வேலூர்:
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேலூரில் நடைபெற்ற எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவில் சனிக்கிழமை இன்று மாலை கலந்து கொண்டு பேசினார். அவரது பேச்சில் தற்போதைய அரசியல் சூழல்களுடன் குறிப்பிட்டும், ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். ஆட்சிக் கால சாதனைகளையும் சொல்லி அனல் பறக்கப் பேசினார். அப்படி அவர் பேசிக் கொண்டிருந்த போது மேடையில் திடீரென மின் கசிவு ஏற்பட்டு, எல்.இ.டி டிவி மின்சுற்று தீப்பிடித்தது. இதனால் அந்தப் பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்தது. தீ அணைப்பானைப் கொண்டு உடனடியாக தீ அணைக்கப்பட்டது. மின்சுற்றில் ஏற்பட்ட தீ, டிவி.க்கு பரவிடாமல் தடுக்க உடனடியாக பெரிய எல்.இ.டி., டிவி அணைக்கப்பட்டது.
மேடையில் திடீரென ஏதோ புகைமூட்டம் ஏற்பட்டதால், அங்கிருந்த தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தொண்டர்களை அமைதி காக்கும் படி கூறிய முதல்வர், தனது சிறப்புரையை நிறைவு செய்தார். தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் மேடையில் வைத்து வழங்கப்பட்டது.