சென்னை: அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழகத்தின் சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக, சென்னை மற்றும் புறநகரில் விட்டு விட்டு மழை பெய்யும்.
சென்னை வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், தென்கிழக்கு அரபிக்கடலில் கர்நாடகா அருகே வளிமண்டல மேலடுக்கில் சுழற்சி நிலவுகிறது. இதனுடன் மேற்கு திசைக் காற்றும், வங்கக்கடலில் இருந்து வீசும் கிழக்கு திசைக் காற்றும் சந்திக்கும் பகுதி தென்இந்திய பகுதிகளில் நிலவுகிறது.
இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் வட தமிழகத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் வட தமிழகத்தில் பரவாகவும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலம் மழை பெய்துள்ளது. அதிக பட்சமாக திருப்பத்தூரில் 8 செ.மீ., ஓமலூரில் 7 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் வட மற்றும் தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும். ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் கோடை மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்யும் என்றார்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதும் உண்டா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, மீனவர்களுக்கு எந்த எச்சரிக்கையும் இல்லை; மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லலாம் என்று பாலசந்திரன் கூறினார்.