காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் ஜன. 22 -இல் 33 -வது பட்டமளிப்பு விழா: தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்று 1,124 மாணவ, மாணவியர்களுக்கு நேரில் பட்டம் வழங்குகிறார்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் 33-வது பட்ட
பட்டமளிப்பு விழா வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 22) காலை 10.30 மணியளவில் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாக் கலையரங்கில் நடைபெறவுள்ளதாக அதன் துணைவேந்தர் க. ரவி தெரிவித்தார்.
இதுகுறித்து வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதா வது:
கடந்த 2019 ஆம் ஆண்டிற்கு பிறகு தற்போது அழகப்பா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது.விழாவில் தமிழக ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என். ரவி தலைமைவகித்து மாணவ, மாணவியருக்கு பட்டங்கள் வழங்குகிறார்.
விழாவில் முதன்மை விருந்தினராக மத்திய கல்வி அமைச்சரும், திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சருமான தர்மேந்திர பிரதான் கலந்து கொண்டு பட்டமளிப்பு விழா பேருரை ஆற்றுகிறார். தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி விழாவில் பங்கேற்று சிறப்பிக்கிறார்.
இவ்விழாவில் டி.லிட். பட்டம் ஒருவரும், டி.எஸ்சி. பட்டம் 4 பேரும், பி.ஹெச்டி பட்டம் 646 பேர், பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளில் பயின்ற 5,034 மாணவர்கள், இணைப்புக் கல்லூரி களில் பயின்று 47,198 மாணவர்கள், இணைவுக் கல்வித் திட்டத்தின் கீழ் பயின்ற 8,706 மாணவர்கள், தொலை நிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் பயின்ற 48,026 மாணவர்களும் என 1 லட்சத்து 9 ஆயிரத்து 615 மாணவ, மாணவிகள் பட்டங்கள் பெறுகின்றனர்.
இதில் 1,124 மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்கள் நேரிடையாக ஆளுநர் வழங்குகிறார். அதாவது
டி.லிட். டி.எஸ்சி. பி.ஹெச்டி, எம்.பில் முடித்தவர்களும், முதுநிலையில் முதல்தரம் பெற்றவர்கள், இளநிலையில் முதல் தரம் பெற்றவர்கள் நேரில் ஆளுநரிடம் பட்டம் பெறுகிறார்கள்.பிற்பகல் வரை நடைபெறும் இவ்விழா நிறைவுற்றதும் தமிழக ஆளுநர் பல்கலைக்கழக அறிவியல் வளாகப் பணிகளை பார்வையிடுகிறார் என்றார்.