பன்றிக்காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்று ஆட்சியர் கருணாகரன் உத்தரவிட்டுள்ளார்.
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் ஆட்சியர் கருணாகரன் தலைமையில், மாவட்டத்தில் பன்றிக்காய்ச்சல் பரவாமல் தடுத்திடும் பொருட்டு மாவட்ட அலுவலர்களுக்கான மாவட்ட அளவிலான பயிற்சி மற்றும் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய ஆட்சியர் கருணாகரன் பன்றிக்காய்ச்சல் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கை ஆகியன போர்க்கால அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை மூலமாக மேற்கொள்ள வேண்டும்.
இந்த காய்ச்சலின் அறிகுறிகளாக சளி, காய்ச்சல், இருமல், தும்மல், தொண்டை வலி, சிலருக்கு வாந்தி அல்லது வயிற்றுப்போக்கு ஆகியன ஏற்படலாம். வைரஸ் கிருமியானது நோய் தொற்று ஏற்பட்டவர்; இருமும் போதோ அல்லது தும்மும் போதோ ஏற்படும் நீர்த்திவலைகள் மூலமாக காற்றில் பரவுகிறது. இந்த நீர்த்திவலைகள் படிந்த பொருட்களை தொடும்போது கைகளில் இந்த கிருமி ஒட்டிக்கொள்கிறது.
கைகளை கழுவாமல் கண்கள், மூக்கு அல்லது வாயைத் தொடும்போது கிருமித்தொற்று ஏற்படுவதை பொதுமக்களிடத்தி;ல விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இந்த நோய் பன்றிகளிடமிருந்து மற்றவர்களுக்கு தொற்றுவது இல்லை என்பதையும், தற்பொழுது இந்த நோய் பாதிக்கப்பட்ட மனிதர்களிடமிருந்து மட்டுமே மற்றவர்களுக்கு பரவுகிறது என்பதை பொது மக்களிடத்தில் தெளிவு படுத்த வேண்டும். எந்த விதமான காய்ச்சல் ஏற்பட்டாலும் மருத்துவரை ஆலோசிக்க வேண்டும். வைரஸ் காய்ச்சல் அறிகுறிகள் இருப்பின் உடனடியாக மருத்துவரின் ஆலோசனைப்படி பரிசோதிக்கப்பட்டு மருந்தினை ஐந்து தினங்கள் உட்கொண்டால் இந்த நோயை எளிதில் குணப்படுத்தலாம்.
ஆகவே, இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களை உடனிருந்து கவனிப்பவர் களுக்கு மருத்துவ ஆலோசனையில் பெயரில் தற்காப்பாக மருந்துகளை வழங்க அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் இந்நோய்க்கான பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் பன்றிக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளாக மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை, கல்வித்துறை ஆகியவற்றின் மூலம் பொது இடங்கள், மக்கள் கூட்டம் அதிகம் உள்ள இடங்கள் (பேருந்து நிலையம், ரயில் நிலையங்கள்) ஆகியவற்றில் பன்றிக்காய்ச்சல் விழிப்புணர்வு சுவரொட்டிகள், பேனர்கள் ஆகியன வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு பன்றிக்காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட வேண்டும்.
மேலும், அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் ஆகியவற்றில் கை சுகாதாரம் பேணுதல் மற்றும் பன்றிக்காய்ச்சல் தடுப்பு குறித்து சுகாதார நலக்கல்வி வழங்குவதற்கு தேவையான முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். திருநெல்வேலி மாவட்டத்தில் பன்றிக்காய்ச்சலுக்கு இலவச பரிசோதனை மையம் அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனையில் செயல்பட்டு வருகிறது. மேலும், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பன்றிக்காய்ச்சல், கண்காணிப்புக்கென தனிவார்டுகள் அமைக்கப்பட்டு போதுமான பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, தேவையான அளவு பாதுகாப்பு உபகரணங்கள், மாத்திரைகள், சிரப்புகள் ஆகியன இருப்பில் வைத்துக்கொள்ள வேண்டும்.
மேலும், தொடர்ந்து மாவட்டம் முழுவதிலும் பன்றிக் காய்ச்சல் விழிப்புணர்வு மற்றும் காய்ச்சல் கண்காணிப்புப் பணிகள் ஆகியன தொடர் தீவிர நடவடிக்கைகளாக மேற்கொள்ளப்பட வேண்டும். எனவே பொது மக்கள் அனைவரும் பன்றிக்காய்ச்சல், அறிகுறிகள், பரிசோதனை முறைகள், கை சுகாதாரம் பேணுவதன் அவசியம் ஆகியவற்றை குறித்து அறிந்து கொள்ளவும், நோய் அறிகுறிகள் இருப்பின் காலம் தாழ்த்தாது அரசு மருத்துவமனையை அணுகி முறையான இலவச ஆலோசனை பரிசோதனைகள் மற்றும் சிகிச்சை பெற்றுக்கொள்ளவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மருத்துவர்கள் தனித்துவத்துடன் பணியாற்ற வேண்டும் என்றார். இக்கூட்டத்தில் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.