரசன்! வானரங்களைக் கலந்து ஆலோசித்து அவன்தானே ஒரு முடிவெடுக்க வேண்டும்?

அதற்குள் நளன், நீலன் ஆகிய வானரர்கள் ராமன் முன் பணிந்து கைகூப்பி நின்றார்கள்.

தாங்கள் தண்ணீரில் எதைப் போட்டாலும் அது மிதக்கும் என்ற சாபம் தங்களுக்கிருப்பதால் யார் கல்லைக் கொண்டுவந்து தங்களிடம் கொடுத்தாலும் தாங்கள் அதைக் கடலில் தூக்கிப் போட்டு மிதக்கச் செய்ய முடியும் என அவர்கள் தெரிவித்துக் கொண்டார்கள்.

வானர சேனையிடையே இந்தத் தகவலைக் கேட்டதும் புதிய உற்சாகம் தோன்றியது. ஜெய் ஸ்ரீராம் என வானரங்கள் செய்த முழக்கம் அந்தப் பகுதியைக் கிடுகிடுக்க வைத்தது.

இங்கிருந்தே அணை கட்டத் தொடங்குவோம். பணியை ஆரம்பிக்கலாமா? வானரங்களை கல்லைக் கொண்டுவரச் சொல்லி அனுப்பலாமா? கட்டளையிடுங்கள் பிரபோ! என பவ்வியமாய்க் கேட்டான் சுக்கிரீவன்.

`நாம் செய்யப் போவது ஒரு மாபெரும் பணி. ஆற்றின் குறுக்கே அணை கட்டியிருக்கிறார்களே தவிர இதுவரை கடலுக்குக் குறுக்கே யாரும் அணைகட்டி நாம் கேட்டதில்லை.

எனவே இந்தப் பணி விக்கினமில்லாமல் வெற்றிகரமாக நிறைவடைய விநாயகப் பெருமானின் அருள் தேவை. பிள்ளையார் பூஜை செய்துவிட்டுப் பின்னர் பணியைத் தொடங்கலாம்!` என அறிவித்த ராமபிரான் விநாயகர் பூஜைக்கு ஆயத்தமானான்.

அனுமன் கடற்கரை மணலாலேயே அழகாக பிள்ளையார் உருவத்தைச் சமைத்தான்.

பிள்ளையார் பிடிக்கக் குரங்காக முடியும் என்பார்கள். இப்போது குரங்கு வடிவில் இருக்கும் அனுமனே பிள்ளையாரைப் பிடித்ததாலோ என்னவோ பிள்ளையார் மிக அழகான மணல் சிற்பமாக உருவானார்.

பிள்ளையார் சிலையின் அழகில் சொக்கிக் கிறங்கிய வானரர்கள், பல மரங்களிலிருந்து மலர்களையும் பல இடங்களிலிருந்து அருகம்புல்லையும் தாவித் தாவி சேகரித்துக் கொண்டுவந்தார்கள்.

ஸ்ரீராமபிரான் உள்ளார்ந்த பக்தியோடு பிள்ளையாருக்கு விசேஷ பூஜை செய்து வழிபட்டான்.

அந்தப் பிள்ளையார் யோசித்தார். தன் முன் நிற்கும் ஸ்ரீராமன் உண்மையில் தன் மாமனல்லவா? தன் அன்னை மீனாட்சியின் அண்ணனல்லவா திருமால்? திருமாலின் அவதாரம் தானே ராமாவதாரம்? ராமனை இனியும் காக்க வைக்கக் கூடாது.

சிலை வடிவிலிருந்த பிள்ளையார் உண்மையிலேயே ஸ்ரீராமன் முன் பிரத்யட்சமானார். முறம் போன்ற பெரிய காதுகளும் தொப்பை வயிறுமாய் அழகே வடிவாகத் தங்கள் முன் தோன்றிய விநாயகரை ஸ்ரீராமர் உள்ளிட்ட அத்தனை பேரும் இருகரம் கூப்பித் தொழுதார்கள்.

தும்பிக்கையுடன் விநாயகர் நேரில் தோன்றியதைப் பார்த்ததும் கட்டாயம் அணை கட்டப்படும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் பிறந்தது. விநாயகர் பேசத் தொடங்கினார்:

`கவலை வேண்டியதில்லை. அணை கட்டும்போது அந்தப் பணியின் இடையே எந்த விக்கினமும் வராமல் நான் பார்த்துக் கொள்கிறேன். அணையைக் கட்டத் தொடங்குங்கள்.

ஆனால் இங்கிருந்து இலங்கைத் தீவு சற்றுத் தொலைவில் உள்ளது. கடலின் அகலம் இங்கே அதிகம். இன்னும் சற்றுதூரம் தாண்டி ராமேஸ்வரம் சென்றால் அங்கிருந்து இலங்கைக்கான கடலின் அகலம் குறைவு. 

உங்கள் உழைப்பும் நேரமும் கணிசமான அளவு மிச்சமாகும். தள்ளிப் போய்க் கட்டினால், சுற்றி வளைக்காமல் இலங்கைக் கோட்டையின் வாயில் பக்கத்திற்கே போய்விடலாம்.

ஆகையால் அங்கு நடந்து சென்று அங்கிருந்து அணை கட்டத் தொடங்குங்கள். உங்கள் பணி வெற்றிபெற என் ஆசி எப்போதும் உண்டு. சீதாதேவி காத்திருக்கிறாள். அணை கட்டுவதை இனியும் தாமதப் படுத்தாதீர்கள்!`

இப்படிக் கூறிய விநாயகர் ஆசி வழங்கிவிட்டு அனுமன் சமைத்த மணல் விநாயகர் பிரதிமையின் உள்ளே கலந்து மறைந்தார். வானரங்கள் மகிழ்ச்சியோடு ஆர்ப்பரித்தன.

சுக்கிரீவன் அடுத்து என்ன செய்ய வேண்டும்? கட்டளையிடுங்கள் பிரபோ! என ராமபிரானின் ஆணைக்காகக் காத்திருந்தான்.

விநாயகர் சொல்படி நடப்போம். எனவே நடப்போம்! என முறுவலுடன் ராமன் கூறியதும், அனைவரும் மகிழ்ச்சியோடு விநாயகர் எங்கிருந்து அணைகட்டச் சொன்னாரோ அந்த இடத்தை நோக்கி ஸ்ரீராமன் தலைமையில் விரைவாக நடக்கத் தொடங்கினார்கள்.

எல்லோர் மனத்திலும் அப்போதே அணை கட்டப்பட்டு விட்டதைப் போன்ற நம்பிக்கை தோன்றியது.
………
(வேதாரண்யத்திலிருந்து சமுத்திரக் கரை ஓரமாகவே தெற்காக வந்தால், வேதாரண்யத்திற்கும் உப்பூருக்கும் இடையே தொண்டி என்ற இடம் இருக்கிறது.

முதலில் ராமர் இங்கிருந்துதான் அணைகட்ட உத்தேசித்தார் என்றும் விநாயகர் கூறியபடியே பின்னர் ராமேஸ்வரத்திலிருந்து அணை கட்டினார் என்றும் ஒரு கர்ண பரம்பரைக் கதை சொல்லப்படுகிறது.

இந்தக் கதையை காஞ்சிப் பரமாச்சாரியாரும் தமது தெய்வத்தின் குரல் நூலில் குறிப்பிட்டுள்ளார்.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version