தமிழகத்தில் எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம் தயாராகுங்கள்: தம்பிதுரை

திருச்சி: தமிழகத்தில் எப்போது வேண்டுமானாலும் சட்டப் பேரவைக்கு தேர்தல் வரலாம்; தொண்டர்கள் தயாராக இருங்கள் என்று நாடாளுமன்ற துணைத் தலைவர் தம்பிதுரை கூறினார். திருச்சி புறநகர் மாவட்ட அதிமுக ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சமயபுரம் டோல்கேட் பகுதியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தேர்தல் பொறுப்பாளரும் நாடாளுமன்ற துணைத் தலைவருமான தம்பிதுரை, ”மத்தியில் ஆளும் பாஜக ஆட்சி மக்களுக்கு பயனளிக்கும் வகையில் எந்த நலத் திட்டங்களையும் செயல்படுத்தவில்லை. ஆனால், தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற ஜெயலலிதா மக்களுக்குத் தேவையான அனைத்து தேவைகளையும் அறிந்து திட்டங்களை அறிவித்து அதனை செயல்படுத்தி வருகிறார். கட்சி நிர்வாகிகள் தேர்தலில், நீங்கள் போட்டியிட்டு வெற்றி பெறுவது முக்கியமல்ல. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் சிறப்பாக பணியாற்றக் கூடியவர்களாக இருக்க வேண்டும். தமிழக சட்டமன்றத்துக்கு எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம். அதனால், நீங்கள் கட்சித் தேர்தலில் வெற்றி பெறும்போதே, தேர்தலுக்கான பணிகளையும் தொடங்க வேண்டும்” என்று பேசினார்.