கோயில் குளத்தில் தெரிந்த பாதத் தடம்: அதிசயித்த பக்தர்கள்

thiruvarankulam புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் பிடாரி அம்மன் கோயில் அருகே உள்ள குளத்தில் அழியாத பாத தடங்கள் இரண்டு தெரிந்ததால் அப்பகுதியில் சனிக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது. பக்தர்கள் பரவசத்துடன் பார்த்து அதிசயித்தனர். புதுக்கோட்டை அருகே திருவரங்குளத்தில் உள்ளது பிடாரி அம்மன் கோயில். இந்தக் கோயில் அருகே சுப்பிரமணியர் தீர்த்தம் என்றழைக்கப்படும் குளம் உள்ளது. கடந்த 2000ஆம் ஆண்டு குளம் தூர் வாரப்பட்டது. அதன் பிறகு 15 ஆண்டுகளாக இந்தக் குளத்தில் உள்ள தண்ணீர் வற்றவேயில்லை. இக்குளத்திலிருந்து எடுத்து வரப்படும் நீரால்தான் பிடாரி அம்மனுக்கு தினமும் அபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாக இக்குளத்தில் இன்று வரை பெண்கள் யாரும் நீராடுவதில்லை. மேலும் அம்மன் நடமாட்டம் உள்ளது என்ற நம்பிக்கையால் குளக்கரைப் பகுதியில் யாரும் தனிமையிலும் செல்வதில்லை. இந்நிலையில் இந்தக் குளத்தில் தண்ணீருக்குள் இருக்கும் படிக்கட்டில் வெண்மை நிறத்திலான ஒரு ஜோடி பாதத்தின் தடப் பதிவை அவ்வழியாகச் சென்ற சிலர் பார்த்துள்ளனர். அதை அழிக்க சோப்பு முதலானவை கொண்டு முயன்றும் அந்தத் தடம் அழியவில்லையாம். இந்தச் செய்தி அப்பகுதியில் வேகமாகப் பரவியது. இதைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் குளத்தின் படித்துறையில் பதிவான பாதத் தடத்தை அதிசயித்தபடி பார்த்துச் செல்கின்றனர். பொ.ஜெயச்சந்திரன்