சென்னை: விழுப்புரத்தில் நடுரோட்டில் கார் கவிழ்ந்து பெண் டாக்டர் ஒருவர் உயிரிழந்தார். இருவர் காயமடைந்தனர். திருமண நிகழ்ச்சி ஒன்றுக்குச் சென்றுவிட்டு காரில் திரும்பியபோது இந்த விபத்து ஏற்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் அச்சிறுப்பாக்கத்தைச் சேர்ந்த சிவபிரகாசம் மகள் பிரணவப்பிரியா. இவர் மதுராந்தகம் அருகே உள்ள சின்னகேளம்பாக்கத்தில் தனியார் மருத்துவஃப் கல்லூரி மருத்துவமனையில் டாக்டராக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் ஒரு காரில் பிரணவப்பிரியா தனது தோழிகளான திருவல்லிக்கேணியைச் சேர்ந்த டாக்டர் பிரீத்தி, நீலாங்கரையைச் சேர்ந்த டாக்டர் திருமேனி ஆகியோருடன் புதுச்சேரியில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்குச் சென்றார். நேற்று காலை திருமண நிகழ்ச்சி முடிந்ததும் இவர்கள் 3 பேரும் புதுச்சேரியில் இருந்து அச்சிறுப்பாக்கத்துக்கு காரில் புறப்பட்டனர். காரை பிரணவப்பிரியா ஓட்டினார். விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே மொளசூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை நடுவிலிருந்த தடுப்புச்சுவரில் மோதி உருண்டபடி சாலையின் மறுபக்கத்தில் கவிழ்ந்தது. இதில் டாக்டர் பிரணவப்பிரியா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது தோழிகள் பிரீத்தி, திருமேனி ஆகிய 2 பேரும் படுகாயமடைந்தனர். அருகிலுள்ளோர் விரைந்து சென்று காயமடைந்த இருவரையும் மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்தச் சம்பவம் குறித்து அறிந்து விரைந்து வந்த கிளியனூர் போலீசார் பிரணவப்பிரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரணவப்பிரியாவின் தந்தை சிவப்பிரகாசம் அச்சிறுப்பாக்கத்தில் மருந்துக் கடை, நகைக் கடை, ஜவுளிக் கடை, மருந்து தயாரிக்கும் நிறுவனம் ஆகியவற்றை நடத்தி வருகிறார். பிரணவப்பிரியா இரு தினங்களுக்கு முன்னர்தான் அச்சிறுப்பாக்கத்தில் சொந்தமாக கிளினிக் ஒன்றைத் தொடங்கினாராம்.
சாலைத்தடுப்பில் கார் மோதி பெண் டாக்டர் பலி: 2 பேர் காயம்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari