20 தமிழர்கள் சுட்டுப் படுகொலை; ஆந்திர காவல்துறையின் காட்டுமிராண்டித் தனம்: பண்ருட்டி வேல்முருகன்

சென்னை: செம்மரம் கடத்தியதாகக் கூறி, தமிழகத்தின் 12 பேர் உள்பட 20 பேர் ஆந்திர மாநில போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டது, ஆந்திர மாநில காவல் துறையினரின் காட்டுமிராண்டித்தனம் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை: ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் செம்மரங்களை வெட்டியதாக கூறி 20 தமிழர்களை அம்மாநில காவல்துறை இன்று சுட்டுப் படுகொலை செய்துள்ளது. ஆந்திரா காவல்துறையின் இந்த கோரத்தாண்டவத்தில் பலியானவர்கள் தமிழகத்தின் திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. தமிழகம் மட்டுமின்றி எந்த ஒரு மாநிலத்தைச் சேர்ந்தவராயினும் சட்டவிரோதமான செயலில் ஈடுபட்டால் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர காக்கை குருவிகளைப் போல சுட்டுப் படுகொலை செய்வது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. சட்டவிரோத செயலில் ஈடுபட்டால் சுட்டுப் படுகொலைதான் தீர்வு என்றால் இந்தியாவில் நீதிமன்றங்களும் சிறைச்சாலைகளும் எதற்காக இருக்கிறது? என்ற கேள்வி எழத்தான் செய்கிறது.. “கண்ணுக்குக் கண் பல்லுக்குப் பல்” என்ற காட்டுமிராண்டித்தனத்தை தமிழக மக்களும் தமிழக காவல்துறையும் கையில் எடுத்தால் ஆந்திரா மாநிலத்தவர் தமிழகத்தில் வாழ முடியுமா? என்பதையும் அம்மாநில அரசும் காவல்துறையும் சிந்திக்க தவறிவிட்டது. ஆந்திரா காவல்துறையினர் இந்த எதேச்சதிகாரப் போக்கு இந்திய வரலாற்றில் இதுவரையில் இல்லாத பெருங்கொடுமையாக இருக்கிறது. இதனை இந்திய மத்திய அரசும் தமிழக அரசும் மிகவும் வன்மையாகக் கண்டித்து ஆந்திரா அரசு மீதும் அம்மாநில காவல்துறை மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். மேலும் ஆந்திரா வனப்பகுதியில் செம்மரம் வெட்டினார்கள் என்று கூறி இதுவரை சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழர்களை ஆந்திரா வனத்துறை மற்றும் காவல்துறை சுட்டுப் படுகொலை செய்திருக்கிறது- வெட்டிப் படுகொலை செய்திருக்கிறது; இந்த சம்பவங்கள் அனைத்தையுமேயே அம்மாநில அரசு ஒட்டுமொத்தமாக மூடி மறைத்துவிட்டது. தற்போது இந்த ஒரு சம்பவம் மட்டுமே வெளி உலகத்துக்கு தெரிய வந்துள்ளது. ஆகையால் பணியில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு விசாரணை ஆணையம் அமைத்து ஆந்திரா வனத்துறை மற்றும் காவல்துறையால் படுகொலை செய்யப்பட்ட, சிறையில் அடைக்கப்பட்ட அப்பாவி கூலித் தொழிலாளர்களுக்கும் அவர்தம் குடும்பத்துக்கும் உரிய நீதியும் நிவாரணமும் கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இனியும் இதுபோன்ற காட்டுமிராண்டித்தனமான போலி மோதல்களை ஆந்திரா வனத்துறை, காவல்துறை தொடர்ந்தால் ஆந்திரா- தமிழகம் மாநிலங்களுக்கு இடையே மிகப் பெரிய இனமோதலாக வெடிக்கவே செய்யும் எனவும் எச்சரிக்கிறேன்..