ஊழலுக்கு எதிரான சட்டங்களை தீவிரமாக அமல்படுத்த வேண்டும்: உ.சகாயம்

லஞ்சம், ஊழலுக்கு எதிரான சட்டங்களைத் தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என்று சென்னை அறிவியல் நகரத்தின் துணைத் தலைவர் உ.சகாயம் வலியுறுத்தினார்.

கோவை மாவட்ட ஊழல் எதிர்ப்பு இயக்கம் சார்பில் “ஊழிக் கூத்தாடும் ஊழலில் இருந்து தாய்நாட்டைக் காப்போம்’ என்ற தலைப்பில் கோவை, வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை கருத்தரங்கு நடைபெற்றது.

இதில், சிறப்பு அழைப்பாளராக ஐ.ஏஸ்.எஸ். அதிகாரி உ.சகாயம் பங்கேற்றுப் பேசினார். அதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கிரானைட் முறைகேடு குறித்து ஆய்வு செய்து, விரிவான அறிக்கையை நீதிமன்றத்துக்கு சமர்ப்பித்துள்ளேன். நான் ஏற்கெனவே கூறியிருப்பதைப் போன்று மக்களைப் போலவே நானும் அந்த வழக்கின் தீர்ப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். ஊழல் ஒழிப்பு என்பது அரசுக்கு எதிரானது அல்ல. அது அரசுக்கு மேலும் வலுசேர்க்கக் கூடியது. ஊழல் செய்பவர்களை தண்டிக்கப் போதுமான அளவு சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இருப்பினும் அதுபோன்ற வழக்குகளில்
கூடுதல் கவனம் செலுத்தி, வலுவான ஆதாரங்களைத் திரட்டி, நீதிமன்றத்தில் சமர்ப்பித்தால் குற்றவாளிக்கு நிச்சயமாக தண்டனை கிடைக்கும். அதேநேரம் லஞ்சம், ஊழலுக்கு எதிரான சட்டங்களை அமல்படுத்தக் கூடியவர்கள் தீவிரமாக செயல்படுவதும் அவசியம் என்றார்.