காவல் நிலையம் அருகிலேயே கொல்லப்பட்ட ஸ்ரீவைகுண்டம் விவசாயி: 5 பேர் சுற்றிவளைப்பு

ஸ்ரீவைகுண்டம்: காவல் நிலையம் அருகிலேயே வெட்டிக் கொல்லப்பட்ட ஸ்ரீவைகுண்டம் விவசாயி கொலை தொடர்பாக 5 பேரை போலீஸார் பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள நவ்வலடியூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஆறுமுகராஜா (45) ஸ்ரீவைகுண்டம் போலீஸ் நிலையம் அருகே உள்ள அரசு நெல் கொள்முதல் குடோனுக்குச் சென்றார். பின்னர் குடோனில் இருந்து வெளியே வந்தபோது அங்கே பயங்கர ஆயுதங்களுடன் வந்த கும்பல் ஒன்று திடீரென ஆறுமுகராஜாவை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டியது. இதில் அவருக்கு கழுத்து, கை உள்ளிட்ட இடங்களில் பலத்த வெட்டு விழுந்தது. ஆறுமுகராஜா அந்த கும்பலிடம் இருந்து தப்பி, போலீஸ் நிலையத்தை நோக்கி ஓடினார். இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டது. ரத்தக் காயங்களுடன் உயிருக்குப் போராடிய அவரை போலீசார் மீட்டு ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி ஆறுமுகராஜா உயிரிழந்தார். போலீஸ் நிலையம் அருகிலேயே விவசாயி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இது குறித்து தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்தினார். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்த தகவல்… கொலை செய்யப்பட்ட ஆறுமுகராஜா டிப்ளமோ என்ஜினீயரிங் படித்துள்ளார். மனைவியை விவாகரத்து செய்தவர். ஆறுமுக ராஜாவுக்கும் அப்பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதன் காரணமாக கடந்த 2013ம் ஆண்டு ஆறுமுகராஜாவின் வாழைத்தோப்புக்குள் புகுந்த எதிர்த் தரப்பினர் அங்கிருந்த வாழைகளை வெட்டி சாய்த்தனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. எதிர் தரப்பினர் ஆறுமுகராஜாவை கொலை செய்யவும் முயற்சி செய்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக வெள்ளூர் மற்றும் மங்கலக்குறிச்சியை சேர்ந்த 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அந்த வழக்கை வாபஸ் பெறுமாறு 7பேரும் ஆறுமுகராஜாவை மிரட்டி வந்துள்ளனர். இந்நிலையில், ஆறுமுகராஜாவின் தாய் ருக்மிணி, தனது மகன் உயிருக்கு பாதுகாப்பு கேட்டு மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றமும் பாதுகாப்பு கொடுக்க உத்தரவிட்டது. மேலும் ஆறுமுகராஜா வழக்கை வாபஸ் பெறவும் மறுத்துவிட்டார். இதன் காரணமாக எதிர் தரப்பினர் ஆறுமுகராஜாவை கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்தக் கொலையில் வேறு ஏதேனும் காரணம் இருக்குமா என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இக்கொலை தொடர்பாக 5 பேர் போலீசில் சிக்கியுள்ளனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.