‘காலிப் பணியிடங்களை நிரப்பாவிட்டால் தலைமை செயலக முற்றுகை: பி.எட்.,வேலையில்லாப் பட்டதாரிகள் சங்கம்

திண்டுக்கல்: இருபதாயிரம் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பாவிட்டால், வரும் மே மாதம் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுவோம் என தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லாப் பட்டதாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. இந்த சங்கத்தின் சார்பில், திண்டுக்கல் முதன்மைக் கல்வி அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் அதன் மாநிலத் தலைவர் ராமச்சந்திரன் பேசியபோது, 2011ல் சமச்சீர் கல்வியில் கணினி அறிவியல் புத்தகம் 6 முதல் 10ம் வரையுள்ள வகுப்புகளுக்கு வழங்கப்பட்டது. அந்தப் புத்தகங்கள் பயன்படுத்தப்படாமல் உள்ளன. மீண்டும் புத்தகங்களை புழக்கத்தில் விட்டு நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழகம் முழுவதும் வேலையின்றி 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பி.எட்., கணினி அறிவியல் ஆசிரியர்கள் உள்ளனர். அவர்களை, மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களில் அமர்த்த வேண்டும். அரசுப் பள்ளிகளில் 10க்கும் மேற்பட்ட பணிகள் கணினியைச் சார்ந்தே உள்ளன. கணினி அறிவியல் படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்., அரசு மேல்நிலைப்பள்ளி கணினி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். வட்டார வள மையங்களில் காலியாக உள்ள கணினி அலுவலர் பணியில் எங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தும் போது கணினி அறிவியல் பாடத் திட்டத்துக்கான பணியிடங்களை உருவாக்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றத் தவறினால் வரும் மே மாதம் 20 ஆயிரம் பேருடன் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்றார்.