விருதுநகரில் தபால் நிலைய ஊழியர் தவற விட்ட ரூ.1.45 லட்சத்தை ஒரே நாளில் போலீசார் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர்.
விருதுநகர் நகராட்சி சாலையில் உள்ள தபால் நிலையத்தில் தலைமைத் தபால் ஊழியராக பணிபுரிந்து வருபவர் சுப்பையா. இவர் நாள்தோறும் அஞ்சலகத்தில் வாடிக்கையாளர்கள் செலுத்தும் பணத்தை மாலையில் தலைமைத் தபால் நிலையத்திற்கு எடுத்துச் சென்று ஒப்படைப்பது வழக்கம்.
இந்நிலையில், கடந்த ஜன.,19 அன்று அஞ்சலகத்திற்கு வந்த ரூ.1.45 லட்சத்தை ஒரு பையில் எடுத்துக் கொண்டு தனது இரு சக்கர வாகனத்தில் வாடியான் தெரு வழியாகச் சென்றுள்ளார். அப்போது, பை தவறி கீழே விழுந்துள்ளது. திரும்ப வந்து பார்த்த போது பணப் பையை காணவில்லை.
எனவே, முத்தையா இதுகுறித்து விருதுநகர் பஜார் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில், முதியவர் ஒருவர் பணப் பையை எடுத்துச் செல்வது தெரிய வந்தது. இதையடுத்து, அவரை மடக்கிய போலீசார், அவரிடமிருந்த ரூ.1.45லட்சத்தை உடனே மீட்டனர்.
இதையடுத்து, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சோமசுந்தரம், காணாமல் போன பணத்தை தபால் அலுவலர் முத்தையாவிடம் ஒப்படைத்தார்.
பின்பு, துரிதமாக செயல்பட்டு பணத்தை கண்டுபிடித்த பஜார் காவல் நிலைய ஆய்வாளர் சித்ரகலா, சிறப்பு சார்பு ஆய்வாளர் சுவாமிநாதன், தலைமை காவலர் பாக்கியராஜ், குற்றப்பிரிவு காவலர்கள் பிரபு, சிவக்குமார், முத்து அய்யனார் ஆகியோருக்கு பாராட்டு தெரிவித்தார்.