.
காரைக்குடி: அதிமுக., எம்.பி. அன்வார் ராஜாவின் மகன் திருமணத்துக்கு எதிராக, பள்ளிவாசல் மீது பாதிக்கப்பட்ட பெண் போராட்டம் நடத்தினார். இதனால் ஜமாத்தார், அன்வர் ராஜாவின் மகனுக்கு நடக்கவிருந்த திருமணத்தை நிறுத்தி வைத்தனர்.
அதிமுக எம்பி., அன்வர் ராஜாவின் மகன் நாசர் மீது சென்னையைச் சேர்ந்த ரொபினா என்ற பெண், இரு தினங்களுக்கு முன் போலீஸில் புகார் ஒன்றைக் கொடுத்திருந்தார். அதில், அன்வர் ராஜாவின் மகன் நாசர் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி 3 வருடம் குடும்பம் நடத்திவிட்டு ஏமாற்றி விட்டதாகவும், தன்னிடம் இருந்து ரூ.50 லட்சம் பணம் மற்றும் ரூ.10 லட்சம் மதிப்புள்ள நகைகளை அடகு வைத்து கடன் கொடுத்திருப்பதாகவும் அந்தப் பெண் புகாரில் தெரிவித்திருந்தார்.
மேலும், தன்னை ஏமாற்றிவிட்டு, வேறொரு பெண்ணை நாசர் மார்ச் 25ஆம் தேதி திருமணம் செய்யவுள்ளதாகவும், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டால் நாசரும் அவரது தந்தை அன்வர் ராஜாவும் கொலை மிரட்டல் விடுக்கின்றனர் என்றும் அவர் அந்தப் புகாரில் கூறியிருந்தார்.
இதனிடையே, மார்ச் 25 இன்று காரைக்குடி காலேஜ் பள்ளிவாசலில் நாசருக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில், அங்கே சென்ற ரொபினா, நாசர் தன்னை ஏமாற்றியது குறித்து ஜமாத்தாரிடம் புகார் கூறி, அழுது புலம்பினார். சுவரில் முட்டி மோதிக் கொண்டு அழுது தீர்த்தார். சுவரில் முட்டி மோதி அழுத ரொபினா, பின்னர் பள்ளிவாசல் மண்டபத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
அவரது அழுகையும் கூக்குரலும் ஜமாத்தாரை வேறு விதமாக முடிவு எடுக்கத் தூண்டியது. இதையடுத்து ரொபினாவின் புகாரை ஏற்று நாசரின் திருமணத்தை ஜமாத் நிறுத்தி வைத்தது.
ஒரு முடிவுக்கு வராத நிலையில், காரைக்குடியில் எந்த பள்ளிவாசலிலும் நாசருக்கு திருமணத்தை நடத்தி வைப்பதில்லை என்று ஜமாத் முடிவு செய்தது. இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.