
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வத்திராயிருப்பு கூமாபட்டியில் மிகவும் சிறப்பு வாய்ந்த முத்தாலம்மன் கோவில் தேரோட்ட திருவிழா புதன் கிழமை கோலாகலமாக நடந்தது
இங்கு ஊரின் மையப் பகுதியில் உள்ள முத்தாலம்மனுக்கு மக்கள் ஒவ்வொரு ஆண்டும் திருவிழா எடுத்து வழிபடுவது வழக்கம். ஏழு நாட்கள் நடைபெறும் இத் திருவிழாவின் ஏழாம் நாளில் முத்தாலம்மன் உருவமாய் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து திருத்தேரில் வீதியுலா செல்வார்.
பல்வேறு சிறப்புகளை கொண்ட இவ்விழா நேற்று முன்தினம் ஊரின் உற்சவ மண்டபத்தில் அம்மன் கண் திறப்பு நிகழ்ச்சியுடன் தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் மண்டபத்திற்குச் சென்று அம்மனை நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனர். அதன் பிறகு நேற்று அதிகாலையில் அம்மன் திருத்தேரில் எழுந்தருளினார். அவருக்கு சிறப்பு பூஜைகள் செய்து தேரோட்டம் துவங்கியது. தேர் ஊரின் ரத வீதிகள் வழியாக சென்றது. வழிநெடுகிலும் பக்தர்கள் ஆடு, கோழி ஆகியவற்றை பலி கொடுத்து அம்மனை வணங்கினர். பெண்கள் மாவிளக்கு ஏற்றியும் கொழுக்கட்டை படையலிட்டும் வழிபாடு செய்தனர். தேர் ஊர் முழுவதையும் சுற்றி மீண்டும் கோயிலை சென்றடைந்தது. அங்கு பக்தர்கள் எதிர்சேவை செய்து அம்மனை கோவிலில் நிலை நிறுத்தினர். அங்கு அம்மனுக்கு விசேஷ பூஜைகளும் மஞ்சள் நீராட்டு வைபவமும் நடந்தது. அதன் பின்னர் பக்தர்களுக்கு அருள்வாக்கு சொல்லும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பக்தர்கள் பயபக்தியுடன் நின்று அம்மனின் அருள்வாக்கை கேட்டறிந்தனர். பிறகு இரவு அம்மனை கரைப்பதற்காக கொண்டு சென்றனர். அதற்கு முன்பாக அம்மன் பக்தர்களுக்கு “பிரியாவிடை” அளிக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் அம்மன் கோவிலை மூன்று முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு பிரியா விடை வழங்கி சென்றார். திருவிழா கமிட்டி நிர்வாகிகள் உறுப்பினர்கள் இவ்விழாவிற்கான ஏற்பாடு செய்தனர்.
போலீசார் மீது தாக்குதல் கூட்டத்தினரை கலைக்க தடியடி..
இத்திருவிழா பாதுகாப்புக்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து போலீசார் வரவழைக்கப் பட்டிருந்தனர். அவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது ஒரு பிரிவை சேர்ந்தவர்கள் கோவிலுக்கு செல்லும் வழியில் பட்டாசு வெடித்து ஆரவாரம் செய்து கொண்டிருந்தனர். இதனை அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் கண்டித்தனர். இதனால் போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதை பார்த்த மற்றொரு பிரிவை சேர்ந்த இளைஞர்கள் வாக்குவாதம் செய்த பிரிவினருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது. இதனை அறிந்த போலீசார் லேசான தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர். பிறகு இரு பிரிவை சேர்ந்தவர்களின் தெருக்களிலும் கூடுதல் போலீசார் பாதுகாப்புக்கு போடப்பட்டனர். இதில் கீழத்தெரு பகுதியில் பாதுகாப்புக்காக நின்றிருந்த மம்சாபுரம் தலைமை காவலர் சண்முக பாண்டியன் என்பவரை ஒரு பிரிவு இளைஞர்கள் தகராறு செய்து அவரை கீழே தள்ளி கட்டையால் தாக்கினார். இதில் அவருக்கு முதுகு கை, கால் ஆகியவற்றில் காயம் ஏற்பட்டது. அவர் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். போலீசார் தாக்கப்பட்டதை அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் உயர் அதிகாரிகள் கிராமத்திற்கு வந்தனர். காயம் அடைந்த போலீசாருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் சம்பந்தப்பட்ட பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளவும் குற்றவாளிகளை உடனடியாக பிடிக்கவும் உத்தரவிட்டனர்.
இச்சம்பவத்தில் ஈடுபட்டு போலீசாரை தாக்கிய கீழத் தெருவை சேர்ந்த சசிகுமார், அருண்பாண்டியன், அமச்சியாபுரம் காலனியைச் சேர்ந்த அசோக், பீமன், சுரேஷ், வீராச்சாமி மற்றும் சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரும் மீதும் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய அவர்களை தேடி வருகின்றனர்.
