சென்னை:
கிள்ளிவளவனுக்கு நிதியுதவி அளித்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் பாராட்டியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,
நீதிக்கட்சியில் தன்னுடைய பள்ளிப் பருவத்தில் இணைந்து பணியாற்றி, பின்னாளில் அறிஞர் அண்ணாவின் அறிவார்ந்த தோழராய் அவரோடு நெருக்கமாக அரசியல் களம் கண்டு, அவருடைய ‘ஹோம்லேண்ட்’ ஆங்கில இதழின் ஆசிரியர் குழுவில் இடம் பெற்று அரும்பணியாற்றிய கிள்ளிவளவன் பெருந்தலைவர் காமராஜரால் ஈர்க்கப்பட்டு காங்கிரஸ் பேரியக்கத்திற்காகத் தன்னை முற்றாக அர்ப்பணித்துக் கொண்ட தனித்துவம் மிக்க நெறிசார்ந்த அரசியல்வாதி ஆவார் .
வாழப்பாடி இராமமூர்த்தி முதல் பழ. நெடுமாறன் வரை இவருடைய ஆழ்ந்தகன்ற அரசியல் அறிவில் பெரிதும் ஈடுபாடு கொண்டவர்கள்.
சுயநலச் சிந்தனையுடன் பொது வாழ்க்கையில் வலம் வரும் போலித்தனமும் பொய்ம்மையும் நிறைந்த மலினமான மனிதர்களுக்கு நடுவில், தனக்கென்று எதையும் பெரிதாக எதிர்பாராமல் தன் தெளிந்த அரசியல் ஞானத்தைத் தான் நெஞ்சில் நேர்ந்து கொண்ட தலைவர்களுக்காகவும் இயக்கங்களுக்காகவும் அர்ப்பணித்த அரிய மனிதர் கிள்ளிவளவன்.
அரவணைப்பின்றி வயோதிகத்தில் நோயுற்று வாடும் அவருடைய நிலையறிந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அன்புடன் உதவிக்கரம் நீட்டி அவரது பெயரில் ஐந்து இலட்சம் ரூபாயை டெபாசிட் செய்ததுடன், உடனடி செலவுக்காக ரூ.5000/- அளித்திருப்பதும், அமைச்சர்களை நேரிடையாக அனுப்பி வைத்து ஆறுதல் வழங்கி இருப்பதும் பாராட்டுக்குரிய பண்பு நலனாகும்.
முழுவதுமாகப் புறக்கணிக்கப்பட்ட ஒரு மூத்த காங்கிரஸ் தலைவருக்கு உள்ளம் கனிந்து உதவிக்கரம் நீட்டிய முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு காந்திய மக்கள் இயக்கம் தன் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது என்று கூறியுள்ளார்.