
சென்னை : தமிழகம் மட்டுமல்ல எந்த மாநிலத்திலும் இந்தியை திணிக்க முடியாது; தென்னிந்தியாவில் திணித்தால் எந்த மாநிலமும் அதை ஏற்காது என்று நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஹிந்தி திவஸ் என்ற ஹிந்தி நாள் அன்று, ஒரு கருத்தைப் பதிவு செய்தார். அவருடைய டிவிட்டர் பதிவில், ஹிந்தி நாட்டு மக்களை இணைக்கும் பொதுவான மொழியாக வேண்டும் என்று கூறியிருந்தார்.
அவரது கருத்துக்கு தென்மாநிலங்கள், மேற்கு வங்கம் உள்ளிட்ட இடங்களில் எதிர்ப்பு எழுந்தது. தமிழகத்தில் அரசியல் கட்சியினர் பலத்த எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், இது குறித்து சென்னை விமான நிலையத்தில் ரஜினியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ரஜினி, இந்தியை திணிக்கக் கூடாது. எந்த நாடாக இருந்தாலும் பொதுவான ஒரு மொழி இருந்தால் நாட்டின் வளர்ச்சிக்கு நல்லது. துரதிருஷ்டவசமாக நமது நாட்டில் அப்படி இல்லை; அதை கொண்டு வர முடியாது.
எந்த மொழியையும் திணிக்க முடியாது. குறிப்பாக தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியைத் திணித்தால், தென்னிந்தியாவில் எந்த மாநிலத்திலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். வடமாநிலத்தில் கூட சில மாநிலங்களில் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று கூறினார்.