புதுவை பாஜக அலுவலக தாக்குதல்: காங்கிரஸார் வீடுகளில் நள்ளிரவுச் சோதனை

புதுச்சேரி: நள்ளிரவில் காங்கிரஸாரின் வீடுகளில் புகுந்து புதுச்சேரி போலீஸார் சோதனை செய்து வழக்கு போடப்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகளைத் தேடியது, காங்கிரசாரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல் காந்தியை மத்திய அமைச்சர் கிரிராஜ்சிங் விமர்சித்ததைக் கண்டித்து புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் சார்பில் பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டு அழுகிய முட்டை, தக்காளி வீசி, ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து சேதப் படுத்தினர். இதனையடுத்து போராட்டம் நடத்திய இளைஞர் காங்கிரஸார் 8 பேர் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் 50 காங்கிரசார் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனால், புதுச்சேரியில், காங்கிரஸாரும் , பாஜகவினரும் போட்டிக்குப் போட்டியாக ஆர்ப்பாட்டம், சாலைமறியல் என போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்நிலையில் பாஜக., அலுவலகத்தை சூறையாடிய காங்கிரசாரைக் கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இதற்காக நள்ளிரவில் முன்னாள் எம்.எல்.ஏ. ஜெயமூர்த்தி, வட்டார காங்கிரஸ் தலைவர் ரகுமான், இளைஞர் காங்கிரஸ் பொது செயலாளர் முத்துகுமாரசாமி உள்ளிட்ட 25–க்கும் மேற்பட்ட காங்கிரசார் வீடுகளில் போலீசார் சோதனை நடத்தினர். நள்ளிரவில் காங்கிரஸ் நிர்வாகிகள் வீடுகளுக்குள் போலீசார் புகுந்து ஒவ்வொரு அறையாகத் தேடினர். தலைமறைவாக உள்ள காங்கிரசாரை கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு பைரவசாமி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படையினர் காங்கிரசாரை கைது செய்ய தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.