
விருதுநகரில் காயமடைந்து 75 நாள்களுக்கும் மேலாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த யானை லலிதா (65) இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த சேக் முகமது என்பவருக்குச் சொந்தமான 65 வயதான லலிதா என்ற பெண் யானை கடந்த ஜனவரி 2ம் தேதி விருதுநகரில் ஒரு பெருமாள் கோயிலுக்கு சொர்க்கவாசல் திறப்பு விழாவுக்கு கொண்டுவரப்பட்டது. லாரியிலிருந்து கீழே இறக்கியபோது பக்கவாட்டில் சரிந்து விழுந்து யானை பலத்த காயமடைந்தது.
திருவிழா முடிந்து மீண்டும் ராஜபாளையத்திற்கு அழைத்துச் செல்ல வனத்துறையினர் அனுமதி மறுத்ததால் விருதுநகர் ரயில்வே காலனி முத்து மாரியம்மன் கோயில் வளாகத்தில் கட்டிவைக்கப்பட்டு லலிதா யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே யானை லலிதாவுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும் காயங்கள் ஆறாமல் உள்ளதால் யானை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விலங்குகள் நல ஆர்வலர்கள் புகார் எழுப்பினர்.
தொடர் புகார் காரணமாக தனியாருக்குச் சொந்தமான இந்த யானையை வனத்துறையினர் கைப்பற்றி உரிய சிகிச்சை அளிக்குமாறு வனத்துறை தலைமை காட்டுயிர் பாதுகாவலர் ஸ்ரீனிவாஸ் ஆர்.ரெட்டி, மேகமலை வனச்சரக துணை இயக்குனர் திலீப்குமாருக்கு கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து, சிகிச்சை பெற்று வந்த யானை லலிதாவை மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன் நேரில் வந்து பார்வையிட்டார்.
அதன்பின். யானை பராமரிப்பு தொடர்பாக உயர்நீதின்றம் தானாக முன்வந்து வழக்குத் தொடுத்தது. இந்த வழக்கில், முதுமலையில் யானைகள் முகாமில் யானைகளுக்கான மருத்துவ முகாமில் பொறுப்பு வகித்த கால்நடை பராமரிப்புத் துறை மருத்துவர் கலைவாணன் விருதுநகரில் காயமடைந்துள்ள லலிதா யானையை பார்வையிட்டு அறிக்கை தாக்கல் செய்யவும், மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கான பரிந்துரைகளை எடுத்துரைக்கவும் நீதிபதி சுவாமிநாதன் உத்தரவிட்டார்.