வேங்கை மகன் கூப்பிட்டாலும் போக மாட்டான், விருமாண்டி மகன் கூப்பிட்டாலும் போக மாட்டான் என்று ஈரோடு மண்டல தி.மு.க. மாநாடு தெறிக்க விடுகிறதாம்! அடுத்த தலைமுறைக்கு மேடைப்பேச்சுப் போட்டியை சத்தமில்லாமல் நடத்திக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின் என்று மாய்ந்து போகிறார்கள் திமுக., இளசுகள்!
ஏதோ பெரிய அரசியல் எழுச்சி எதிர்பார்ப்புடன் ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் அருகே இரண்டு நாள் மாநாட்டை நடத்திக் கொண்டிருக்கிறது தி.மு.க.
தேர்தல் அரசியலுக்கு இந்த மாநாடு அக்கட்சிக்கு கைகொடுக்கப் போவதாக ஸ்டாலின் நம்பிக் கொண்டு மாநாட்டை நடத்திக் கொண்டிருக்கிறார்.
இந்த மாநாட்டில் முக்கிய நிர்வாகிகள் சிலருக்கு சில தலைப்புகளைக் கொடுத்து பேச வைத்துள்ளார் ஸ்டாலின். அவற்றில், இளைஞர்கள் யார் அழைத்து வருவார்கள்? என்று ஒரு தலைப்பு. சென்னையைச் சேர்ந்த சாதிக் பேசியுள்ளார்.
வேங்கை மகன் அழைத்தால் தமிழக இளைஞர்கள் செல்வார்களா? மாட்டார்கள். விருமாண்டி மகன் அழைத்தார் செல்வார்களா? மாட்டார்கள். ஆனால் முத்தமிழறிஞர் கருணாநிதியின் மகனான எங்கள் தளபதி அழைத்தால் தமிழக இளைஞர்கள் படை திரட்டி வருவார்கள் இது உறுதி… என்று மாநாடுக்கு தொண்டர்களை அழைத்துக் கொண்டு வரும் ஓர் ஏஜெண்டாக தலை நிமிர்ந்தார்.
ஈரோட்டைச் சேர்ந்த சத்தியவதி, “தில்லியில் ஒரு நிர்பயா இறந்தததுக்கு தேசமே அந்த மகளை வாரி எடுத்துக் கொண்டு கண்ணீர் வடித்தது. ஆனால் எங்கள் தமிழ்நாட்டில் பசுந்தளிர் ஹாசினியில் ஆரம்பித்து எத்தனையோ சிறுமிகள், இளம்பெண்கள், பெண்கள் துள்ளத் துடிக்க வன்புணர்வுக்கும், கொலைக்கும் ஆளாகியிருக்கிறார்கள். ஆனால் யாரும் கண்டு கொள்வதில்லை. இந்த மாநிலத்தை ஆளும் அதிகார மையமும் கண்டு கொள்ளவில்லை. இதுதான் தமிழனின் நிலை.” என்று, திமுக.,வினர் திரண்டிருந்த மாநாட்டில் கண்ணீர் வடித்தார்.