புள்ளி விவரங்களைக் கூறி மக்களை ஏமாற்ற முயல்கிறார் முதல்வர்: பாமக ராமதாஸ்

சென்னை:
கடன் விவகாரத்தில், வசதியான புள்ளிவிவரங்களைக் கூறி, மக்களை முதல்வர் ஏமாற்ற நினைப்பதா என்று கூறியுள்ளார் பாமக நிறுவுனர் ராமதாஸ்.
இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்,
தமிழக அரசின் 2015-16 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை குறித்து கருத்து தெரிவித்திருந்த நான், இது வளர்ச்சிக்கு உதவாத, தொழில் வளர்ச்சியை பெருக்காத, வேலைவாய்ப்பை உருவாக்காத, பொருளாதாரத்தை அதல பாதாளத்தில் தள்ளக்கூடிய, தமிழக மக்களை கடனாளியாக்கும் வெற்று வரவு- செலவு காகித அறிக்கை ஆகும் என்று கூறியிருந்தேன். இதை வலுப்படுத்தும் வகையில் நிதிநிலை அறிவிப்புகளின் நிறை&குறைகள் குறித்தும் விரிவான வகையில் கருத்து தெரிவித்திருந்தேன்.
சட்டப்பேரவையில் நேற்று நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் குறுக்கிட்டு பேசிய முதலமைச்சர் பன்னீர் செல்வம் நான் முன்வைத்த விமர்சனங்களுக்கு பதிலளித்திருக்கிறார். அவை ஏற்றுக்கொள்ளும் வகையில் இருந்திருந்தால் மகிழ்ச்சியடைந்திருப்பேன்.
ஆனால், ‘‘ இது யானை… இந்த யானை அளவுக்கு தமிழகத்தின் கடன் இருக்கிறது’’ என்று நான் கூறினால், முதலமைச்சரோ, யானையின் ஒரு காலை மட்டும் பிடித்துக் கொண்டு ‘‘இது தூண்… இந்த தூண் அளவுக்குத் தான் கடன் இருக்கிறது’’ என்று விளக்கமளித்து தமிழகத்தின் கடன் சுமை பற்றி தவறான தோற்றத்தை ஏற்படுத்த முயல்கிறார். தமிழகத்தின் ஒட்டு மொத்த கடன்சுமை ரூ. 4 லட்சம் கோடிக்கும் அதிகம் என்று நான் கூறிவருகிறேன்.  அதை ஆதாரத்துடன் நிரூபிக்கவும் தயாராக இருக்கிறேன்.
ஆனால், முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமோ, 2014-15 ஆம் ஆண்டில் தமிழ்க அரசின் கடன் ரூ. 1.81 லட்சம் கோடி மட்டுமே; 2015-16 ஆம் ஆண்டில் இது ரூ. 2.11 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என்று தெரிவித்திருக்கிறார்.
முதலமைச்சர் தெரிவித்துள்ள இந்த புள்ளிவிவரம் உண்மையானது தான். ஆனால், இது தமிழக அரசு நேரடியாக வாங்கியுள்ளக் கடன் ஆகும். மின்சார வாரியம் உள்ளிட்ட தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் வாங்கிய கடன் அளவு எவ்வளவு? என்று கேட்டால் முதல்வரிடமிருந்து பதில் இல்லை. மின்வாரியத்தின் திரண்ட இழப்புடன் சேர்த்து ஒட்டுமொத்தக் கடன் மட்டும் 2012-13 வரை மொத்தம் ரூ.1.46 லட்சம் கோடியாகும். இதை தகவல் பெறும் உரிமை சட்டத்தில் மின்வாரியமே ஒப்புக்கொண்டதாக  ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
2013-14 ஆம் ஆண்டில் மின்வாரியத்திற்கு ஏற்பட்ட இழப்பு ரூ.13,985 கோடியையும் சேர்த்தால் 31.03.2014 வரை மின்வாரியத்தின் கடன்சுமை ரூ.1.60 லட்சம் கோடியாகும். போக்குவரத்துக்கழகம் உள்ளிட்டநிறுவனங்களின் கடனையும் சேர்த்தால்  பொதுத்துறை  நிறுவன கடன் அளவு மட்டும் ரூ. 2.00 லட்சம் கோடியை எட்டும். ஆனால், இதை மறைத்து விட்டு தமிழகத்தின் கடன் சுமை சமாளிக்கும் நிலையில் தான் உள்ளது என்று முதல்வர் தவறாக கூறுகிறார்.
அதுமட்டுமின்றி, தமிழக அரசின் நேரடிக் கடனுக்காக நடப்பாண்டில் செலுத்த வேண்டிய வட்டி ரூ.17,139 கோடி மட்டுமே, இது மாநில அரசின் வருவாய் வரவில் வெறும் 12.01 % மட்டுமே என்றும் முதல்வர் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறார். வட்டியை மட்டும் கணக்கில் காட்டிய அவர், அரசின் சொந்த வருவாய் ரூ.1.05 லட்சம் கோடியாக இருக்கும் நிலையில், அதைவிட இரு மடங்கு அதிகமாக ரூ.2.11 லட்சம் கோடி என்ற அளவுக்கு கடன் இருப்பதை மறைத்து விட்டார்.
அரசின் வரி வருவாய் நிர்ணயிக்கப்பட்ட இலக்கான ரூ. 91,835 கோடியை எட்ட முடியாமல் 85,772 கோடியாக குறைந்து விட்டது. இதைச் சுட்டிக்காட்டினால், தமிழகத்தின் வரிவருவாய் 2011 ஆம் ஆண்டைவிட ரூ.36,565 கோடி அதிகரித்திருப்பதாக அரசு கூறியிருக்கிறது. நடப்பாண்டில் வருவாய் குறைந்து விட்டது என்று கூறினால், 5 ஆண்டுகளில் அதிகரித்திருக்கிறது என்று கூறுவது எந்த வகை புத்திசாலித்தனமோ?
கடந்த 4 ஆண்டுகளில் வாங்கப்பட்ட கடனின் அளவு ரூ.79,687 கோடி என்றும், இதில் ரூ.79,528 கோடி மூலதனச் செலவாக செய்யப்பட்டிருப்பதாகவும் முதலமைச்சர் கூறியுள்ளார். மூலதன செலவாக செலவழிக்கப்படும் தொகை மூலம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அரசுக்கு வருவாய் கிடைக்க வேண்டும். கடந்த 4 ஆண்டுகளில் செய்யப்பட்ட மூலதனச் செலவின் மூலம் கிடைத்த நேரடி/மறைமுக வருவாய் குறித்த விவரங்களை வெளியிடுவதற்கு முதல்வர் பன்னீர்செல்வம் தயாரா?
அதேபோல், வளர்ச்சிக்கு உதவும் வகையில், வேலைவாய்ப்பைப் பெருக்கும் வகையில் எந்தத் திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை என்று குற்றச்சாற்றுக்கு பதிலளித்துள்ள முதலமைச்சர், ஏரிகள் சீரமைப்புத் திட்டம், கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், கால்நடை மருந்தகம் அமைத்தல் திட்டம், குளிர்சாதன சேமிப்புக் கிடங்குகள் அமைக்கும் திட்டம் போன்றவை அறிவிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.
இவை அடிப்படை வசதிகளை செய்து தருவதற்கான திட்டங்கள்; இவற்றின் மூலம் வளர்ச்சி ஏற்படாது. வேலைவாய்ப்பை ஊக்குவிக்க ரூ.150 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், 2 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படவிருப்பதாகவும் முதல்வர் கூறியிருக்கிறார். இவையெல்லாம் கடந்த ஆண்டுகளிலும் அறிவிக்கப்பட்டவை தான். தமிழ்நாட்டில் சுமார் 85 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பில்லாமல் இருக்கும் நிலையில், அவர்களுக்கு வேலை வழங்க இது எந்த வகையில் உதவும் என்பதே எனது வினா? இதற்கு முதலமைச்சர் பன்னீர்செல்வம் பதிலளிக்கவில்லை.
வறுமை ஒழிப்புக்காக ரூ.862 கோடி ஒதுக்கியிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் சுமார் 3.40 கோடி பேர் வேட்டி & சேலை வாங்குவதற்குக் கூட வசதியில்லாத நிலையில் இருப்பதால் அவர்களுக்கு இலவச வேட்டி-சேலை வழங்கப்படுவதாக தமிழக அரசே கூறியிருக்கிறது. வறுமையை ஒழிக்க அரசு ஒதுக்கிய நிதியை வறுமையில் வாடுபவர்களின் எண்ணிக்கையால் வகுத்துப் பார்த்தால் தனிநபர் ஒதுக்கீடாக ரூ.254 வருகிறது.
ஒருவருக்கு ரூ.254 செலவு செய்தால் அவரை வறுமையில் இருந்து மீட்க முடியும் என்றால் அது உலக அதிசயம் தான். சட்டப்பேரவை அ.தி.மு.க.வின் குடும்பச் சொத்து போல மாற்றப்பட்டு விட்டதால், அங்கு எதிர்க்கட்சியினருக்கு வாய்ப்பூட்டு போட்டுவிட்டு, தங்களுக்கு சாதகமான அம்சங்களை மட்டும் பதிவு செய்வது ஆளுங்கட்சியின் வாடிக்கையாகிவிட்டது.
ஆளுங்கட்சியின் இந்த ஏமாற்றுத் திட்டங்களை பாராட்டாவிட்டால், பூனைக் கண்ணை மூடிக் கொண்டால் உலகம் இருண்டு விடாது என்று முதலமைச்சர் விமர்சிக்கிறார். அரசின் நல்லத் திட்டங்களை வரவேற்பதும், தவறான நடவடிக்கைகளை எதிர்ப்பதும் தான் எதிர்க்கட்சிகளின் பணி. அதை பா.ம.க. திறம்பட செய்து வருகிறது. மாறாக ஜெயலலிதாவின் அனைத்து செயல்களையும் ஓ.பன்னீர்செல்வம் வரவேற்பதைப் போல, அரசின் செயல்கள் அனைத்தையும் பா.ம.க. பாராட்ட வேண்டும் என முதலமைச்சர் எதிர்பார்ப்பாரேயானால், அதற்கு நாங்கள் காக்கைக் கூட்டமல்ல என்பதை  தெரிவித்துக் கொள்கிறேன். – என்று கூறியுள்ளார்.