
கடந்த 4 வருடமாக காதலித்த காதலனுடன் திருமணம் நடைபெறவிருந்த வேளையில் 2 வது காதலனுடன் மணப்பெண் ஓட்டம் பிடித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் நகரை சேர்ந்தவர் 23 வயது இளம்பெண். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் இவருக்கும் அதே நிறுவனத்தில் வேலை செய்து வரும் நெமிலிச்சேரியை சேர்ந்த 24 வயது இளைஞருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது.
கடந்த 4 வருடமாக இருவரும் காதலித்து வந்த நிலையில் இரு வீட்டார் சம்மதத்துடன் நேற்று சென்னையில் திருமணம் நடைபெறவிருந்தது. இதற்காக நேற்று முன்தினம் மாலை திருமண வரவேற்பும் இனிதே நடைபெற நண்பர்களும் உறவினர்களும் வந்து மணமக்களை வாழ்த்தினர்.
நிகழ்வு முடிந்து அறைக்கு தூங்க சென்ற மணப்பெண்ணை மறுநாள் அதிகாலை திருமணத்திற்கு எழுப்ப அவரது தாயார் அறைக்கு சென்றார்.
அங்கு மணப்பெண் காணாமல் போனதால் பெரும் அதிர்ச்சியடைந்து மணமகன் வீட்டாருக்கு தெரியப்படுத்தினார். இதுபற்றி வில்லிவாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
போலீசார் விசாரணையில் அந்த இளம் பெண்ணிற்கு வேறு ஒரு ஆணுடன் இரண்டாவதாக காதல் ஏற்பட்டுள்ளது. இதனால் திருமண வரவேற்பு முடிந்ததும், நள்ளிரவில் புதிதாக காதலித்த 2-வது காதலருடன் மண்டபத்தை விட்டு ஓட்டம் பிடித்திருப்பது தெரிந்தது. மேலும் தன்னுடைய இரண்டாவது காதலனுடன் கிண்டி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளார்.
போலீசார் இரு வீட்டாரையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் இளம்பெண் இரண்டாவது காதலனுடன் தான் செல்வேன் என தெரிவித்துள்ளார். இதனால் மணமகன் வீட்டார் கடும் அதிர்ச்சியடைந்தனர். இளம்பெண்ணின் பெற்றோரும் செய்வதறியாது கண்ணீருடன் திரும்பினர்.