செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் தொடர்ந்த வழக்கு: மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

சென்னை: செம்மொழி தமிழாய்வு நிறுவனத்திற்கு நிரந்தர இயக்குநர், பதிவாளர், நிதி அலுவலர் ஆகியோரை நியமிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் மத்திய , மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. சென்னை தரமணியில் இயங்கிவரும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் 9 ஆண்டுகளாகியும், நிரந்தர இயக்குநர், நிரந்தர பதிவாளர், நிரந்தர நிதி அலுவலர் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்படாததை எதிர்த்தும் அப்பணி இடங்களுக்கு தகுதியானவரை குறிப்பிட்ட காலத்திற்குள் நியமிக்க கோரியும், இதன் காரணமாக ஏற்படும் நிறுவன பணிகள் தேக்கம் மற்றும் நிதி முடக்கம் ஆகியவற்றை சரிசெய்ய வேண்டியும் , செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன ஊழியர்கள் சங்கத் தலைவர் முனைவர் அ.ஆரோக்கியதாசு என்பவர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் டி.சுந்தரவதனம், வழக்கறிஞர் ராஜீவ்காந்தி, வழக்கறிஞர் ரமேஷ், வழக்கறிஞர் அமர்நாத் ஆகியோர் ஆஜராகினனர் . இவ்வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சசீதரன், இதுகுறித்த விரிவான பதில் மனுவை 21-04-2015 க்குள் தாக்கல் செய்யுமாறு மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டார்.