அரசு மற்றும் அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில் அரசு ஊதியம் பெறும் ஆசிரியர்கள் டியூசன் எடுக்கக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில்அரசு மற்றும் அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில் 4 லட்சத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள், அரசு ஊதியம் மற்றும் சலுகைகளை அனுபவிப்பதோடு தனியாக டியூசன் எடுத்து மாணவர்களிடம் கட்டணம் வசூலித்து சம்பாதிக்கின்றனர்.
சிலஅரசு ஆசிரியர்கள் தனிப்பட்ட முறையில் டியூசன் எடுக்கின்றனர். சிலர் பணிநேரம் போக தனியார் டியூசன் மையங்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் டியூசன் எடுக்கின்றனர்.
மாணவர்கள்தங்களிடம் டியூசனுக்கு வரவேண்டும் என்பதற்காக டியூசன் எடுக்கும் மேல்நிலை ஆசிரியர்கள் மற்றும் பத்தாம் வகுப்பு ஆசிரியர்கள், பள்ளி வகுப்புகளில் சரியாக பாடம் சொல்லித்தரவில்லை என்ற புகார்கள் எழுந்தன. தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்தி படிக்க முடியாமல்தான் ஏழை மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் பயிலுகின்றனர். அப்படி கஷ்டப்பட்டு படிக்கும் மாணவர்களிடம் ஆசிரியர்கள், தங்களின் சுயநலனுக்காக அவர்களிடம் பணத்தை கட்டணமாக பெற்றுக்கொண்டு டியூசன் எடுக்கின்றனர்.
இதுதொடர்பாக பல பெற்றோர்கள் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்ததை அடுத்து அரசு ஊதியம் பெறும் ஆசிரியர்கள் டியூசன் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி டியூசன் எடுக்க தடை இருப்பதால் ஆசிரியர்கள் அதைப் பின்பற்ற வேண்டும் என மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆசிரியர்களை எச்சரித்து உள்ளனர்.
செய்தி: கே.சி. சாமி