ஒருத்தியின் மகன்
– ஜெயஸ்ரீ எம். சாரி-
மார்கழி மாதத்தின் இளங்குளிரில் தன் ஃபிளாட்டில் கிடைத்த இடத்தில் அழகான சிக்குக்கோலத்தை போட்டுக் கொண்டிருந்தாள் மீரா. அப்போது பக்கத்துத் தெருவில் உள்ள பெருமாள் கோயிலில் இருந்து வந்த திருப்பாவை பாசுரமான ‘ ஒருத்தி மகனாய் பிறந்து’ கேட்டபடியே கோலத்தை பூர்த்தி செய்தாள். அப்போது அங்கே வந்த அவளது கணவன் ஸ்ரீகாந்த், ” என்ன மீரா, காலையிலேயே யோசனை?” என்று கேட்க, ” ஒண்ணுமில்லை. நிறைய புதுப்புது பாடகர்கள் திருப்பாவை பாடினாலும் அதை கேட்கறச்சே எம்.எல்.வி அம்மா குரலிலும் கேட்கணும் மாதிரி ஒரு ஆசை,” என்றாள்.
“ஆஹா! மலரும் நினைவுகளுக்குள் போயிடாதே, சீக்கிரம் வேலையை முடி, வாசு வீட்டு ஃபங்கஷனுக்கு போணுமே. ஞாபகம் இல்லையா,” என்றான்.
“ஆமா. நல்லதாச்சு ஞாபகப்படுத்தினீங்க,,” என்றவாறு கோலப்படியை வைத்து வீட்டிற்குள் ஓடினாள், மீரா.
குழந்தை நிஷாவை எழுப்பி, அவளை ரெடி செய்து அழகான புடவையில் அமர்க்களமாய் இருந்தாள் மீரா. மூன்று பேரும் அட்டகாசமாய் அலங்கரிக்கப்பட்ட வாசுவின் ஃபளாட்டை அடைந்தனர். ஃப்ளாட்டே விழாக்கோலம் பூண்டிருந்தது. வாசுவும், தேவியும் பம்பரமாக சுழன்று வந்தவர்களை வரவேற்றனர்.
அவர்களின் சுறுசுறுப்பையும், அவர்களின் முகத்தில் இருந்த சந்தோஷத்தையும் பார்த்துக் கொண்டே இருந்த மீராவிற்கு பழைய நாட்கள் கண்முன் நிழலாடின.
ஸ்ரீகாந்தும், வாசுவும் கல்லூரி நண்பர்கள். வாசு கிராமத்தில் இருந்து வந்ததால் ரொம்ப கூச்ச சுபாவுடன் இருப்பான். அவனது குடும்பத்தினரின் வெள்ளத்தியான மனதால் ஸ்ரீகாந்தின் வாழ்க்கையில் பிரிக்க முடியாதவனார்கள். ஒருவரின் வெற்றியில் பொறாமை கொள்ளாத நட்பு அவர்களது. ஸ்ரீகாந்திற்கு திருமணமான அடுத்த வாரமே தேவியை கைப்பிடித்தான் வாசுவும். இரு ஜோடிகளின் அன்னியோத்தை அவர்கள் நட்பு வட்டமே பெருமையாய் பார்த்தது. வருடங்கள் ஓடின. ஸ்ரீகாந்த்-மீராவின் குட்டி நிஷாவும் பிறந்தாள்.
வாசு தம்பதியரும் தம் வாரிசுக்காக காத்திருந்தார்கள். நிஷாவிடம் அன்பை பொழிந்தார்கள்.
வாசுவின் குடும்பத்தாரும் தேவிக்கு சப்போர்ட்டாகவே இருந்தார்கள். மருத்துவமும் குறை காணபோதும் கடவுளின் கருணைக்காக காத்திருந்தார்கள், அவர்கள். இதற்கிடையில் தேவியின் அண்ணனும் மூளைக்கட்டியினால் பெரிதும் பாதிப்படைந்ததார். அவருடைய மனைவியும் இரண்டாவது முறையாக கர்ப்பம் தரித்திருந்த நேரமது.
ஒரு காலைப்பொழுதில் அந்தக் கருவும் வந்துவிட்டதே என்று வருத்தப்பட்ட தேவியின் அண்ணனிடம் ஸ்ரீகாந்த் வரப்போகும் குழந்தையை பார்த்துக் கொள்ளும் பொறுப்பு தன்னுடையது என்றான். தேவிக்கும் இதில் உடன்பாடு இருந்தாலும் ” எதுக்கும் நம்ப அம்மாவை ஒரு வார்த்தை கேட்கலாமே,” என்றவளை ” அவர்களுக்கு நான் புரிய வைக்கிறேன், கவலைப்படாதே,” என்று வாஞ்சையுடன் தேவியிடம் கூறினான். வாசு அவன் அம்மாவிடம் இந்த விஷயத்தை கூறியவுடன், “ஏண்டா வாசு, நாமே அந்தக் குழந்தையை நம்ம குடும்ப வாரிசா ஆக்கிக்கொண்டால் என்ன. தேவி வீட்டில் கேட்டுப் பார்ப்பாமா?” எனக் கேட்டவுடன் தேவிக்கே சந்தோஷமாகி சின்னக் குழந்தைப் போல் துள்ளிக் குதித்தாள். தேவியின் அண்ணன் குடும்பமும் இதற்கு ஒத்துக் கொண்டார்கள்.
அன்றிலிருந்து தேவியின் அண்ணியை கவனித்துக் கொள்ளும் பொறுப்பை தேவி செய்தாள். வாசுவும், ஸ்ரீகாந்துடன் சேர்ந்து சட்டதிட்டங்களை செய்யத் துவங்கினான்.
வாசுவின் ஃப்ளாட்டில் கூடியிருந்தவர்களின் கைத்தட்டல்களினால் தான் மீரா பழைய நினைவிலிருந்து நிகழ்காலத்திற்கே வந்தாள்.
வாசுவும், தேவியும் அவள் அண்ணியின் குழந்தையாய் நேற்று வரை இருந்த ஸ்ரீநந்தை கையில் வைத்துக் கொண்டிருந்தனர். சட்ட முறையாக இன்று வாசுவும், தேவியும் ஸ்ரீநந்தின் பெற்றோர் ஆனார்கள். இப்போது அவர்கள் குலத்திற்கு குடும்ப வழக்கப்படி ஸ்ரீநந்தை ஏற்றுக்கொள்ளும் வைபவத்திற்காகவே அத்தனை பேர்களும் அங்கு ஆஜராயிருந்தனர்.
புரோகிதர் குழந்தையை பெற்றத் தாயின் மடியில் வைத்துக் கொள்ளச் சொல்லி குழந்தையின் அத்தையான தேவியை கூப்பிட்டு குழந்தையின் பெயரை காதில் சொல்லச் சொன்னார். சில நிமிடங்களில் வாசுவும், தேவியையும் உட்கார வைத்து ஸ்ரீநந்தை அவர்கள் கையில் ஒப்படைத்த தருணம் அங்கிருந்தவர்களுக்கு மிகவும் உணர்வுபூர்வமாக இருந்தது.
குழந்தையை பெற்ற அம்மா மாமியான தருணம், அத்தையோ அம்மாவான தருணம்.
மீரா ஸ்ரீகாந்திடம் ” காலையில் நாம் கேட்ட அதே திருப்பாவை பாசுரமே கொஞ்சம் மாறி ‘ ஒருத்தி மகனாய் பிறந்து சில நாட்களில் ஒருத்தி மகனாய் ஆன ஸ்ரீநந்த்,” எனச் சொல்லி மகிழ்ந்து வாசு- தேவி தம்பதியருக்கு வாழ்த்து தெரிவிக்க சென்றனர்.