திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகேயுள்ள கொளத்துப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு செல்போனில் ஆபாசப் படம் காட்டி ஆபாசமாகப் பேசியதாக அளிக்கப்பட்ட புகாரில் ஆசிரியர் கைது செய்யப்பட்டார். 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வரும் கொளத்துப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில், தாராபுரம் தெற்குத் தெருவைச் சேர்ந்த காளிமுத்து (வயது 45) என்பவர் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர் 2 ஆண்டுக்கு முன்னர் தளவாய்ப்பட்டினத்தில் இருந்து மாற்றலாகி வந்தாராம். ஆசிரியர் காளிமுத்து சில நாட்களாக 7, 8–ம் வகுப்பில் படிக்கும் மாணவிகளிடம் தனது செல்போனில் உள்ள ஆபாசப் படங்களைக் காட்டி அவர்களிடம் ஆபாசமாகப் பேசியுள்ளார். இதனால் அந்த மாணவிகள் வெறுப்படைந்துள்ளனர். ஒரு கட்டத்தில், பொறுமையிழந்த மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் ஆசிரியர் குறித்து புகார் தெரிவித்துள்ளனர். அதற்கு அவர்கள் தலைமை ஆசிரியரிடம் புகார் செய்ய வேண்டியதுதானே என்று கூறியுள்ளனர். ‘தலைமை ஆசிரியர் தேர்வு கண்காணிப்பு பணிக்காக சென்றிருப்பதால், அவர் வந்தவுடன் புகார் செய்வதாகக் கூறினர். ஆனால் ஆசிரியரின் தொடர் அத்துமீறலால் கோபமுற்ற மாணவிகளின் பெற்றோர்கள் தலைமை ஆசிரியரிடம் புகார் செய்தனர். அதன் பின்னர் தாராபுரம்–கரூர் சாலையில் பள்ளியின் முன்பு மறியலில் ஈடுபட்டு ஆசிரியரைக் கைது செய்ய வேண்டும் என்று கோஷமிட்டனர். அந்த நேரத்தில் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன், திருப்பூர் மாநகராட்சி துணை மேயர் குணசேகரன் ஆகியோர் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காரில் அந்த வழியில் சென்றனர். அவர் வந்த காரை பொதுமக்கள் முற்றுகையிட்டு. ஆசிரியரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தனர். அதைத் தொடர்ந்து அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் உடனே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அமித்குமார் சிங்கை தொடர்பு கொண்டு பேசியதன் பேரில், போலீஸ் உயரதிகாரிகள் ஆசிரியர் காளிமுத்துவை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு நடந்த விசாரணையின் அடிப்படையில் ஆசிரியர் காளிமுத்து கைது செய்யப்பட்டார். அவர் பணியிடை நீக்கம் செய்யப்படுவார் என்று கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Popular Categories