சென்னை:
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா உடனடியாக தமிழக முதல்வராக வேண்டும் என்று கோரிக்கை விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ள தம்பிதுரை. தான் ஏன் அவ்வாறு சொன்னேன் என்பதற்கான விளக்கங்களை செய்தியாளர்களிடம் அளித்தார்.
முன்னதாக இன்று (திங்கள்கிழமை) காலை சென்னை போயஸ் கார்டனுக்கு தனது மனைவியுடன் தம்பிதுரை வந்தார். சுமார் 1 மணி நேரம் போயஸ் கார்டன் வீட்டில் சசிகலாவுடன் அவர் ஆலோசனையில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
“அதிமுக பொதுச்செயலாளராக இருக்கும் சசிகலா உடனடியாக தமிழக முதல்வராக பொறுப்பேற்க வேண்டும் என நேரில் வலியுறுத்தினேன். எனது கோரிக்கையை பரிசீலிப்பதாக அவர் கூறினார்” என்றார்.
அப்போது செய்தியாளர் ஒருவர், “ஓபிஎஸ் தமிழக முதல்வராக தொடர்வதில் உங்களுக்கு விருப்பமில்லையா?” என வினவினார்.
அதற்கு பதிலளித்த தம்பிதுரை, “உத்தரப் பிரதேசத்தில், ஆளும் சமாஜ்வாதி கட்சியின் பொறுப்பு ஒருவரிடமும், ஆட்சிப் பொறுப்பு ஒருவரிடமும் இருக்கிறது. இதனால், அக்கட்சிக்குள் பல்வேறு சிக்கல்கள் உருவெடுத்துள்ளன. அதேபோல் தமிழகத்திலும் ஒரு சூழல் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற காரணத்தாலேயே கட்சிப் பொறுப்பு, ஆட்சிப் பொறுப்பு இரண்டையும் ஒருவரே வைத்துக்கொள்ள வேண்டும் என சசிகலாவிடம் நேரில் வலியுறுத்தியுள்ளேன். என்னுடைய விருப்பதைத் தெரிவித்திருக்கிறேன், மற்றவர்களின் எண்ணம் என்னவென்பது எனக்குத் தெரியாது. இதுதவிர இப்போதைக்கு வேறு எந்த கேள்விக்கும் நான் பதில் அளிக்கத் தயாராக இல்லை” என்றார்.