பார்வையற்றோருக்கு பணி வாய்ப்பு மறுப்பு: நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்ட பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர்

சென்னை: பார்வையற்றோருக்கு பணி வழங்கக் கோரிய வழக்கில், பள்ளிக் கல்வித் துறை முதன்மை செயலாளர் சபீதா இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். விசாரணையின் போது பதில் மனு குறித்து நீதிபதிகளின் கண்டனத்தை அடுத்து சபீதா உயர் நீதிமன்ற நீதிபதிகளிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். ஆசிரியர் ஆராய்ச்சிப் பயிற்சி மையத்தில் காலிப் பணியிடங்களில் பார்வையற்றோரை நியமிக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டது. ஆனால், பார்வையற்றோரை இப்பணியிடங்களில் நியமிக்க முடியாது என்று பள்ளிக் கல்வித் துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. பார்வையற்றோருக்கு பணி வாய்ப்பு மறுக்கப்பட்டதை அடுத்து நீதிமன்றம் சபீதாவுக்கு கண்டனம் தெரிவித்தது. இதனால், நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரிய சபீதா, காலிப்பணியிடங்களில் பார்வையற்றோரை பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். அவரின் உத்தரவாதத்தை அடுத்து வழக்கு முடித்து வைக்கப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.