குரங்கணி காட்டுத் தீ குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும், இனி அனுமதி பெற்றுத்தான் மலையேற முடியும் என்றும் கூறினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
சேலத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வந்த அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து பதிலளித்தார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, செய்தியாளர்களிடம் பேசிய போது குரங்கணி பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 36 பேர் சிக்கிக் கொண்டனர் .10 பேர் காயமின்றி வீடு திரும்பும் நிலையில் உள்ளனர். 17 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மதுரையில் 12 பேர், தேனியில் 5 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுவோரை இன்று மாலை சந்திக்கவுள்ளேன். தீ காரணம் குறித்தும் விசாரணை நடத்தப்படும். இனி அனுமதி பெற்றுதான் மலை மேல் ஏற முடியும்.
தற்போது வெயில் அதிகம் இருப்பதால் தீ எளிதில் பற்றக்கூடும். இதனால் தீப் பற்றியிருக்கலாம். இருப்பினும் இந்த விபத்து குறித்து முழுமையாக விசாரிக்க உத்தரவிடப்படும்.
மலைப்பகுதியில் தீயை அணைப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. விரைந்து அணைக்க போர்க்கால நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.