சென்னை:
“தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளதாக பேசுபவர்களிடம் அதற்கான ஆதாரம் உள்ளதா? ஒரு நீதிபதி, ஜெயலலிதா உடலைத் தோண்டி எடுக்கவும் உத்தரவிட நேரிடும் என்று எச்சரிப்பது வரம்பு மீறிய செயல் ” என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்ததாவது…
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது.இந்த வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் விசாரணை நடத்தினார்.தனக்கும் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும்,தேவைப்பட்டால் ஜெயலலிதா உடலை மீண்டும் தோண்டியெடுத்து பரிசோதனை செய்ய உத்தரவிடுவேன் எனவும் நீதிபதி வைத்தியநாதன் வழக்கு விசாரணையின்போது தெரிவித்திருந்தார்.
நீதிபதியின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்,”ஜெயலலிதா மரணம் குறித்து சந்தேகம் எழுப்பவர்களிடம் அதற்கான ஆதாரம் உள்ளதா?”என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.மேலும் எந்த ஆதாரத்தை அடிப்படையாக வைத்துக் கொண்டு நீதிபதி இந்த கேள்வியை எழுப்பினார் எனவும் நீதிபதியின் இந்த வார்த்தைகள் ஆச்சரியமளிப்பதாகவும் வைகோ தெரிவித்துள்ளார்.