சென்னை: பேட்டி கேட்டுச் சென்ற பெண் நிருபரை அழகாக உள்ளீர்கள் என அமைச்சர் வர்ணித்ததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.கட்சி தீர்மானம் பற்றி அமைச்சர் சி.விஜயபாஸ்கரிடம் பெண் நிருபர் கேள்வி கேட்டிருந்தார்.
நிருபர் கேள்விக்கு பதில் தராமல் அவரது கண்ணாடி அழகாக உள்ளது என அமைச்சர் வர்ணித்துள்ளார். பெண் நிருபரை வர்ணித்த சி.விஜயபாஸ்கருக்கு பத்திரிகையார்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் வெளியிட்டுள்ள கண்டனத்தில்,
பெண்கள் எவ்வளவு முன்னேறி வந்தாலும் அவர்களை உடலாக மட்டுமே பார்க்கும் அணுகுமுறையின் வெளிப்பாடாகவே அமைச்சரின் கருத்து இருக்கிறது.
தமிழகத்தின் ஆளுங்கட்சியான அதிமுகவின் தலைமையகத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் என்ன விவாதிக்கப்பட்டது என்ற கேள்விக்கு பதில் கூறாமல் சென்றிருக்கலாம். கருத்து கூற விருப்பமில்லை என்று கூறியிருக்கலாம்.
ஆனால் அதை விடுத்து ” உங்கள் கண்ணாடி அழகாக இருக்கிறது” என கூறுகிறார். ” அதை நான் தினமும் தான் அணிகிறேன். கூட்டத்தில் என்ன விவாதிக்கப்பட்டது ” என கேட்டதற்கு மீண்டும்” இன்று உங்களுக்கு கண்ணாடி அழகா இருக்கிறது” என்றும் மீண்டும் மீண்டும் கூறுகிறார்.
பணிரீதியாக கேள்வி கேட்கும் பெண் பத்திரிகையாளரிடம் இப்படி ஒரு பதிலை கூறுவதன் மூலம், அதை ஏற்று கொண்டு மறு கேள்வி கேட்க மாட்டார்கள் என்று எதிர்பார்க் கிறாரா அமைச்சர்..?
கட்சியின் முக்கியப் பிரதிநிதிகளில் ஒருவரான அமைச்சர் விஜயபாஸ்கர் நிரூபரின் கேள்விக்குப் நிருபரை அவமதிக்கும் விதமாக பதிலளித்தது கண்டனத்துக்குரியது. பெண் செய்தியாளரிடம் முறையற்ற வகையில் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர் பகிரங்க மன்னிப்பு கடிதம் வெளியிட வேண்டும்.
* தமிழ்நாடு பெண் ஊடகவியலாளர்கள் மையம்.