விஜயகாந்த், சரத்குமார், ஜி.கே.வாசன் ஈஸ்டர் வாழ்த்து

சென்னை: ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு, தேமுதிக தலைவர் விஜயகாந்த், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத் குமார், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஜி.கே.வாசன் வாழ்த்து: இயேசு கிறிஸ்து மறைந்து மீண்டும் உயிர்த்தெழுந்த 3 ஆம் நாள் ஈஸ்டர் திருநாளாக உலகம் முழுவதும் வாழும் கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகிறார்கள். நம் நாட்டில் வாழும் கிறிஸ்தவர்கள் நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். குறிப்பாக கல்வித் துறையிலும், மருத்துவத் துறையிலும் ஏழை, எளிய, அடித்தட்டு மக்களுக்கு தொண்டாற்ற தொண்டு நிறுவனங்களை நிறுவி, சிறப்பாக சேவை செய்து வருவது மிகுந்த பாராட்டுக்குரியது. கிறிஸ்தவ சமுதாய மக்கள் பணி தொடரவும், வளரவும், அவர்களது வாழ்வு செழிக்கவும், அவர்கள் ஒற்றுமையாகவும், பாதுகாப்புடனும், அமைதியாகவும் வாழ ஈஸ்டர் திருநாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் விஜயகாந்த் வாழ்த்து: ஏழைகளுக்கு இரக்கம் காட்டி, எதிரிகளுக்கும் அருள் செய்ய வேண்டும், பாமரர்களுக்கும் அன்புகாட்டி உதவி செய்திட வேண்டுமென மனித குலத்தை வாழ்விக்க இறைத்தூதர் இயேசுநாதர் அவர்கள் அளித்த போதனைகள் சிறப்பானதாகும். மக்களின் வாழ்க்கை மேம்பாடு அடைய தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர். இயேசுநாதர் ஆவார். அவர் மீண்டும் உயிர்த்தெழுந்த நன்னாளையே, ஈஸ்டர் திருநாளாக கிறிஸ்துவ மக்கள் கொண்டாடி வருகிறார்கள். நாம் செய்கின்ற தொண்டும், தியாகமும் வீண் போகாது என்பதற்கு இது சிறந்த எடுத்துக்காட்டாகும். உலகில் அமைதி நிலவ, மனிதநேயம் தழைக்க ஈஸ்டர் திருநாள் ஒரு இன்பத் திருநாளாக மலரட்டும். நம்மாலான உதவிகளை ஏழை, எளியவர்களுக்கு செய்திட வேண்டும். ஏழைகளுக்கு செய்யும் தொண்டு, இறைவனுக்கு செய்யும் தொண்டாகும். “இயன்றதைச் செய்வோம், இல்லாதவர்க்கே” என்பது தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கொள்கை முழக்கமாகும். இந்நாளில் கிறிஸ்துவ சமுதாயத்தை சார்ந்த அனைத்து மக்களுக்கும், தேமுதிக சார்பில் எனது இதயமார்ந்த ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஆர். சரத்குமார் வாழ்த்து; சிலுவையில் மரித்த ஏசுபிரான் மீண்டும் உயிர்த்தெழுந்த புனித நன்னாளம் ஈஸ்டர் திருநாள் உலகெங்கும் கிறிஸ்தவ பெருமக்களால் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே – என்னிடத்தில் வந்து இளைப்பாறுங்கள்++ என்று அனைவரின் பாவச்சுமைகளை தான் ஏற்று அன்பையும், கருணையையும், பிரதிபலனாக உலகிற்கு அளித்த ஏசுபிரானின் போதனைகள், மனித குலம் தழைத்தோங்கச் செய்யும் மகத்துவம் மிக்கவை. அன்பும், சகோதரத்துவமும், மனித நேயமும், சக மனிதர்களிடையே நிலைபெற்று நின்று புவி எங்கும் சமாதானம் தழைத்தோங்கும் விதமாக இந்த ஈஸ்டர் திருநாள் அமைந்திட நாம் அனைவரும் பிரார்த்திப்போமாக. விரதம் முடித்து ஈஸ்டர் திருநாளைக் கொண்டாடும் கிறிஸ்தவ சொந்தங்களுக்கு என் அன்பான நல்வாழ்த்துக்களைதெரிவித்துக் கொள்கிறேன்.