
செய்தி:- தமிழக அரசு பொங்கல் பரிசாக தமிழக மக்களுக்கு1000 ரூபாய் அறிவிப்பு.
#APNTrending – ஆயிரத்திற்கு ஒருத்தி
மூன்று நாட்களாக மாலினி மாமி ரொம்பவே மூட் அவுட்டாக இருந்தார். அடுக்களை பாத்திரங்கள் முதல் ஹாலில் சோபா செட் வரை எதையெடுத்தாலும், தள்ளினாலும் டிங்….ண…டொங் என்று எட்டு தெருவிற்கு எதிரொலிக்கும் சப்தம். ஏற்கனவே பலமுறை இடிவாங்கி, அடிவாங்கி, நசுங்கி பழக்கப்பட்ட அந்த பாத்திரங்கள், அதியமான் படைக்கலங்கள் போன்று பரிதாபமாக விழித்தன.
இதையெல்லாம் கோபமாக எடுத்து வைக்கும் போதே background voiceம் உண்டு. கடங்காரன், கட்டல போறவன், யார் வீட்டு சொத்து? இவனுக்கென்ன? இதுபோன்ற பல வசனங்கள் அடுக்குத்தொடரில் அடுப்படியில் உலாவந்தன.
விஷயம் இதுதான். தனது வெள்ளை ரேஷன் கார்டை ஆசையாக எடுத்துக் கொண்டு, வியர்வை வழிய க்யூவில் நின்ற மாமி, இன்னிக்கு green card தானாம். White card sundayயாம்” – பால்கார பச்சையம்மா ஒரு announcement கொடுத்தா..
அதுகூட பரவாயில்ல. ஆத்துக்கு வந்து சேர்ந்து சூடா ஒரு கப் காபி கூட இறங்கல, அதுக்குள்ள மீனாக்ஷி மாமி online chat வந்துட்டா! “மாலினி, ஆயிரம் ரூபா நீ வாங்கிட்டாயா! ஐயையோ! வாங்கலயா! நா எங்காத்துக்காரர flaskல காபி கொடுத்து காத்தாலயே அனுப்பிட்டேன். இவர்தான் first தெரியுமோல்லியோ!”
கடுகு தாளிக்க வைத்த எண்ணையில் தண்ணீர் விட்டாப்போலே பொங்கினாள் மாலினி. அவளுக்கு தனக்கில்லை என்பது மட்டுமல்ல ப்ரச்சினை; மீனாக்ஷி ஆத்துக்காரர் க்யூல நின்னார்ன்னு சொன்னதுதான் தாங்க முடியல.
“ஏன்னா! ஏன்…….. னா! இங்க ஒருத்தி அல்லாடராளே, ஏன்னு கேட்கக் கூடாதா! இந்த வீட்டுக்குத்தானே உழக்கறேன்… சித்த ஒத்தாச கூடாதா!”
அமுது மாமா இதெல்லாம் பழக்கப்பட்டவர். பரப்ரஹ்மரூபம், பஜே பாண்டுரங்கம்னு அவர் கவலயே படாம casualஆ India Australia Match பாத்துண்டிருந்தார்.
இது அடுத்த கொதிப்பு!!
“நாளைக்கு காத்தால நால்ர மணிக்கு ஏந்து பொங்கல் பண்ணுன்னு எழுப்புவல்ல! அப்ப வச்சுக்கறேன் கச்சேரி!” மறுநாள் காலை விச்வரூபத்துக்கு மனசுக்குள் கறுவினாள்.
Matchன் நடுவே அமுது மாமா channel மாத்தினார். Polimer News. “நீதிமன்ற அறிவிப்பு. வறுமைக்கோட்டிற்குக் கீழே உள்ளவர்களுக்கே பொங்கல் பரிசு. மற்றவர்களுக்கு வழங்கக் கூடாது என்று உத்தரவு”.
அதுவேற soundஆ கேட்டுதா! அவ்வளவுதான். இக்கதையின் முதல்பாரா மங்களாசாஸனம் மாமி ஆரம்பித்தாள். நடுநடுவே அமுது மாமாவுக்கும் அர்ச்சன உண்டு.
“தர்மம் ந்யாயம்னு பேசி, பச்ச கார்ட வெள்ளயா மாத்திய மக்கு தன் ஆத்துக்காரர்” என்பதில் மாமிக்கு எந்த doubtம் இல்ல. இவளோட புலம்பலுக்கு, மாலினின்னு பேருக்கு பதில் திருவிளையாடல் தருமின்னு பேர் வச்சுருக்கலாம்.
நீதிமன்ற உத்தரவு அமலுக்கு வர்றதுக்குள்ளே எதித்தாத்து ஸ்ரீவித்யா தான் வாங்கின சாதனைய வேற சொன்னாளா! இது எரியிற கொள்ளில மறுபடியும் எண்ணை.
ஒருவழியாக ஆயிரம் ரூபாய், எல்லா கலர் கார்டுக்கும் உண்டுன்னு announcement வந்ததுதான் தாமசம், கறவைகள் பாசுரத்துக்கு ஒரேடியாக தொத்யோதனம் பிசைந்து வைத்து “இன்னிக்கு full day எல்லார்க்கும் இதான். எனக்கு urgent. நா Ration கடைக்குப் போறேன்னு” பரபரத்தாள்.
“Scootyல போயேண்டி………..” மாமா!
“நோ…..நோ….. அங்கெல்லாம் parking problem.. நம்ம தெரு ஆட்டோகாரன் வரான் . நாங்க ஒரு நாலஞ்சு பேர் சேர்ந்து போறோம். Today No tiffin… only தொத்யோதனம்” – உற்சாக துள்ளல். கிளம்பியாச்சு..
வீடு அமைதியாக இருந்ததால் எந்த தொந்தரவுமில்லாமல் அமுது மாமா நிம்மதியா Match பார்த்தார். டைம் போனதே தெரியல.. ரெண்டு மணியிருக்கும் …. மாமி முகமெல்லாம் பூரிப்புடன் சிரித்துக் கொண்டே ஆட்டொலேர்ந்து இறங்கினாள்.
“இந்த சிரிப்ப பாத்து எத்தன decades ஆச்சு… நல்ல வேள… மாமா mind voice வெளில கேட்கல.
Success….. மாமி, பேட்ட படத்த பாத்துட்டு theatreலேர்ந்து வெள்ள வரச்சே News Cameraக்கு கை காமிக்கறா மாதிரி போஸ் குடுத்தா.
அவளே சொல்லட்டும்னு காத்திருந்தார்.
Autoலேர்ந்து எறங்கின வேகத்துல் Phoneல வேகவேகமா text message….வேற யாருக்கு?…. இந்த மெசேஜ் எல்லாம் அவா apartment association மாமிகளுக்குத்தான்.
“சரி. வெற்றிதான். ஆயிரம் ரூபாய் வாங்கிட்ட. அதுக்கு என்ன ப்ளான் பண்ணீயிருக்க?”
எப்படியும் தன்ன மதிச்சு, அவ சொல்ல மாட்டான்னு தெரிஞ்சும் கேட்டார்.
“ஏன்னா! லூஸா நீங்க?”
“ஏம்மா? என்ன தப்பா கேட்டேன்?”
“இப்பதான autoக்கு 300 கொடுத்தேன்”
“என்னாது? 300 ரூபாயா?”
“ஆமான்னா! நம்ப சுரேஷ் ஆட்டோ.. நல்ல பையன். இன்னிக்கு வேற சவாரி போகாமல் எனக்காகக் காத்துண்ட்ருந்தான்.”
“அது சரி….. நீங்க எல்லாரும்னா சேர்ந்து……” மாமா முடிக்கறத்துக்குள்,
“ப்க்…..கும்….” என தோளை இடித்தாள். “அதுகள்ளாம் ஏற்கனவே வாங்கிடுத்து போல. ஒரேயடியா ஒரு அல்டிண்டா! அதான் நானே தனியா போனேன்.”
“சரிவிடு… மீதி எழுநூறு.”
“இங்க பாருங்கோன்னா! அசடாட்டம் கேக்காதீங்கோ! இந்த court order வந்ததால பெருமாள வேண்டிண்டே போனேன். அதனால் வறச்சவே நம்ப கேசவர் கோயில்ல இருநூறு ரூபாய் சேத்துட்டேன்.”
“வெயில்ல க்யூல நின்னேன். ரொம்ப முடியல. அப்ப நம்ப பச்சயம்மாதான் ஹெல்ப் பண்ணா….. எனக்காக அவ க்யூல நின்னா! So, அவளுக்கு நூறு ரூபா கொடுத்தேன். தோ-இந்த கூல் ட்ரிங்க்ஸ் வாங்கினேன். தாகம் நாக்க வறட்டிருத்து. நீங்க எங்கயாவது போனா, நா பாத்துப்பாத்து பண்றேன். எனக்கு ஒரு தீர்த்தம் கூட நீங்க கொடுப்பேளா!”
இன்னம் கேட்டால், என்னென்ன வருமோ! ஒட்டு மொத்தமாக இந்த விஜய யாத்திரையில் இவள் ஆயிரத்தில் ஒருத்தி – இல்லையில்லை…. ஆயிரத்திற்கு ஒருத்தி. மாமா மௌனமாக second innings match பார்க்க ஆரம்பித்தார்.
வாசலில் மெடிகல் ஷாப் பையன், “மாமி ரொம்ப தலவலின்னு மாத்திர கேட்டாங்க. இந்தாங்க கவர்.. Total amount 300 என்றான்………”
இப்படிக்கு
ஏ.பி.என் ஸ்வாமி
Sri #APNSwami
இது போன்ற கட்டுரைகளைப் படிக்க…
https://apnswami.wordpress.com
மேலும்… நாட்டு நடப்புகளுடன் சுவையான ஸம்ப்ரதாய விஷயங்களை அறிந்திட https://apnswami.wordpress.com/blogpages/
மற்றவர்களுக்கும் பகிர்ந்திடுங்கள்… உங்கள் கருத்துக்களையும், சந்தேகங்களையும் பதிவு செய்யுங்கள்…