
திருச்சி முக்கொம்பு மேலணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், கொள்ளிடம் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதனிடையே, மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 50 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு.
சேலம் மேட்டூர் அணை முழு கொள்ளவை எட்டியதையடுத்து வினாடிக்கு 35 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டது . இது பின்னர் 50 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப் பட்டது. தற்போது மேட்டூர் அணையில் இருந்து அதிகளவு நீர் திறக்கப்படுவதால் திருச்சி முக்கொம்பு அணை நிரம்பிவருகிறது. இதனால் இன்று மாலை 4 மணிக்கு முக்கொம்பு மேலணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் முன்னதாக அறிவித்திருந்தார்
மேலும், திருச்சி மாவட்டத்தில் முசிறி, முக்கொம்பு மற்றும் திருச்சி மாநகர்ப் பகுதிகளில் கரையோரம் வசிக்கும் மக்கள் ஆற்றுப்பகுதிக்குச் செல்ல வேண்டாம் என்றும், கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்ல வேண்டாம் எனவும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லவும் மாவட்ட நிர்வாகம் மற்றும்பொதுப்பணித்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.
அதேநேரம் கிளைவாய்க்கால்களில் கூடுதல் தண்ணீர் திறந்துவிடும்பட்சத்தில் வெள்ளபாதிப்பு குறையும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.