
சென்னை சர்வதேச திரைப்பட விழா, பிப்ரவரி 18-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை சென்னையில் நடைபெற உள்ளது. இதில் 53 நாடுகளைச் சேர்ந்த 91 திரைப்படங்கள் பங்குபெற உள்ளன. ‘இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன்’ நடத்தும் இந்த திரைப்பட விழாவை இம்முறை பிவிஆர் இணைந்து வழங்குகிறது.
18-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடர்பான செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் ‘இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன்’ பொதுச்செயலாளரும், விழாக்குழு இயக்குநருமான இ.தங்கராஜ், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைத் தலைவர் காட்டகர பிரசாத் உள்ளிட்ட நிர்வாகிகள் கூறியதாவது:
சர்வதேச திரைப்பட விழாவில் பங்குபெறும் திரைப்படங்கள் சென்னையிலுள்ள பிவிஆர் மல்டிபிளெக்ஸ் (சத்யம் சினிமாஸ் – சாந்தம், சீசன்ஸ், சிக்ஸ் டிகிரீஸ், செரின் அரங்குகள் ) மற்றும் காசினோ திரையரங்குகளில் திரையிடப்படுகின்றன.
தொடக்க விழா திரைப்படமாக பிரான்ஸ் நாட்டின் ‘தி கேர்ள் வித் எ பிரேஸ்லெட்’ படமும், நிறைவு விழா திரைப்படமாக ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ‘ஐ வாஸ், ஐ ஆம், ஐ வில் பி’ திரைப்படமும் திரையிடப்படுகின்றன.
இவ்விழாவில் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட படங்களும், கேன்ஸ் திரைப்பட விழா, பெர்லின், ஈரான், வெனீஸ், ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் பங்குபெற்ற படங்களும் இடம்பெறுகின்றன.
ஈரானில் இருந்து 11 திரைப்படங்களும், பிரான்சில் இருந்து 6 படங்களும், ஹங்கேரியில் இருந்து 4 படங்களும் இடம்பெறும். ஆப்கானிஸ்தான், அல்பேனியா, அங்கோலா, எத்தியோப்பியா, கிர்கிஸ்தான், லெபனான், ருவாண்டா மற்றும் வியட்நாம் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த படங்கள் முதல் முறையாக பங்கேற்கின்றன.
இந்த திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் ‘பாஸ்வேர்டு’,’அக்கா குருவி’ உள்ளிட்ட 4 தமிழ்ப்படங்கள் இடம்பெறுகின்றன. மேலும், தமிழ்ப் படங்களுக்கான போட்டியில் ‘லேபர்’, ‘கல்தா’, ‘சூரரைப் போற்று’, ‘பொன்மகள் வந்தாள்’ , ‘மழையில் நனைகிறேன்’, ‘மை நேம் இஸ் ஆனந்தன்’, ‘காட்ஃபாதர்’, ‘தி மஸ்கிட்டோ பிலாசபி’, ‘சீயான்கள்’, ‘சம் டே’, ‘காளிதாஸ்’, ‘க/பெ ரணசிங்கம்’, ‘கன்னி மாடம்’ ஆகிய 13 தமிழ் திரைப்படங்கள் பங்கேற்கின்றன.
இதில் வெற்றி பெறும் திரைப்படங்களுக்கு முதல் பரிசாக ரூ. 2 லட்சம், இரண்டாவது பரிசாக ரூ.1 லட்சம், மூன்றாவது பரிசாக ரூ.1 லட்சம் வழங்கப்படும். மேலும், யூத் ஐகான் விருது உள்ளிட்ட சிறப்பு விருதுகளும் வழங்கப்படுகின்றன.
இந்த விருதுகள் நிறைவு விழா நிகழ்ச்சியில் வழங்கப்படும். மேலும், திரை மற்றும் இலக்கிய துறைகளைச் சேர்ந்த வல்லுநர்கள் கலந்துகொள்ளும் கருத்தரங்குகளும் நடத்தப்பட உள்ளன.
சென்னை சர்வதேச திரைப்பட விழாவுக்கு தமிழக அரசு ரூ.75 லட்சம் நிதியுதவி அளித்துள்ளது. விழாக்குழு சார்பில் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
அண்டை மாநிலங்களில் திரைப்பட விழாக்களுக்கென ரூ.5 முதல் ரூ.6 கோடி வரை வழங்கப்படுகிறது. எதிர்காலத்தில் தமிழகத்திலும் அது போன்று வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்..