கடன் தொல்லையால் குடும்பமே ரயில் முன் பாய்ந்து தற்கொலை

சென்னை: கடன் தொல்லை காரணமாக, கட்டுமானத் தொழில் ஒப்பந்ததாரர், குடும்பத்துடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் செங்கல்பட்டு பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாமல்லபுரம் மாதா கோவில் தெருவைச் சேர்ந்த குமரன் கட்டுமானத் தொழில் செய்து வருகிறார். இவர் ரூ. 50 லட்சத்துக்கு மேல் கடன் வாங்கி அதை திருப்பிக் கொடுக்க முடியாமல் சிக்கித் தவித்துள்ளார். கடன் தொல்லையால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக, குமரன் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்துள்ளார். இதற்காக பூச்சிக் கொல்லி மருந்து வாங்கி வந்து, தன் குடும்பத்தினருடன் செங்கல்பட்டு அருகே உள்ள பரனூர் சுங்கச்சாவடி பகுதியில் சென்றுள்ளார். பூச்சி மருந்து குடித்து காப்பாற்றப்பட்டு விட்டால் என்ன செய்வது என்று எண்ணி, அந்த முடிவைக் கைவிட்டு, ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொள்ள திட்டமிட்டுள்ளார். அந்த எண்ணத்துடன் நேற்று மாலை 4.30க்கு அங்குள்ள ரயில்வே இருப்புப்பாதையில் தனது குடும்பத்தினருடன் ரயில் முன் பாய குமரன் காத்துக் கிடந்து, விழுப்புரத்திலிருந்து சென்னை நோக்கி வந்த ரயில் முன் திடீரென தனது மனைவி மாலதி, மகள் மோனிகா (15), மகன் கணேஷ் (6) ஆகியோருடன் பாய்ந்துள்ளார். இதில் கணேஷ் மட்டும் அதிர்ஷ்டவசமாக பலத்த உயிர் தப்பியுள்ளார். மற்றவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்தத் தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ரயில்வே போலீசார், படுகாயம் அடைந்த சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், ரயிலில் அடிபட்டு இறந்தவர்களின் உடல்களை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.