திருச்சி விமான நிலையத்தில் 1 கிலோ தங்கம் பறிமுதல்

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் ஒரே நாளில் 1 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக இருவர் கைது செய்யப் பட்டனர். சிங்கப்பூரில் இருந்து நேற்று முன்தினம், மலிண்டோ விமானம், திருச்சி விமான நிலையத்துக்கு வந்தது. அதில் வந்த தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை ஏனாதியைச் சேர்ந்த, முத்துராமன் (35) என்பவர், பையில் தங்கத்தினாலான, இரண்டு ராடுகளை வைத்திருந்தார். இவை, 592 கிராம் எடையும், 15.65 லட்சம் ரூபாய் மதிப்பும் கொண்டது என அதிகாரிகள் தெரிவித்தனர். அதேபோல், சிங்கப்பூரில் இருந்து வந்த ஏர் இந்தியா விமானத்தில் வந்த, தஞ்சாவூரைச் சேர்ந்த, வினோத்(28) என்பவரும், இரண்டு தங்க ராடுகளைக் கொண்டு வந்தார். இவை, 591 கிராம் எடை கொண்டவை. இவற்றின் மதிப்பு, 15.63 லட்சம் ரூபாய். இவ்வாறு ஒரே நாளில், ஒரு கிலோ தங்கத்தை பறிமுதல் செய்து சம்பந்தப்பட்ட இளைஞகளையும் அதிகாரிகள் கைது செய்தனர்.