நாளை 5 இடங்களில் கர்நாடக பட்ஜெட் நகல் எரிப்புப் போராட்டம்

திருச்சி: நாளை திருவாரூர், நாகை, தஞ்சை, திருச்சி, சிதம்பரம் ஆகிய 5 இடங்களில் கர்நாடக பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம் நடைபெறவுள்ளதாக காவிரி உரிமை மீட்புக் குழு அறிவித்துள்ளது. இது குறித்து காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் கூறியபோது… காவிரியின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடக அரசின் பட்ஜெட்டில் முதல் கட்டமாக ரூ.25 கோடி ஒதுக்கி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டின் நகல் எரிப்புப் போராட்டம் நாளை திருவாரூர், நாகை, தஞ்சை, திருச்சி, சிதம்பரம் ஆகிய 5 இடங்களில் நடைபெறுகிறது. நான் திருவாரூரில் நடைபெறும் பேராட்டத்தில் கலந்து கொள்கிறேன். இந்திய அரசியலமைப்பு பாதுகாப்பை நிலைநாட்ட வேண்டிய பொறுப்பு மத்திய அரசிடம் உள்ளது. அதன்படி உச்ச நீதிமன்றம் உத்தரவின்படி காவிரி மேலாண்மை வாரியத்தினை உடனடியாக அமைக்க வேண்டும். மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை ஒப்புதல் பெறாமல் மேகதாது பகுதியில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு நிதி ஒதுக்கியிருப்பது மத்திய அரசுக்குரிய அதிகார வரம்பில் ஒரு மாநில அரசு தலையிடும் செயலாகும். எனவே இந்திய அரசியலமைப்பு சட்ட விதி 355 ன் கீழ் தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி அணைகட்ட ஒதுக்கப்பட்டுள்ள நிதியை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில், தமிழக எம்.பிக்கள் குழு பிரதமரை சந்தித்து முறையிட்டது வரவேற்கத்தக்கது. மத்திய அரசு சட்டவிதி 355 ஐ பயன்படுத்துவதற்கு தமிழக எம்.பிக்கள் ஒரு காலக்கெடுவை நிர்ணயித்து வலியுறுத்த வேண்டும். அதன் பின்னரும் மத்திய அரசு கர்நாடகம் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், தமிழக எம்.பிக்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறினார்.