நம்மை கதறக் கதற தவிக்க விட்டவர்களை இன்னும் 11 நாளில் பதற பதறப் தூங்க விடாமல் செய்வேன் என்று சசிகலா சபதம் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது!
கணவர் நடராஜன் காலமானதால், அவரது இறுதிச் சடங்குகளுக்காக பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து பரோலில் வந்தார் சசிகலா. அவரது பரோல் காலம் முடிவதற்கு இன்னும் 11 நாட்கள் உள்ளன. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் ஏற்கெனவே சிக்கல்களில் தவித்துக் கொண்டிருந்த சசிகலாவின் குடும்பம், இப்போது நடராஜன் மறைவை அடுத்து மேலும் சிக்கல்களைச் சந்தித்து வருகிறது.
நடராஜன் உடல் அடக்கம் முடிந்த அன்று இரவே குடும்பத்தில் குழப்பங்கள் விவாதங்கள் தொடங்கிவிட்டன என்கின்றனர். நடராஜனின் இறுதிச் சடங்கில், தற்போதைய ஆட்சியாளர்கள் எவரும் மருந்துக்குக் கூட எட்டிப் பார்க்காதது, சசிகலா குடும்பத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அதிகாரத்தில் உள்ளவர்களை அசைத்துப் பார்க்கும் விதமாக அடுத்து வரும் நாட்களை சசிகலா பயன்படுத்துவார் என்கின்றனர்.
நடராஜன் உடல், முள்ளிவாய்க்கால் முற்றத்தில் அடக்கம் செய்யப் பட்ட அன்று இரவு அமைதியாக இருந்தார் சசிகலா. ஆனால் மறுநாள் காலையில் இருந்தே சொத்துத் தகராறு தலை தூக்கிவிட்டது. நடராஜன் வாங்கிப் போட்ட சொத்துக்கள், அவற்றை முறைப்படி மாற்றுவது என, சொத்து விவகாரம் குறித்து தீவிர விவாதம் துவங்கியதாம்.
நடராசனின் பழைய பழகிய நண்பர்கள், தமிழ் ஆர்வலர்கள் பலர் ஆறுதல் சொல்ல வீடு தேடி வருகின்றனர். அவர்களிடம் சோகமான முகத்துடன் பேசி வருகிறார் சசிகலா. ஆனால், குடும்ப உறவுகளோ உச்ச கட்ட டென்ஷனை ஏற்படுத்தி வருகிறார்களாம். ஏற்கெனவே தினகரன் மீது ஒரு கண் வைத்திருக்கும் திவாகரன் தரப்பு, முன்னர் சசிகலா பரோலில் வந்த போது என்ன விதமான பேச்சுகளை எடுத்தனரோ அதைவிட ஒரு படி மேலே தான் பேசிக் கொண்டிருக்கின்றனர் தினகரன் குறித்து. காரணம், தனிக்கட்சி அரசியல் குறித்தும், அதனால் ஏற்பட்டுள்ள விளைவுகள் குறித்தும் அலசி ஆராய்கின்றனர். தினகரன் செயல்பாடுகளை சர்ச்சைக்குரிய விதத்தில் பேசி சசிகலாவின் மௌனத்தைக் கலைத்து விடுகின்றனராம்.
அரசியல் ரீதியாக தினகரன் மோடி எதிர்ப்பு பேசுவதும், அதனால் வெற்றி பெற்று விடலாம் என்று ஒருபுறம் கூறி வருவதும் பெரிதாக விவாதிக்கப் பட்டிருக்கிறது. பேச்சு ஒன்றும் செயல் ஒன்றுமாக தினகரன் இருக்கிறார் என்றும், எவரின் ஆலோசனைகளையும் கேட்பதில்லை என்றும், தங்களையும் ஒதுக்கி வைத்துவிட்டு செயல்படுகிறார் என்றும் புகார்களை கொட்டித் தீர்த்துள்ளனர்.
தினகரன் தனிக்கட்சி குறித்து எவரிடமும் விவாதிக்கவில்லை என்றும், அவரது செயல்பாடுகளால் தற்போது ஏதோ விசுவாசத்தில் ஒட்டிக் கொண்டிருப்பவர்கள் கூட ஓடி விடுவார்கள் என்றும் கூறியிருக்கின்றனர். அவர்கள் கூறியதை எல்லாம் சசிகலா அமைதியாகக் கேட்டுக் கொண்டாராம்.
சசிகலாவின் குடும்ப பஞ்சாயத்து இரண்டாகப் பிரிந்து கிடக்கிறது. இளவரசியின் வாரிசுகள் ஆதிக்கம் இருப்பதை திவாகரனும் ஜெயந்தனும் விரும்பவில்லை. தினகரன் தனிக்கட்சி தொடங்கிய போது, விவேக் முன்னணியில் நின்றார். ஆனால், ஜெயானந்த் கலந்து கொள்ளவில்லை. இவையெல்லாம் தீவிரமாக விவாதிக்கப் பட்டிருக்கின்றன.
இந்நிலையில், தன்னை சந்திக்க வரும் விசுவாசிகளிடம் தெளிவாக ஒன்றைச் சொல்லிக்கொண்டிருக்கிறாராம் சசிகலா! அடுத்து அதிகாரம் நம் கைக்குள் வரும். நம்மிடம் கும்பிடு போட்டு அடிபணிந்தவர்கள் இப்போது எதிராகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். எத்தனை நாட்கள் அப்படி பேசுவார்கள் என்று பார்க்கலாம். எப்படியும் நம்மிடம் வந்துதானே தீர வேண்டும். வருவார்கள். நான் நினைத்தால் ஒரே நாளில் மாற்றத்தைக் கொண்டு வந்து விட முடியும். அவர்கள் எத்தனை பேர் என்னை வந்து பார்க்கிறார்கள் என்று பாருங்கள்… பரோல் முடிவதற்குள் நான் யார் என்று காட்டாமல் விடமாட்டேன்…! என்று அழுத்தமாகப் பேசி வருகிறாராம்.
எனவே, சசிகலாவின் பரோல் காலம் முடிவதற்குள் அ.தி.மு.கவில் இருந்து கணிசமான எம்.எல்.ஏ.,க்கள் தன்னை வந்து பார்ப்பார்கள் என திடமாக நம்புகிறார் சசிகலா. பரோல் காலத்தில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்று சிறை நிபந்தனைகள் இருந்தாலும், ஆளும் அரசுத் தரப்பு திக் திக் என்று நடப்பவைகளை உன்னிப்புடன் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது.