
ரிஷிகளால் உருவாக்கப்பட்டதே இந்தியா: கவர்னர் ரவி பேச்சு
இந்தியா ரிஷிகளாலும் வேதங்களாலும் உருவாக்கப்பட்டது; எந்த ராஜாவாலும் உருவாக்கப்படவில்லை என கவர்னர் ரவி கூறியுள்ளார்.
ராஜபாளையத்தில் உள்ள ஸ்ரீ ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த பாரதி வேத பாடசாலையில் வேதம் மற்றும் ஆச்சார்ய முறையை பயிலும் மாணவர்களுடன் கவர்னர் ரவி மகிழ்ச்சியுடன் உரையாடினார்.

அப்போது அவர் பேசியதாவது: உலக நாடுகள் பொருளாதார பிரச்னைகளை சந்தித்து வருகிறது. பல நாடுகள் பொருளாதாரத்தை முன்னேற்ற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்தியா கொரோனா பெருந்தொற்று காலத்தில் சரிவடைந்த பொருளாதாரத்தை மீட்டு எடுத்து தற்போது உலக அரங்கே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு பொருளாதாரத்தை மீட்டெடுத்து வருகிறது. சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத வகையில் தொழில்கள் தொடங்குவதில் நமது நாடு முன்னோடியாக உள்ளது.
ஆங்கிலேயேர் ஆட்சி காலத்தில் நமது நாடு பல தரப்பட்ட விஷயங்களின் அடிப்படையில் மாநிலங்களாக பிரிக்கப்பட்டது. நமது நாடு எந்த ராஜாவாளும் எந்த மகாராஜாவாலும் உருவாக்கப்பட்டது அல்ல. ரிஷிகளாலும் வேதங்களாலும் இந்தியா உருவாக்கப்பட்டது. அதன் மூலம் கிடைத்த அறிவு ஒளி தான் மக்களை வழி நடத்துகிறது. இது இந்தியாவுக்கு மட்டுமின்றி தமிழகத்திற்கும் பொருந்தும். இங்கு, நாயன்மார்கள், ஆழ்வார்கள், சங்கம் வளர்த்தவர்கள் உள்ளிட்ட ஆன்மீக தொண்டாட்டியவர்களின் வரலாறு ஆழமாக உள்ளது. இதுதான் பாரதம். இந்த அறிவு ஒளி தான் மற்ற நாடுகளுக்கு நம்மைப் பற்றிய வெளித் தோற்றத்தை கொடுக்கிறது.
நமது நாட்டில் பெண்களின் சக்தி ஆகப்பெரும் முன்னேற்றத்தை அடைந்து வருகிறது ஆயிரம் ஆண்களுக்கு 956 பெண்கள் என்ற நிலை மாறி இன்று ஆண் வாக்காளர்கள் விட பெண் வாக்காளர்கள் அதிகமாக இருக்கிறது என்று நிலை உருவாகியுள்ளது. இதற்கு காரணம் மத்திய அரசின் பெண் குழந்தைகள் மீதான அக்கறை கொண்ட திட்டங்கள். ராணுவத்தில் போர் விமானங்களை இயக்குவதிலும் பெண்கள் சாதனை புரிந்து வருகின்றனர். இவ்வாறு ரவி பேசினார்.