வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பிறந்த நாளை இயற்கை உழவர் தினமாக அறிவிக்கக் கோரிக்கை

10606429_1581506082127200_6567490868380623487_n கரூர்: இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் பிறந்த நாளான ஏப்ரல் 6 ஆம் நாளை ”இயற்கை உழவர் தினமாக”அறிவித்து விவசாயத்தை காக்க வேண்டும் என்று வலியுறுத்தி, கோவையில் இருந்து நாடு முழுவதும் இருசக்கர வாகனப் பேரணி நடத்தவுள்ளதாக, உழவர் உழைப்பாளர் சங்க கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உழவர் உழைப்பாளர் சங்கத்தின் மாநில -மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் ஈரோட்டில் உள்ள கட்டிடப் பொருட்கள் சங்க வளாகத்தில் நிறுவனத் தலைவர் பொங்கலூர் இரா.மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது.மாநிலப் பொருளாளர் ஜி.சோமசுந்தரம்,மாநிலச் செய்தித் தொடர்பாளர் மு.செந்தில்குமார்.மாநில தலைமை நிலையச் செயலாளர் வி.ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலையில் வகித்தார்கள். இக்கூட்டத்தில் கலந்து  கொண்டு பேசிய மாநில, மாவட்ட நிர்வாகிகள் ப.பாலசுந்தரம்(சேலம்),சிவாநஞ்சன்(கோவை),விஜயமார்த்தாண்டன்(சிவகங்கை),என்.அருண் (மதுரை), எம்.ஜெயவேல்(வாழப்பாடி), என்.சி.தங்கவேல்(நாமக்கல்), காளிரத்தினம்(வேலூர்), விசாலாட்சி(கோவை), மகா மகா பெள்ளியப்பன்(ஊட்டி), செந்தில் குமார்(ஈரோடு), தமிழன் பிரகாஷ் (ஊத்துக்குளி)  ஆகியோர் வரவேற்றுப் பேசினார்கள் மேலும் இக்கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள் வருமாறு:- மத்திய அரசின் நிலமோசடித் திட்டமான நிலம் கையகப்படுத்துதல் சட்ட மசோதாவை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாட்டில் கிராமங்கள் தோறும் விவசாயிகளிடையே எழுச்சியை உருவாக்க போராட்டங்களில் கலந்து கொள்ள செய்ய தமிழகத்தின் 32 மாவட்டங்களிலும் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் ஏப்ரல் 28 முதல் ஈரோட்டில் இருந்து தொடக்கி 1000 வாகனங்களில்  வாகனப் பேரணி நடத்துவது என்றும்,உழவர் போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகள் தினமான ஜூன் 19 அன்று வாகனப் பேரணியை நிறைவு செய்வது என்றும், சமூக ஆர்வலர் திரு.அன்னா ஹசாரே தலைமையில் டெல்டா  மாவட்டங்களில் மாபெரும் விவசாயிகள் மாநாட்டை அனைத்து விவசாய அமைப்புகளையும் ஒருங்கிணைத்து விரைவில் நடத்தவும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது. தீர்மானம்:-2 இந்தியா முழுவதும் விவசாயிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி காலாவதியான நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தை குடியரசுத் தலைவர் மூலம் மீண்டும் அவசரச் சட்டமாகக் கொண்டு வந்துநிறைவேற்றிடமத்திய அரசு முனைவதை இக்கூட்டம் மிக வன்மையாகக் கண்டிக்கிறது..மேலும் தமிழக விவசாயிகளுக்குத் துரோகம் செய்யும் வகையில் அதற்கு துணை போகும் அதிமுகவுக்கு இக்கூட்டம் கடும் கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறது. தீர்மானம் :-3 இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் பிறந்த நாளான ஏப்ரல் 6 ஆம் நாளை ”இயற்கை உழவர்  தினமாக”அறிவித்து இயற்கை விவசாயத்தை அரசு முழு அளவில் ஊக்குவித்து நஞ்சில்லா உணவுக்கான உத்தரவாதத்தை அளிப்பதோடு நாடு முழுவதும் மருந்துகள் ரசாயன உரங்கள் மூலம் மலடாகிப் போன மண்ணைப் பாதுகாக்க ஓராண்டுக்கு இயற்கை விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகளுக்கான முழுச் செலவுகளையும் அரசு ஏற்க வேண்டும் என்று இக்கூட்டம் மத்திய -மாநில அரசுகளை வலியுறுத்துகிறது. தீர்மானம்:-4 தமிழ்நாட்டில் சமீப காலமாக விவசாய நிலங்களைக் கூறு போட்டு வீட்டு மனைகளாக மாற்றி வரும் நிலை தொடர்வதால் 13 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் இது வரை அழிந்து  விட்டதால் இன்னும் 20 ஆண்டுகளில் முற்றிலும் விவசாயம் அழிந்து விடக் கூடிய ஆபத்து இருப்பதால்  விவசாயத்தைக் காப்பதற்கு மத்திய-மாநில அரசுகள் விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றுவதற்கு தடை விதிக்கும் அவசரச் சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது. தீர்மானம் :-5 இந்தியாவில் விவசாயிகள் விளைவித்து கட்டுபடியான விலையின்றிக் கடனாளியாகிக் கொண்டு வரும் நிலையில் மத்திய மாநில அரசுகள்  உணவுப் பொருட்கள் இறக்குமதிக்குத் தடை விதிப்பதோடு நுகர்வோரின் பயன்பாட்டுக்கு வரும் போது பல மடங்கு விலை உயர்வு ஏற்படும் உண்மைச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இடைத் தரகு மற்றும் பதுக்கலைத் தடை செய்து உற்பத்தியாளரான உழவர் மற்றும் நுகர்வோரான பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டும் என்று மத்திய -மாநில அரசுகளை இக்கூட்டம் வலியுறுத்துகிறது. தீர்மானம் :-6 இந்திய அளவில் மஞ்சள் சாகுபடியில் இரண்டாம் இடத்தில் உள்ள  தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தில் தான் அதிகம் உற்பத்தி செய்யப் படுகிறது.எனவே மஞ்சளை  ஒரே  இடத்தில் விற்பனை செய்யவும், மஞ்சளுக்கு நல்ல விலை கிடைக்கும் வகையில்  மஞ்சளை  மதிப்புக் கூட்டப் பட்ட பொருளாக மாற்றப்பட்டு உள்நாட்டிலும் உலக அளவிலும் சந்தைப்படுத்துவதற்கான  தொழிற்சாலையையும்  ,மஞ்சள் வணிக வளாகத்தையும்    ஈரோட்டில் தொடங்கவும் ,10ஆண்டுகளுக்கு மேலாக இருப்பு வைத்து விற்க கூடிய ஒரே விவசாயப் பொருளான மஞ்சளை  விலை  வீழ்ச்சி அடையா வண்ணம் சாகுபடி செலவினங்களைக் கணக்கிட்டு விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படாத வகையில் அரசே மஞ்சளைக் கொள்முதல் செய்து இருப்பு வைத்து காலப்போக்கில் சந்தையில் நல்ல விலை கிடைக்கும் போது அரசு விற்றுக் விவசாயிகளைக் காப்பாற்ற முன் வர வேண்டும் என்று இக்கூட்டம் அரசை வலியுறுத்துகிறது. தீர்மானம் :-7.இந்தியாவில் பன்னெடுங்காலமாக உழவுத் தொழில் செய்வோர் தொடர்ந்து கடனிலும் வறுமையிலும் அதனால் தற்கொலை செய்தும் வரும் நிலை மாற இலவசம்,மானியம்,தள்ளுபடி,சலுகை,கடன் எவையும் தேவையில்லாமல் தன்மானத்தோடும் மரியாதையோடும்,சுதந்திரத்தோடும் வாழ விவசாய விளை பொருட்கள் அனைத்துக்கும் உற்பத்திச் செலவைக் கணக்கிட்டு பட்டறிவு அடிப்படையிலான எம்.எஸ்.சாமிநாதன் குழுவின் பரிந்துரையை ஏற்று   விலை நிர்ணயம்  செய்து விவசாயிகளை தலை நிமிர்ந்து வாழச் செய்ய மத்திய -மாநில அரசுகள் முன் வர வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது. தீர்மானம்:-8.இந்திய அளவில் பல மாநிலங்களில்  ஏற்படுத்தப்பட்டுள்ள லோக்  ஆயுக்தா தமிழ்நாட்டிலும்  உடனடியாக ஏற்படுத்தப்பட்டு .மற்ற சில மாநிலங்களைப் போன்று மாவட்ட வாரியாகவும்  கொண்டு வந்து ஊழல் செய்வோர் கடும் தண்டனைக்கு ஆளாக்கப் படவேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது. தீர்மானம் :-9 இயற்கை விவசாயத்தின் முக்கிய அங்கமான பஞ்ச காவியா தயாரிக்கவும் காங்கேயம்,புளிக்குளம்  நாட்டு மாடுகள் அவசியமாவது மட்டுமின்றி நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் அருமருந்தாக இருந்து வருகிறது.எனவே நாட்டு மாடுகள்  அழிவதைத்   தடுக்க  இந்தியா முழுவதும் நாட்டு மாடுகளைப் பாதுகாக்க மத்திய -மாநில அரசுகள் உடனடி நட வடிக்கை எடுப்பதோடு தமிழ்நாட்டின் பாரம்பரியமானவீர விளையாட்டான ஜல்லிக் கட்டை நடத்தவும் . நாட்டு இனங்களைக் காக்கவும்  அரசு உடனடி நடவடிக்கை எடுக்க  வேண்டும்  என்று இக்கூட்டம் அரசை வலியுறுத்துகிறது. தீர்மானம்:-10.இந்தியா முழுவதும் மாவட்டங்கள் தோறும் நடைபெறும் விவசாயிகள் முறையீட்டுக் கூட்டங்களில் அரசின் கொள்கை முடிவுகள் குறித்து பேச முடிவதில்லை.எனவே மூன்று மாதங்களுக்கு ஒருமுறை  மாநில முதல்வர்கள் தலைமையில் அந்தந்த மாநிலத் தலைநகரங்களிலும்,தேசிய அளவில் பிரதமர் தலைமையில் ஆறு மாதங்களுக்கு ஒருமுறையும் நேரடியாக விவசாயிகள் குறை கேட்புக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்று இக்கூட்டம் மத்திய -மாநில அரசுகளை வலியுறுத்துகிறது. தீர்மானம் :-11.இந்தியாவில்  கிராமங்கள் தோறும் உள்ள இயற்கை வளங்களான நீர், நிலம், காடுகள், மலை, மண், மணல்,மரம்  என்பது அந்தந்தக்  கிராமங்களின் சொத்தாகும்.அக்கிராமத்து மக்களே அதற்கு உரிமையாளருமாவார்.எனவே கிராமத்தின் சொத்துக்களை  மத்திய அரசோ அல்லது மாநில அரசோ அந்த கிராமத்திலிருந்து நீர், மண், மணல், மலை, காடு என்று எதை எடுப்பதாக இருந்தாலும் அந்த கிராம சபையின் அனுமதி பெற்றுத்தான் கையகப்படுத்த பட வேண்டும் என்ற வகையில் அவசரச் சட்டம் இயற்றி தேசத்தின் இயற்கை வளங்களைப் பாதுகாக்க வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது. தீர்மானம் :-12.இந்தியாவில் உள்ள   அனைத்து நிலங்களையும் நில அளவை செய்து  கணக்கிட்டு . 1, 2, 3, 4, 5, 6 என்று வகைப்படுத்தப்பட்டு 1,2,3,4 ஆகிய வகை நிலங்கள் விளைநிலங்கள் எனவும்,5,6 என்ற வகை நிலங்கள் இதரப் பயன்பாட்டுக்குரியவை என்றும் தரம் பிரித்து 1,2,3,4 ஆகிய வகைப் படுத்தப்பட்ட நிலங்கள் தொழில் பயன்பாட்டுக்கு அளிக்கப்படக் கூடாத வளமான நிலங்கள் என்பதைக் குறிப்பிட்டு மற்ற 5,6 இனங்களை மட்டும் அரசு கையப்படுத்தும் வகையில் அவசரச் சட்டம் இயற்றி நிலம் கையப்படுத்துதலில் அரசுக்கும் ,மக்களுக்குமான இடைவெளி நீக்கப்பட்டு மக்களின் அச்சத்தை நிரந்தரமாகப் போக்க வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது. தீர்மானம்:-13. தேசிய அளவிலும் மாநில மாவட்ட அளவிலும் நதிகள்-ஆறுகள் இணைக்கப்பட்டுநதி நீர் மட்டுமின்றி  மக்களின் மனங்களையும்  இணைக்கும் வகையில் நாட்டில் சாதி,மதம்,இனம்,மொழி,நிறம்,அரசியல் என்ற வேறுபாடுகளைக் களைய மக்கள் விழிப்புணவு அடைய வேண்டும் என்றும் மனிதர்களிடையே ஒருவருக்கொருவர் ஒத்தும் உதவியும் வாழ்ந்து உலகம் அமைதி பெற அதற்குரிய உலக அளவில் இயற்கையின் சிறப்பை மனிதன் உணரும் வகையில் இயற்கை குறித்த அனைத்து ரகசியங்களும் எதிர்காலத் தலைமுறைக்கு பாடமாகவும்,பயிற்சியாகவும் கொண்ட வாழ்வியல் கல்வி முறையை உருவாக்க வேண்டும் என்றும் இக்கூட்டம் வலியுறுத்துகிறது. தீர்மானம் :-14. இந்திய நாடு வல்லரசுநாடாக பெட்ரோல் -டீசல் போன்ற எரிபொருளுக்கு மாற்றாக எத்தனாலைப் பயன்படுத்தவும்,நாட்டின் வளம் காக்க பனை உள்ளிட்ட மரங்களைக் காக்கவும்,தேசிய அவமானமான உணவு பொருள் இறக்குமதியை தடை செய்யவும்,பறிபோகும் விவசாய நிலங்களைப் பாதுகாக்கவும் கிராமங்கள் தோறும் உரம் உற்பத்தி-எரிவாயு உற்பத்தி-கால்நடைத் தீவன உற்பத்தி-மின்சார உற்பத்தி போன்ற தேவைகளை அரசை நம்பியிராமல் விவசாயம் சார்ந்த வாழ்வியல் சுயசார்புக் கிராமங்களை உருவாக்கிட தொழில் துறையைப் போன்று இளைஞர்களுக்கு அரசே ஊக்கம் கொடுக்க வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது. மேற்கண்ட தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப் பட்டன.