சென்னை: ஓலா, உபேர் கால் டாக்சி நிறுவனங்களுக்காக கார் ஓட்டுபவர்கள் ஞாயிற்றுக் கிழமை நள்ளிரவு முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக வெளியான செய்திக்கு கால் டாக்சி ஓட்டுநர்கள் கூட்டமைப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்தக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜாகிர் உசேன், சென்னை மற்றும் பெங்களூரில் நடைபெறும் வேலைநிறுத்தத்தில் கால் டாக்சி ஓட்டுநர்கள் யாரும் பங்கேற்கவில்லை என்றார். மேலும், வழக்கம்போல் கால் டாக்சிகள் இயக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
முன்னதாக, ஓலா, உபேர் நிறுவனங்களுக்கு சொந்தமான கார்கள், நிறுவனத்தில் பதிவு செய்த கார்கள் என இருவகையாகப் பிரித்து சவாரி வழங்குவதில் ஓலா, உபேர் நிறுவனங்கள் பாரபட்சம் காட்டுவதாக ஓட்டுனர்கள் புகார் கூறினர். எனவே ஓலா, உபேர் நிறுவனங்கள் சொந்தமாக கார் வைத்து சவாரி கொடுக்க கூடாது என்று வலியுறுத்தி ஞாயிறு நள்ளிரவு முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட ஓட்டுனர்கள் முடிவு செய்ததாக செய்தி வெளியானது.