
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே வ. புதுப்பட்டியில் பிரசவத்திற்காக ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்ட தாயும், குழந்தையும் உயிரிழந்ததை தொடர்ந்து உறவினர்கள் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
வத்திராயிருப்பு அருகே வ.புதுப்பட்டி திரு.வி.க தெருவில் வசித்து வருபவர் ராம்குமார்(24), இவரது மனைவி அரங்கநாயகி (18). இவர்களுக்கு திருமணம் ஆகி 2 ஆண்டுகள் ஆன நிலையில் கர்ப்பிணியான அரங்கநாயகி வ.புதுப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.
ஞாயிற்றுக்கிழமை அரங்கநாயகிக்கு பெண் குழந்தை பிறந்து சிறிது நேரத்தில் இறந்தது. மேலும் சிறிது நேரத்தில் தாயின் உடல்நிலையும் அதிக இரத்தப் போக்கு காரணமாக மோசமானது. அம்புலன்ஸ் மூலம் மேல் சிகிச்சைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டடார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மற்றொரு தரப்பினர் வ.புதுப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போதிய மருத்துவர்கள் இல்லாத நிலையில் செவிலியர்களே பிரசவம் பார்த்ததாகவும் அதனால் தான் குழந்தையும் தாயும் இறந்ததாக குற்றம் சாட்டினர்.
போலீசார் அவர்களுடன் நீண்ட நேரம் பேச்சு வார்த்தை நடத்தினர். போதிய மருத்துவர்கள் செவிலியர்கள் வ. புதுப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நியமிக்க நடவடிக்கை எடுப்பதாக போலீசாரும் மருத்துவத்துறை அதிகாரிகளும் உறுதி அளித்ததை அடுத்து கலைந்து சென்றனர். இதைத்தொடர்ந்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.